Sunday, August 30, 2026

40. நான் ரசித்த சிறுகதைகள்

நான் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படித்திருப்பேன். பலவற்றை ரசித்திருக்கிறேன். என் மனதில் ஆழமாகப் பதிந்த சில சிறுகதைகளைப் பற்றி இங்கே கூற விழைகிறேன்.

இவை தமிழின் தலைசிறந்த 10 சிறுகதைகள் போன்ற வகைப்பாடுகளுக்குள் வரக் கூடியவை அல்ல. இவற்றை எழுதியவர்களையும், என்னையும் தவிர வேறு யாரும் இந்தக் கதைகளை நினைவில் வைத்திருக்காமல் கூட இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால், என் மனதில் ஆழமாகப் பதிந்தவை இவை.

இந்தக் கதைகளைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, அவற்றின் சிறப்பாக நான் உணர்ந்தவற்றை விளக்க முயல்கிறேன். இவை என்னைக் கவர்ந்தது போல், இந்தப் பதிவைப் படிப்பவர்களைக் கவராமல் போகலாம். என்னால் இயன்றவரை, இந்தக் கதைகளில் நான் கண்ட சிறப்புகளை எடுத்துச் சொல்ல முயல்கிறேன்.

1. எப்போதும் உள்ளவர்கள் (கல்கி): 

அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற கதையா, அல்லது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் ஒன்றா என்று சரியாக நினைவில்லை. 70-களின் மத்தியில் வெளிவந்ததாக நினைவு. ஆசிரியரின் பெயர் நினைவில்லை. பிரபலமானவர் அல்ல.

உலகில் பல நாடுகளில் சர்வாதிகாரிகள் செய்த கொடுமைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இன்றைய உலகிலும், சர்வாதிகார ஆட்சி சில நாடுகளில் நடந்துதான் வருகிறது. சர்வாதிகார நாடுகளில், ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், கொடுமைகளையும் மீறி, சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கத்தான் செய்யும். 

அப்படி ஒரு சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடியவர்களைக் கைது செய்து விசாரிக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அந்த நாட்டு அதிபரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் வாழ்க என்று கூறினால், அவர்களை மன்னித்து விட்டு விடுவதாகவும், அப்படிக் கூறா விட்டால், அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவாரகள் என்றும் காவல் அதிகாரி கூறுகிறார். 

சிலர் உடனேயும். வேறு சிலர் சிறிது தயக்கத்துக்குப் பிறகும் அதிபர் வாழ்க என்று கூறி, விடுதலை பெறுகிறார்கள். ஒருவன் மட்டும் அவ்வாறு கூற மறுக்கிறான். அவன் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

காவல் அதிகாரியின் அருகில் இருக்கும் இன்னொரு அதிகாரி, "சின்னப் பையன். அநியாயமாக உயிரை விட்டு விட்டானே! அதிபர் வாழ்க என்று சொல்லி இருந்தால், உயிர் பிழைத்திருக்கலாமே!" என்று வருத்ததுடன் கூறுகிறார்.

"இப்படிப்பட்ட சிலர் எப்போதுமே இருக்கத்தான் செய்வார்கள். என்ன செய்வது!' " என்கிறார் காவல் அதிகாரி, அலட்சியத்துடன்.

அவ்வளவுதான் கதை! அவ்வளவுதானா என்கிறீர்களா? அவ்வளவுதான்!

இந்தக் கதையின் தலைப்பு மிகவும் அற்புதமாக அமைந்திருக்கிறது. இந்தக் கதை ஒரு போராளியின் கொள்கைப் பிடிப்பைக் காட்டுவதாகச் சிலருக்குத் தோன்றலாம். 

ஆனால் எனக்கு, கதையின் தலைப்பும், காவல் அதிகாரி இறுதியாகச் சொன்ன வார்த்தைகளும், எத்தகைய அடக்குமுறைகள் இருந்தாலும், சுதந்திரத்துக்காவும், அடக்குமுறைக்கு எதிராகவும் போராடக் கூடிய சிலர் இருப்பார்கள் என்ற சிந்தனை நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. 

'One man with courage makes a majority' என்று ஒரு பொன்மொழி இருக்கிறது. இதுபோல், போராட ஒருவர் இருந்தாலும் போதும், சர்வாதிகாரத்தையும், அடக்குமுறையையும் எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தக் கதை, குறிப்பாகக் கதையின் தலைப்பு கொடுக்கிறது.

2. அப்படிப் பாக்காதேடா, தம்பி! (தினமணி கதிர்)

இதுவும் 70-களில் வெளி வந்த ஒரு சிறுகதைதான். ஆசிரியரின் பெயர் நினைவில்லை.

ஒரு வளையல் வியாபரி. வீடு வீடாகச் சென்று வளை விற்பவர். அவர் ஒரு வீட்டின் முன் பகுதியில் அமர்ந்து அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு வளைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்களுள் ஒருத்தியின் மகளான ஒரு சிறுமியும் அங்கே இருக்கிறாள். வளை வியாபாரிக்கு உதவியாக ஒரு பையன் அவருடன் வந்திருக்கிறான். 

அவர் பெண்களுக்கு வளைகளைக் காட்டிக் கொண்டிருக்கும்போது, அந்தப் பையன், அந்தச் சிறுமியை அடிக்கடி உற்றுப் பார்க்கிறான். அதை கவனித்த அந்த வியாபாரி, அவனுக்கு மட்டும் கேட்கும்படியாக, 'அப்படிப் பாக்காதேடா, தம்பி!' என்று சொல்கிறார். 

காலம் ஓடி விடுகிறது. அந்தச் சிறுமி வளர்ந்து திருமணமாகிப் புகுந்த வீடு செல்கிறாள். அவள் தன் மகளுடன் பிறந்தகம் வருகிறாள். 

அவர்கள் வீட்டுக்கு ஒரு வளையல் வியாபாரி வருகிறார். அவர் வேறு யாருமல்ல, முன்பு அந்த வீட்டுக்கு வந்த வளையல் வியாபாரிக்கு உதவியாக வந்த அந்தப் பையன்தான்! அவனுக்கு உதவியாக ஒரு பையன் அவனுடன் வருகிறான். 

வளையல் வியாபாரி அந்தப் பெண்ணுக்கு வளையல்களைக் காட்டும்போது, அந்தச் சிறுவன் அந்தப் பெண்மணியின் மகளான சிறுமியை உற்றுப் பார்ப்பதை கவனித்த வளையல் வியாபாரி, அவனிடம் ரகசியமாக, 'அப்படிப் பாக்காதேடா, தம்பி!' என்கிறான்.

