இன்று கோடம்பாக்கத்திலிருந்து மைலாப்பூருக்கு 12 Bபஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் சென்னை நகர பஸ்கள் எங்கெங்கோ திரும்பி எந்தெந்த வழியில் எல்லாமோ செல்வதால், ஒரு பஸ் எந்த இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது அந்த வழித் தடத்தில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும்!
ஒரு நிறுத்தத்தில் ஒரு முதியவர் ஏறினார். நடத்துனரிடம் வட பழனிக்கு டிக்கட் கேட்டார். நடத்துனர், 'இது வடபழனிக்குப் போகவில்லை. அங்கிருந்து வருகிறது, பட்டினப்பாக்கத்துக்குப் போகிறது' என்றார்.
பெரியவர் உடனே 'அப்படியானால் பட்டினப்பாக்கத்துக்கே டிக்கட் கொடுங்கள்' என்றார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நடத்துனர் ஒரு கணம் திகைத்து விட்டு ஏதோ சொல்ல வாயெடுத்து, பிறகு 'சரி. உங்கள் இஷ்டம்' என்றார்.
பெரியவர் தொடர்ந்து, 'பட்டினப்பாக்கத்திலிருந்து வடபழனிக்கு பஸ் கிளம்பும் அல்லவா அதில் ஏறிக் கொள்கிறேன்' என்று விளக்கம் கொடுக்க, நடத்துனர், 'அவ்வளவு தூரம் ஏன் போய்த் திரும்ப வேண்டும்?' என்று ஆரம்பித்து விட்டு, 'சரி. கச்சேரி ரோடில் இறங்கிக் கொள்ளுங்கள். எதிர்சாரியில் உங்களுக்கு பஸ் வரும்' என்றார்.
நான் லஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது அவரும் இறங்கினார். அங்கிருந்து அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை.
நாம் போக வேண்டிய இடத்துக்கு எதிர்ப்புறமாகச் செல்லும் பஸ்ஸில் தவறுதலாக ஏறும் அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். எனக்குச் சில முறை ஏற்பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்து எதிர்ப்புறம் இருக்கும் பஸ் நிறுத்தத்துக்குச் சென்று சரியான பஸ்ஸில் ஏறுவதுதான் நம்மில் பெரும்பாலோர் செய்யும் காரியம்.
ஆனால் பல தடங்களில், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போகும்போது ஒரு பாதை, திரும்ப வரும்போது இன்னொரு பாதை என்று இருப்பதால் இது இவ்வளவு சுலபமான காரியமாக இருப்பதில்லை.
அதனால்தான் இந்தப் பெரியவர் இவ்வாறு செய்தாரோ?