இத்துடன் கதை முடிகிறது. 

இந்தக் கதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் பல.

ஒரே மாதிரியான செய்திகளும், அறிவுரைகளும் எப்படித் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை இந்தக் கதை யதார்த்தமாகக் காட்டுகிறது. 

வளையல் வியாபாரியிடம் உதவியாளனாக இருந்தவன் வளையல் வியாபாரியாக ஆனது ஒருவிதத் திருப்தியை அளித்தாலும், சமூகத்தில் கீழ்ப்படி நிலைகளில் உள்ளவர்களால் குறிப்பிட்ட சில எல்லைகளைத் தாண்டி முன்னேற முடியவில்லையே என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது. 

இந்த உலகில் பல நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடப்பவையாகவே இருக்கின்றனவே என்ற ஒரு சலிப்பையும் இது அளிக்கிறது.

3. சராசரிகள் (கல்கி)

70-களில் வெளியான கதை. ஆசிரியரின் பெயர் நினைவில்லை.

ஒரு கிராமப் பஞ்சாயத்தில் உதவியாளராகப் பணி செய்பவர், மாலை வேலை நேரம் முடிந்ததும், அலுவலகத்தைப் பூட்டி விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் சைக்கிளில் வருகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் எவ்வளவு பெருமாள் கோவில்கள், எத்தனை சிவன் கோவில்கள் உள்ளன என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஒரு கேள்வி எழுப்பி இருப்பதாகவும், இந்த விவரங்களைச் சேகரித்து அனுப்புமாறு தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட, அவர் தாசில்தார்களுக்கும், தாசில்தார்கள் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தவிட்டிருப்பதாகவும், இந்தத் தகவல்கள் தனக்கு அடுத்த நாளுக்குள் வேண்டும் என்று தாசில்தார் கேட்டிருப்பதால், தான் எல்லா பஞ்சாயத்து அலுவலகங்களுக்கும் நேரில் சென்று தகவலைத் தெரிவித்து வருவதாகவும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கூறுகிறார். அந்த பஞ்சாயத்தின் கீழ் வரும் ஊர்களில் உள்ள பெருமாள், சிவன் கோவில்களின் எண்ணிக்கையை மறுநாள் காலை தன் அலுவலகத்தில் வந்து அளிக்கும்படி கூறி விட்டு அவர் சொல்கிறார்.

அந்த உதவியாளர் விவரங்களைச் சேகரித்து, மறுநாள் காலை ரெவின்யூ இன்ஸ்பெகடர் அலுவலகத்தில் அளிக்கிறார். 

குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லா பஞ்சாயத்து அலுவலகங்களிலிருந்தும் விவரங்கள் வராததால், ரெவின்யூ இன்ஸ்பெக்டர், கொடுக்கப்பட்ட விவரங்களின் சராசரியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில், எல்லா பஞ்சாயத்துக்களுமான மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு, தாசில்தாருக்கு அளிக்கிறார். 

அதேபோல், தாசில்தாருக்கும் எல்லா ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களிடமிருந்தும் விவரம் வராத்தால், அவரும் சராசரி அடிப்படையில் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிடுகிறார். சில தாசில்தார்களிடமிருந்து தகவல் வராத்தால், மாவட்ட ஆட்சியரும் இவ்வாறே கணக்கிடுகிறார். சில மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து விவரங்கள் வராததால், தலைமைச் செயலாளரும் சராசரி அடிப்படையில் மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டு அமைச்சரிடம் அளிக்கிறார்.

கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும்போது, கேள்வி கேட்ட உறுப்பினர் அவைக்கு வரவில்லை. அவர் சட்டமன்ற விடுதியில் அமர்ந்து, தனக்கு வேண்டியவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கதையின் தலைப்பு 'சராசரிகள்' நமக்குப் பல செய்திகளச் சொல்கிறது. சராசரி என்ற சொல், பொதுவாக, 'போதுமான அளவு இல்லாத (not good enough, not satisfactory)'  என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. 

எல்லா நிலைகளிலும்  எப்படி சராசரி மனிதர்களே கோலோச்சுகிறார்கள் என்பதை இந்தக் கதையும், அதன் தலைப்பும் அழகாக விளக்குகின்றன. 'சராசரி' என்ற சொல், கேள்வி கேட்ட உறுப்பினருக்கும் பொருந்தும். முதலில் அவர் கேட்ட தகவல் பயனுள்ளதல்ல. ஆனால் இந்தத் தகவலைச் சேகரிக்கப் பலர் தங்கள் உழைப்பையும், நேரத்தையும் செலவழிக்கின்றனர். ஆனால் கேள்வி கேட்டவரிடம்,  தான் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.

இது போன்ற சராசரிகளிடம் சிக்கிக் கொண்டு இந்த உலகம் எவ்வாறு திண்டாடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

4. அலிசா (ஆங்கிலம்):

 Alexander Dumas-இன் 'Bird of fate and other stories' என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற இந்தச் சிறுகதையை இங்கே நான் சேர்க்கக் காரணம், இந்தச் சிறுகதை ஒரு திருக்குறளை விளக்குவதாக அமைந்திருக்கிறது என்பதால்தான்.

இந்தக் கதையின் தலைப்பு எனக்கு நினைவில்லை. இது அலிசா என்ற சிறுமியைப் பற்றியது என்பதால், 'அலிசா' என்பதையே இந்தச் சிறுகதையின் தலைப்பாக்க் குறிப்பிட்டிருக்கிறேன்.

அலிசா ஒரு விறகு வெட்டியின் மகள். அவள் தந்தை விறகு வெட்டக் காட்டுக்குச் செல்லும்போது, அவளும் சில சமயம் உடன் செல்வது உண்டு. 

ஒருநாள் அவள் காட்டுக்குள் தனியாகச் சென்றபோது, அங்கே ஒரு சிங்கத்தைப் பார்க்கிறாள். அந்தச் சிங்கம் அவளுடன் நட்புக் கொண்டு அவளைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு ,அவளை விட்டில் கொண்டு விடுகிறது. அவள் சிங்கத்தின் மீது வருவதை அக்கம் பக்கத்தினர் வியப்புடன் பார்க்கின்றனர். 

சிங்கம் அவளை வீட்டில் விட்டு விட்டுத் திரும்பியதும், அவள் தோழிகள் ஓடி வந்து அவளிடம், "சிங்கத்தின் மீது சவாரி செய்தது எப்படி இருந்தது?' என்று கேட்கின்றனர். "சவாரி நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சிங்கத்தின் வாயிலிருந்து அடித்த நெடியைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை" என்றாள் அலிசா.

சற்றுத் தொலைவே சென்றிருந்த சிங்கத்தின் காதில் இது கேட்டிருக்கும், போலும். அதன் கர்ஜனை தொலைவிலிருந்து பெரிதாகக் கேட்டது. தான் கூறியது சிங்கத்தின் காதில் விழுந்து, அது கோபம் கொண்டிருக்குமோ என்று அஞ்சினாள் அலிசா. 

சில நாட்களுக்குப் பிறகு, அலிசா காட்டுக்குள் போனாள். அங்கே சிங்கம் இருந்தது. அலிசா அச்சத்துடன் தள்ளி நின்றாள். அங்கே முதல்நாள் அலிசாவின் தந்தை விட்டுச் சென்றிருந்த கோடரி இருந்தது.

சிங்கம் அலிசாவைப் பார்த்து, "அந்தக் கோடரியால் என் தலையில் அடி!" என்றது.

அலிசா அச்சத்துடன் பேசாமல் நின்றாள். 

'இப்போது அதை எடுத்து என் தலையில் அடிக்கப் போகிறாயா, இல்லையா?" என்று கோபமாக்க் கேட்டது சிங்கம்.

அலிசா பயந்து கொண்டே, கோடரியை எடுத்து சங்கத்தின் தலையில் அடித்தாள். அவள் மெல்ல அடித்தாலும், கோடரியின் கூரான முனை சிங்கத்தின் தலையில் பட்டு ரத்தம் கசிய ஆரம்பித்தது. அலிசா பயந்து கொண்டு வீட்டுக்கு ஓடி விட்டாள்.

ஒரு மாதம் கழித்து அலிசா மீண்டும் காட்டுக்குச் சென்றாள். அங்கே சிங்கம் இருந்தது. 

அலிசாவைப் பார்த்ததும், சிங்கம், "என் தலையில் பட்ட காயம் ஆறி விட்டதா என்று பார்"  என்று தன் தலையைத் தாழ்த்திக் காட்டியது.

வெட்டுக் காயம் ஆறி, அதன் வடு, தலையில் நடு வகிடு எடுத்து போல், ஒரு கோடு போல் தெரிந்தது. ('சிங்கத்தின் பிடரியில் கோடு மோல்தெரிவது இந்த வடுதான்' என்று ஆசிரியர் எழுதி இருப்பது, 'அணிலின் முதுகில் தெரியும் கோடுகள் அணை கட்ட மணல் எடுத்து வந்து உதவிய அணிலின் முதுகில் ராமர் தடவிக் கொடுத்ததால் ஏற்பட்டவை' என்று நம் நாட்டில் கூறப்படும் கதையை நினைவுபடுத்துகிறது.)

"ஆறி விட்டது" என்றாள் அலிசா, பயந்து கொண்டே.

"ஆனால் என் வாயிலிருந்து வரும் நெடி பற்றி நீ கூறயது என் மனதில் ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறவில்லையே, அலிசா!" என்றது சிங்கம். 

தன் மகளைத் தேடிக் காட்டுக்கு வந்த விறகுவெட்டியால் அங்கே சில எலும்புத் துண்டுகளைத்தான் காண முடிந்தது.

இந்தக் கதை,


'தீயினால் சுட்ட உண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'

என்ற குறளுக்கு விளக்கமாக அமைந்திருப்பது போல் தோன்றுகிறது அல்லவா?





Thursday, December 10, 2020

39. மதிப்பு அறியப்படாத வைரம் - ராஜாஜி

இன்று டிசம்பர் 10ஆம் தேதி ஐ.நா மனித உரிமைகள் தினம். மனித உரிமைகளுக்காகப் போராடிய ராஜாஜியின் பிறந்த தினமும் இன்றுதான் என்பது இயற்கை உருவாக்கிய அற்புதமான ஒற்றுமைகளில் ஒன்று. 

இதில் என்ன வேடிக்கை என்றால், பல வருடங்களாக ராஜாஜியின் பிறந்த நாள் டிசம்பர் 8 என்று கருதப்பட்டு, அவரிடம் அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் ஆர்வம் இல்லாதவரான ராஜாஜி இந்தத் தவற்றைத் திருத்த முயலவில்லை. அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்புதான் அவர் பிறந்த தினம் டிசம்பர் 8 அல்ல, டிசம்பர் 10 என்று யாராலோ கண்டறியப்பட்டு, டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படத் துவங்கியது.

 25.12.1972 இல் மறைந்த ராஜாஜி தன் வாழ்நாள் முழுவதும் தான் நம்பிய கொள்கைகளுக்காகவும், நலக்கோட்பாடுகளுக்காகவும் போராடியவர். 

அதனால்தானோ என்னவோ, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராஜ்மோகன் காந்தி (இவர் காந்திஜியின் புதல்வர் தேவதாஸ் காந்தி, ராஜாஜியின் புதல்வி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ஆகியோரின் புதல்வர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.) அந்த நூலுக்கு A Warrior from the South - The Rajaji Story (தெற்கிலிருந்து ஒரு போர் வீரர் - ராஜாஜியின் கதை) என்று பெயர் வைத்தார்.

ராஜாஜியின் அரசியல், சமுதாயப் பார்வை காந்திஜி அரசியலுக்கு வருவதற்கு முன்பே உருப்பெற்று விட்டது. தன் இளம் வயதிலிருந்தே தீண்டாமை, குடிப்பழக்கம் ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போரிடுவதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு விட்டார் அவர்.

சேலம் நகராட்சியின் தலைவராக (அந்நாளில் இது ஒரு கௌரவாமான, ஊதியம் இல்லாத பணி) இருந்தபோதே, அந்தணர்கள் வாழ்ந்த பகுதியில் தண்ணீர் திறந்து விட ஒரு தலித் நியமிக்கப்பட்டபோது, அந்தணர்களின் எதிர்ப்பை மீறி, அந்த தலித் ஊழியரைப் பணியில் தொடர வைத்தவர் ராஜாஜி.

உயர் ஜாதி இந்துக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, 200 உயர் ஜாதி மாணவர்கள் படித்து வந்த சேலம் நகராட்சிப் பள்ளியில் இரண்டு தலித் சிறுவர்களைச் சேர்த்துக் கொள்ள வைத்து, அவர்களுடைய பள்ளிக் கட்டணத்தைத் தானே கட்டி வந்தார் ராஜாஜி. 

சநாதனர்களின் எதிர்ப்பை மீறி, ஒரு விதவைக்கு மறு திருமணத்தையும் நடத்தி வைத்தார். இவை நடந்தது 1910ஆம் ஆண்டு வாக்கில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சுதந்திரப் போராட்டதின்போது ஒரு முறை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டதில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆந்திராவில் உள்ள திருச்சானூர் கோவிலுக்குள் நுழைந்து விட்டார் என்ற குற்றத்துக்காக(!), ஒரு தலித்தின் மீது வழக்குப் போடப்பட்டு, அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

ராஜாஜியின் தீண்டாமை எதிர்ப்பு மனநிலையை அறிந்திருந்த சித்தூரைச் சேர்ந்த ஒரு நண்பர், அந்த தலித்துக்கு ஆதரவாக வாதிடும்படி ராஜாஜியைக் கேட்டுக் கொண்டார்.

நீதிமன்றப் புறக்கணிப்பிலிருந்த ராஜாஜி, சித்தூர் நீதிமன்றத்துக்குச் சென்று வக்கீலாக இல்லாமல், ஒரு தனி மனிதராக வாதாட நீதிபதியின் அனுமதியைப் பெற்று வாதிட்டு, அந்த தலித்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்! 

இதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள சரித்தர இயலாளர் ராமச்சந்திர குஹா, "இப்படிப்பட்ட மனநிலை இருந்ததால்தான், ராஜாஜியால் வேங்கடமலையான் மீது 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடல் எழுத முடிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குறை என்று சொல்லும்போது, ராஜாஜியைக் குறை கூறிப் பலர் பேசி வந்திருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒரு புறம், பெரியாரிஸ்டுகள் ராஜாஜியை விமரிசனம் செய்து வந்திருக்கிறார்கள். 

மறுபுறம், போலி தேசிய வாதிகள், 'சோ'வைப் போன்ற "மேதாவிகள்" என்று, பல்வேறு தரப்பினரும் பல்வேறு குற்றங்களையும், குறைகளையும் கூறி வந்திருக்கிறார்கள்.

ராஜாஜி இவை பற்றிக் கவலைப்பட மாட்டார். ஆனால், ராஜாஜியைப் புரிந்து கொண்டவர்களுக்கு இவை மன வருத்தத்தை ஏற்படுத்துவது இயல்புதான். ஆயினும், இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டுமா என்றால், வேண்டாம்! ஏனென்று சொல்கிறேன்.

1971ஆம் ஆண்டு,  சோவியத் யூனியனுடன் இந்தியா செய்து கொண்ட ராணுவ ஒப்பந்தத்தை சுதந்திராக் கட்சி எதிர்த்தது. ஆனால், ராஜாஜி அதை ஆதரித்தார். 

இதைப் பற்றிய விவாதம் சுதந்திராக் கட்சியின் செயற்குழுவில் நடந்தபோது (ராஜாஜி அதில் கலந்து கொள்ளவில்லை), ராஜாஜி ஏன் இப்படிச் சொல்லி இருப்பார் என்று சிலர் ராஜாஜியை ஆதரித்துப் பேச முற்பட்டபோது, கட்சியின் தலைவரான பிலூ மோடி ஒரே வரியில் அனைவரையும் அடக்கி விட்டார். "RAJAJI NEEDS NO DEFENSE!" என்பதுதான் அவர் சொன்னது! ராஜாஜிக்கு யாரும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை (ஏனெனில் அது அவசியமில்லை!) 

பெரியாரின் ஆதரவாளர்கள் இன்றும் ராஜாஜியைக் குறை கூறிப் பேசி வரும் நிலையில், பெரியார் ஆதரவாளரான திரு. வெ.மதிமாறன் குறிப்பிட்டுக் கூறிய ஒரு நல்ல விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சுய மரியாதைத் திருமணங்களை அண்ணாதான் சட்டமாக்கினார் என்பதை நாம் அறிவோம். நீதிக்கட்சியின் ஆட்சியின்போதே, இதற்கான முயற்சி துவங்கப்பட்டது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. 

பிறகு, ராஜாஜி தன் ஆட்சிக் காலத்தில் இதைச் சட்டமாக்க முயன்றார். ஆனால், அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. 

அவருக்குப் பின் வந்த காமராஜ் இந்த முயற்சியை மேற்கொள்ளவே இல்லை. இதை மதிமாறன் அவர்கள் ஒரு காணொளியில் குறிப்பிட்டிருக்கிறார். 

ராஜாஜியைப் பழமைவாதி என்று நம்புபவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

ராஜாஜியை விமரிசனம் செய்பவராக இருந்தாலும், ராஜாஜி பற்றிய இந்த உண்மையைப் பகிர்ந்து கொண்ட மதிமாறன் பாராட்டுக்குரியவர்.

காந்திஜி இந்தியாவுக்கு வரும் முன்பே, சுதந்திரப் போராட்டதில் ஈடுபாடு கொண்டிருந்த ராஜாஜி, திலகரின் தீவிரவாதக் கொள்கையின் தீவிர ஆதரவாளராக இருந்து, சேலத்தில் அவருக்கு ஆதரவு திரட்டினார்.

தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் போராட்டங்களை அறிந்ததிலிருந்தே, காந்திஜியிடம் ஈடுபாடு கொள்ளத் துவங்கினார் ராஜாஜி.

காந்திஜியின் ஐந்து தளபதிகள் என்று அழைக்கப்பட்ட நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, மௌலானா ஆசாத் ஆகியோரில், காந்திஜியை முதலில் இனம் கண்டவர் ராஜாஜிதான். 

நேருவும், சர்தார் பட்டேலும் முதலில் காந்திஜியைப் பார்த்தபோது, அவரைப் பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே, அவரை அடையாளம் கண்டு, அவர் வருகையை எதிர் நோக்கி இருந்தார் ராஜாஜி.

காந்திஜி இந்தியாவுக்கு வந்த சிறிது காலத்துக்குப் பிறகு, முதன்முறையாகச் சென்னைக்கு வந்தபோது, 'ஹிந்து' பத்திரிகையின் உரிமையாளாரன கஸ்தூரிரங்க ஐயங்கார் வீட்டில் தங்கினார். 

இப்போது சோழா ஹோட்டலாக இருக்கும் அந்த வீட்டில், அப்போது ராஜாஜி வாடகைக்குக் குடி இருந்தார். (மாத வாடகை ரூ. 230. சிறிது காலத்துக்குப் பிறகு, அவ்வளவு வாடகை கொடுக்கத் தனக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்பதால், ராஜாஜி வேறு ஒரு சிறிய வீட்டுக்குக் குடி போய் விட்டார்!) 

எனவே, காந்திஜி சென்னையில் தங்கி இருந்தது ராஜாஜியின் விருந்தினராகத்தான்! காந்திஜிக்கு முதலில் அது தெரியாது. தன்னை கவனித்துக் கொண்ட ராஜாஜியைப் பற்றி அவர் அறிந்திருக்கவும் இல்லை. 

காந்திஜியின் செயலரான மகாதேவ தேசாய்தான் ராஜாஜியைப் பற்றித் தெரிந்து கொண்டு, 'இவரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று காந்திஜியிடம் கூறினார். அதற்குப் பிறகே, காந்திஜியின் கவனத்துக்கு வந்த ராஜாஜி, இறுதி வரை காந்திஜியின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக இருந்தார்.

ராஜாஜியுடன் காந்திஜி இருந்த அந்த சில நாட்களில், இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்தார் காந்திஜி. முதலாவது, சத்தியாக்கிரகம் என்ற அஹிம்சைப் போராட்டம். ராஜாஜியின் வீட்டில் தங்கி இருந்தபோது, தன் சிந்தையில் தோன்றிய இந்தக் கருத்தை, முதன் முதலில் ராஜாஜியிடம்தான் பகிர்ந்து கொண்டார் காந்திஜி. ராஜாஜி இதை உற்சாகமாக வரவேற்றுச் சென்னையில் இதைத் தானே நிகழ்த்தியும் காட்டினார்.

இரண்டாவது, உடுக்க உடை கூட இல்லாத இந்த நாட்டின் ஏழைகளின் நிலையைக் கருத்தில் கொண்டு, தான் அரை வேட்டியை மட்டுமே ஆடையாக உடுத்துவது என்று காந்திஜி முடிவெடுத்தது ராஜாஜியுடன் அவர் ரயிலில் மதுரைக்குச் சென்றபோதுதான். இதையும் காந்திஜி முதலில் பகிர்ந்து கொண்டது ராஜாஜியிடம்தான்!

காந்திஜி ராஜாஜியின் இல்லத்தில் தங்கி இருந்தபோது அவரைப் பார்க்க வந்த பாரதியாரை, இவர் நம் தேசியக் கவி என்று பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தார் ராஜாஜி.

ராஜாஜியைத் தன் 'மனச்சாட்சியின் காவலர்' (Conscience Keeper) என்று குறிப்பிடுவார் காந்திஜி. காரணம், விருப்பு வெறுப்பின்றித் தன் கருத்தைத் தெரிவிப்பவர் ராஜாஜி. இதனால், காந்திஜியுடன் அவர் சில முறை முரண்பட்டுச் சிறிது காலம் இருவரும் பிரிந்து கூட இருந்திருக்கின்றனர்.

1942ஆம் ஆண்டு, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை காந்திஜி துவக்கியபோது, ராஜாஜி அதை ஆதரிக்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் ஈடுபட்டிருந்தபோது, பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போரிடுவது சரியில்லை என்று அவர் நினைத்தார். 

உலகின் மிப் பெரிய எதிரிகளான ஹிட்லரையும், முசோலினியையும் முறியடிப்பதுதான் அன்றைய நிலையில் முக்கியம் என்பது ராஜாஜியின் கருத்து.

சிறிது காலம் காந்திஜியிடமிருந்து விலகி இருந்த பிறகு, மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றினார் ராஜாஜி.

ஜின்னா பிரிவினை வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தபோது, பிரிவினை தவிர்க்க முடியாதாது என்பதை முதலில் உணர்ந்தவர் ராஜாஜிதான். 

காந்திஜி துவக்கத்தில் பிரிவினையை எதிர்த்ததால், இருவருக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

அப்போது காங்கிரஸ்காரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ராஜாஜி. 'கருப்புக் கண்ணாடி ராஜகோபாலாச்சாரிக்குக் களிமண்ணு மூளை' போன்ற தரக்குறைவான விமரிசனங்களெல்லாம் செய்யப்பட்டன. 

பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் முகத்தில் தார் வீசப்பட்டது. முகத்தில் வழிந்த தாரைக் கையால் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து பேசினார் ராஜாஜி.

தன் கருத்துக்களைத் தெரிவிப்பதில் உறுதியாக இருந்தவர் ராஜாஜி. மற்றவர்கள் தவறாக நினைப்பார்களே என்றோ, மக்களின் பொதுவான விருப்பத்துக்கு எதிராகப் பேசினால் தனக்கு அவப்பெயர் ஏற்படுமே என்றி அவர் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. 

BCG தடுப்பூசி, குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றை எதிர்த்திருக்கிறார் அவர். தன் கருத்துக்களைக் காரணங்களோடு விளக்குவார். மற்றவர்களுக்கு அது பிடிக்காவிட்டால், அது பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.

பொதுவாக, எல்லோரும் பதவிகளில் கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் பயணம் செய்வார்கள். ஆனால், ராஜாஜி வகித்த பதவிகள் தலைகீழ் வரிசையில் இருந்திருக்கின்றன. 

சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு மத்திய அமைச்சரவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தார். (கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த நேருவுக்கும், பட்டேலுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு, அவர்களிடையே ஒருமித்த செயல்பாட்டை உருவாக்கும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது). 

பிறகு, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். (காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல சிறு கட்சிகளுடன் ஆதரவோடுதான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டி இருந்தது. அவர்கள் ஆதரவைப் பெற்று, நிலையான ஆட்சியை அமைப்பது ராஜாஜியால்தான் முடியும் என்பதால், முதல்வர் பதவியை ஏற்றுக் கட்சியை வழி நடத்தும்படி காங்கிரஸ் கட்சி அவரைக் கேட்டுக் கொண்டதால்தான், அவர் முதல்வர் பதவியை ஏற்றார்.)

அவருக்குப் பதவி ஆசை என்று அவரைப் பிடிக்காதவர்கள் இதைக் கொச்சைப் படுத்துவார்கள். உண்மையில், அவர் பதவிகள் மீது பற்றற்றவர் என்பதுதான் இதற்குக் காரணம். 

பதவியை மக்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பை வழங்கும் ஒரு சாதனமாக அவர் நினைத்ததால்தான், தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை அவர் ஏற்றார். சீதையின் தந்தை ஜனகர், தன் அரச பதவியின் மீது பற்றில்லாமல் இருந்தவர் என்று கூறுவார்கள். ராமாயணம் எழுதிய இந்த அறிஞர், ஜனகரைப் பின்பற்றி வாழ்ந்தார் என்பதுதான் உண்மை.

ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, உபநிஷத்துக்கள், திருக்குறள், ஆழ்வார்களின் பாசுரங்கள், ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம், சாக்ரடீஸ் போன்ற தலைப்புகளில் பல நூல்களை அவர் எழுதி இருக்கிறார். 

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை முழுமையாகவும், இவ்வளவு எளிமையாகவும் வேறு யாரும் எழுதியதில்லை என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.

அவர் ராமனிடம் பக்தி கொண்டவர். 'இலங்கேஸ்வரன்' என்ற தன் நாடகத்தைப் பார்க்க வருமாறு ஆர் எஸ் மனோகர் ராஜாஜியை அழைத்தபோது, "ராவணனை நல்லவனாகக் காட்டும் நாடகத்தை என்னால் பார்க்க முடியாது" என்று கூறி விட்டார். 

ஆனால், தான் எழுதிய ராமயணத்தில், வாலி வதம் பற்றி எழுதும்போது, "ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரிதான் என்பதற்குப் பல சமாதானங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இதைச் சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று உறுதியாகச் சொல்லி இருப்பார்.

 'வாலிவதம்' என்ற தனிக் கட்டுரையில் ராமர் செய்தது தவறு என்று கடுமையாக விமரிசித்து எழுதி இருப்பார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் அதைப் படித்ததில்லை. 

ராஜாஜியைப் பொருத்தவரை, ஒன்று தவறு என்றால் தவறுதான். தவறான ஒன்றை அவர் நியாயப்படுத்த மாட்டார்.

1967ஆம் ஆண்டு தேர்தல்களைப் பற்றி ஒரு ஐரோப்பியர் எழுதிய ஒரு நூலில் நான் படித்த செய்தி இது. அப்போது சில வட மாநிலங்களில் ஜனசங்க் கட்சி (இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் முன் வடிவம் என்று கூறலாம்) பசுவதைத் தடுப்பைத் தன் தேர்தல் பிரசாரத்தில் கூறி வந்தது. 

சுதந்திராக் கட்சியின் தலைவராக இருந்த திரு. மசானி, சுதந்திராக் கட்சி ஜனசங்கத்துடன் சில மாநிலங்களில் கூட்டாகத் தேர்தலில் போட்டி இட்டதால், சுதந்திராக் கட்சியும் பசு வதைத் தடையை ஆதரித்துப் பேசினால், அது தேர்தலில் சாதகமாக அமையும் என்று தெரிவித்தார். 

ஆனால், ராஜாஜி இந்த யோசனையை நிராகரித்து விட்டார். மத நம்பிக்கை தொடர்பான விஷயங்களை அரசியலில் கலப்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சைவ உணவு உண்ணும் அந்தணராக இருந்தும், இந்த யோசனையை ஏற்கவில்லை என்று அந்த நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

பிரச்னைகள் ஏற்படும்போது, சிந்தித்து அவற்றுக்குத் தீர்வு காண்பதில் சிறந்து விளங்கியவர் ராஜாஜி. தலித்துகள் தனி வாக்காளர் குழுக்களாகச் செயல்பட்டுத் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் (separate electorate) முறை வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். 

தலித்துகளைத் தனியாகப் பிரித்து வைக்கும் இந்த யோசனையை காந்திஜி கடுமையாக எதிர்த்ததுடன், தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாகக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அப்போது அவர் சிறையில் இருந்தார். சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். அம்பேத்கரும் தன் நிலையில் பிடிவாதமாக இருக்க, சிக்கலான சூழ்நிலை உருவானது. 

ராஜாஜிதான் இருவருக்கிடையேயும்  தூதுவராகச் செயல்பட்டு, நீண்ட சமாதான முயற்சிகளுக்குப் பின், தலித்துகளுக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கலாம் என்ற யோசனையை இருவரும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். காந்திஜியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. ரிசர்வ் (தனித்) தொகுதிகள்) முறை வந்தது இப்படித்தான். இந்த விஷயத்தில் ராஜாஜியின் பங்களிப்பை அம்பேத்கர் வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.

உலகின் அணு ஆயுங்களைக் குறைக்க வல்லரசுகளை வற்புறுத்தும் முயற்சியில், காந்தி அமைதி நிறுவனத்தின் சார்பாக, ஒரு தூதுக்குழு அன்றைய வல்லரசுகளான அமெரிக்கவுக்கும், சோவியத் யூனியனுக்கும் சென்றது.

அதற்குத் தலைமையேற்குமாறு, பிரதமர் நேரு ராஜாஜியைக் கேட்டுக் கொண்டார். இருவரும் அன்று அரசியல் எதிரிகளாக இருந்தாலும், உலகத் தலைவர்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல மிகவும் ஏற்றவர் ராஜாஜிதான் என்பதை உணர்ந்ததால்தான், நேரு அவரிடம் இந்தப் பொறுப்பை அளித்தார்.

அமெரிக்க அதிபர் கென்னடி, சோவியத் தலைவர் குருஷ்சேவ் இருவருமே ராஜாஜியின் வாதத் திறமையால் கவரப்பட்டு, அவரை மிகவும் புகழ்ந்து பேசினர். கென்னடியுடனான சந்திப்பு  ஒதுக்கப்பட்ட நேரமான இருபது நிமிடங்கள் கடந்த பின்னும் நாற்பது நிமிடங்கள் வரை நீடித்தது. 

தன் கருத்துக்கள் தவறு என்று உணர்ந்தால், அவற்றை மாற்றிக் கொள்ள ராஜாஜி சிறிதும் தயங்கியதில்லை. 

1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது, தேசிய மொழியாக ஹிந்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கேற்ப, ஹிந்தி படிப்பதைப் பெரும் எதிர்ப்புக்கிடையே அறிமுகப்படுத்திய ராஜாஜி, 1965-இல் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தார்!

ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியைத் திணிப்பது அவர்களுக்குக் கூடுதலான சுமையைக் கொடுக்கும் என்று வாதிட்டு, unequal burden (சமமற்ற சுமை) என்று அவர் உருவாக்கிய எளிய சொற்றொடரை விடப் பொருத்தமாக ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வேறொரு வாதம் இருக்க முடியாது.

தான் கருத்தை மாற்றிக் கொள்வதைப் பற்றி அவர் கூறினார்: "மாங்காய் வடுவாக இருக்கும்போது துவர்க்கும், காயாக இருக்கும்போது புளிக்கும், கனியானதும் இனிக்கும். மனம் முதிர்ச்சி அடைவதன் காரணமாகக் கருத்துக்கள் மாறுவது இயல்பானதுதான்!"

மதுவிலக்கில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த அவர், அன்றைய தமிழக முதல்வர் திரு. கருணாநிதியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சென்று, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டதை அனைவரும் அறிவர்.

அரசியலில் அவர் பலரையும் கடுமையாக எதிர்த்தாலும், யாரிடமும் காழ்ப்புணர்ச்சி கொண்டதில்லை. அதனால்தான், அவர் மறைந்தபோது, "அரசியல் கடந்து அன்பு காட்டியவர்" என்று கூறினார் அன்றைய முதல்வர் திரு, கருணாநிதி.

ராஜாஜிக்கு நினைவாலயம் அமைத்து, அதில் ராமரின் கிரீடம் போன்ற கோபுரம் அமைத்து, அந்த நினைவு மண்டபத்தை மாமனிதர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களைக் கொண்டு திறக்க வைத்து, ராஜாஜியிடம் தனக்கிருந்த மதிப்பை வெளிக்காட்டினார் திரு. கருணாநிதி.

ராஜாஜியுடன் அரசியலில் கடுமையாக மோதிய தலைவர்களான நேரு, பெரியார், காமராஜ், அண்ணா, கருணாநிதி ஆகிய அனைவருமே அவரிடம் அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர். 

பெரியார், தான் மணியம்மையைத் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்தபோது, ஆலோசனை கேட்டது தன் நண்பர் ராஜாஜியிடம்தான்.

அரசியலில் நேருவை ராஜாஜி கடுமையாக எதிர்த்து விமரிசனம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு வெளிநாட்டு நிருபர் ராஜாஜியிடம் கேட்டார்: "இவ்வளவு மக்கள் ஆதரவு பெற்றிருக்கும் நேருவை எதிர்த்து உங்களால் வெற்றி பெற முடியுமா?"

அதற்கு ராஜாஜி கூறிய பதில் இது:

"மக்கள் ஆதரவுடன் இருக்கும் நேருவை அரசியல் ரீதியாக எதிர்ப்பது மிகக் கடினம்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர் ஆட்சியில் இவ்வளவு தவறுகள் நடக்கும்போது, அவை பற்றி யாரும் பேசாமல் இருந்தால், 'இத்தனை தவறுகள் நடக்கும்போது இவற்றை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லையே!' என்று வரலாறு நம்மைப் பழிக்காதா?"

இன்று, நாம் சிலவற்றை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்போது, 'இவ்வளவு வலுவாக உள்ள அரசாங்கத்தை நம்மால் எதிர்க்க முடியுமா? நம் எதிர்ப்பு எடுபடுமா?' என்றெல்லாம் தயங்காமல், எதிர்க்க வேண்டியவற்றை நாம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் கூற்று இது! 

ராஜாஜி மறைந்தபோது, அன்று சுதந்திராக் கட்சியின் தலைவராக இருந்த பிலூ மோடி அவருக்குச் சூடிய புகழாரத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.

Rajaji was a human phenomenon - faultlessly straight, miraculously clean and supremely wise. He was not only the conscience keeper of Mahatma but of India itself. To us who have followed him for the last 13 years, he was the embodiment of our cause. With him, Gandhiji has died once again. (ராஜாஜி ஒரு மனித அற்புதம் - அப்பழுக்கற்ற நேர்மையும், பிரமிக்க வைக்கும் சுத்தமும், மேன்மையான அறிவாற்றலும் கொண்டவர். அவர் மகாத்மாவுக்கு மட்டும் மனச்சாட்சிக் காவலர் அல்ல, இந்தியாவுக்கும்தான். கடந்த 13 ஆண்டுகளாக அவரைப் பின்பற்றி வந்த எங்களுக்கு அவர் எங்கள் நோக்கத்தின் வடிவமாக இருந்தார். அவர் இறந்தபோது, காந்திஜி மீண்டும் ஒருமுறை இறந்து விட்டார்.)

ராஜாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான என் காணொளியையும் காணுங்கள்!






 


    


Wednesday, May 13, 2020

38. குறையொன்றுமில்லை


இன்று (3.05.2020) ஹிந்து பெங்களூர் பதிப்பில் (பக்கம் 2 இல்) ''Man cheated of Rs.45 lakh" என்ற செய்தியை அதிக ஆர்வம் இன்றிப் படித்தேன்.

அமெரிக்க லாட்டரியில் 1 மில்லியன் டாலர் ரூபாய் பரிசு, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருதல், அரசாங்க கிராண்ட் (இலவச நிதி) பெற்றுத் தருதல், சிலபொருட்களை சப்ளை செய்தல் போன்ற வாக்குறுதிகளில் ஏமாந்து பலர் இது போல் பெரும் தொகையைப் பறி கொடுத்து வருவது அடிக்கடி நடந்து வரும் சம்பவம்தான். இவை தவிர வங்கிக் கணக்குகளிலிருந்து இணையதளம் மூலம் மோசடியாகப் பணம் திருடப்படுவது வேறு.

ஆனால் இந்தச் சம்பவம் சற்று வித்தியாசமானது. 75 வயதான ஒரு தொழிலதிபர் 2018 இல் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் சந்தித்த ஒரு நபர் திருப்பதி அறக்கட்டளையில் தனக்கு இருக்கும் உயர்நிலைத் தொடர்புகளைப்  பயன்படுத்தி, தொழிலதிபருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னதை நம்பி அவருக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்திருக்கிறார்.

பணம் எப்படிக் கொடுக்கப்பட்டது, பணம் பெற்றவரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டதா போன்ற விவரங்கள் இந்தச் சுருக்கமான செய்தியில் இல்லை.

முதலில் பணத்தைப் பறி கொடுத்தவருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் செய்து பணம் ஈட்டுவது எளிதல்ல. அவ்வாறு ஈட்டிய பணத்தை ஒருவர் இவ்வளவு எளிதாக அடித்துக்கொண்டு போவது கொடுமைதான். ஏமாற்றியவர் பிடிபட்டுப் பணத்தை இழந்தவருக்குப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

ஆயினும் சிறப்பு தரிசனத்துக்காக ஒருவர் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார் என்பது எனக்கு வருத்தத்தையும், கவலையும் அளிக்கிறது.

ஒரு பெரிய கோவிலில் நான் தரிசனத்துக்காகக் காத்திருந்தபோது, சிலர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சந்நிதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊரில் வசிப்பவர்கள் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரே சந்நிதிக்குச் சென்று இறைவனை தரிசிக்கும் முறை இருப்பதாக அப்போது அறிந்தேன். அதுவே எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது -. கட்டணச் சேவையிலும் சீசன் டிக்கட், ஆயுள் சந்தா போன்ற முறைகள் வந்து விட்டனவே என்று நினைத்து!

ஆனால் இது அது போல் கூட இல்லை. தன் உயர்மட்டத் தொடர்புகளைப்  பயன்படுத்தி சிறப்பு தரிசனத்துக்கு வழி செய்வதாக ஒருவர் சொன்னதை ஏற்றுக் கொள்வது என்பதைக் கடவுள் நம்பிக்கை உள்ள என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

இது போல் முறையற்ற வழிகளில் கடவுளை தரிசனம் செய்வது ஆன்மீக நெறிமுறைக்கு முரணானது இல்லையா? தங்கள் தொடர்புகளைப்  பயன்படுத்தி வரிசையில் நிற்காமல் நேரே சந்நிதிக்குச் சென்று சிலர் கடவுள் தரிசனம் செய்வதை நாம் பல கோவில்களில் பார்க்கலாம். இவர்களில் சிலர் "நல்ல தரிசனம் கிடைத்தது" என்று பெருமையாகக் கூட சொல்லிக் கொள்வார்கள்.

அறம் இல்லாத இறை வழிபாடு இறை நம்பிக்கைக்கே முரணானது என்பது என் கருத்து.

கடவுளை தரிசிப்பதற்காக இத்தனை பெரிய தொகையைச் செலவழிக்கத் தயாராக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு உதவ ஒரு சிறு தொகையையாவது செலவழிக்க முன் வருவார்களா என்ற கேள்வி எழுகிறது.

45 லட்ச ரூபாயை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களை உருவாக்கலாம். ஏன் நாம் இருக்கும் இடத்திலேயே  திருப்பதி கோவிலைப் போன்றே ஒரு சிறிய கோவிலைக் கட்டலாம்!

கொரோனாவுக்குப் பிறகு கோவில்களில் வழிபாடு முறை எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. திருப்பதியில் நீண்ட வரிசைகள் இருக்குமா என்று தெரியவில்லை.

இன்று "ஆன்மீகம்" பற்றிப் பலரும் பேசுகிறார்கள். அரசியலில் ஆன்மீகம் வேண்டும் என்கிறார்கள். முதலில் இறைவழிபாட்டில் ஆன்மீகம் வரட்டும்!




Monday, September 2, 2019

37. சொல்லடி சிவசக்தி!


நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.

பாரதியாரின் கவிதையில் 'எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்' என்ற வரியைப் படிக்கும்போது (கேட்கும்போது) எனக்குச் சற்று நெருடலாக இருக்கும். 'என்ன இது, பாரதியார் தன்னைத்தானே பெரிய அறிவாளி என்று சொல்லிக்கொள்வது போல் தொனிக்கிறதே இந்த வரி!'

இந்த வரியை பாரதியார் வேறொரு பொருளில்தான் எழுதியிருப்பார் என்று சமீபத்தில்தான் எனக்குத் தோன்றியது (என் புத்திக்கு உறைத்தது என்றும் சொல்லலாம்!)

அறிவு என்று பாரதியார் குறிப்பிடுவது அறிவாற்றலை (intelligence) அல்ல, சிந்திக்கும் திறனை.

சிந்திக்கும் திறன் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலோர் அதைப் பயன் படுத்துவதில்லை. எனவே அவர்களிடம் உள்ள இந்தச் சிந்தனை நெருப்பு சாம்பல் படிந்து நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது.  ஊதினால்தான் அடியில் நெருப்பு கனன்று கொண்டிருப்பதே தெரியும்.

ஆனால் சிந்தனைத் திறனைப் பயன்படுத்துபவர்களிடம் அந்தத் திறன் சுடர் விட்டு எரியும் நெருப்பாக இருக்கும். இதைத்தான் சுடர் விடும் நெருப்பு என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

ஒருவர் தன் சிந்தனைத் திறனைச் சுடர் விடும் நெருப்பாக வைத்திருப்பாரா அல்லது நீறு பூத்த நெருப்பாக அடக்கி வைத்திருப்பாரா என்பதும் கடவுள் சித்தம்தான்.  அதனால்தான் "எனைச் சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?" என்கிறார் பாரதியார். ('அவன் அருளால் அவன் தாள் பணிந்து' என்று ஆழ்வார்  கூறுவதற்கு ஒத்த கருத்து இது. 'கடவுளிடம் பக்தி கொள்வதற்கும் கடவுளின் அருள் வேண்டும்' என்கிறார் ஆழ்வார் ! அது போல் ஒருவர் தன் அறிவுத் திறனைச் சுடர் விடும் அளவுக்கு வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதும் இறைவன் தீர்மானிப்பதுதான்!)

சரி, 'சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?' என்று பாரதியார் ஏன் நொந்து கொள்கிறார்? அப்படி இருப்பது நல்ல விஷயம்தானே?

சிந்தனைத் திறனைப் பயன்படுத்தியதால்தான் பாரதியாரால் வேதங்களைப் போற்றியபோதும், மனு நீதியை நிராகரிக்க முடிந்தது. நம் பாரம்பரியம் பற்றிப் பெருமை கொண்டபோதும், சாதிப்பாகுபாடுகளைச் சாட முடிந்தது. இதனால் அவருக்கு எதிர்ப்புகளும், சங்கடங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால்தான், "என் சிந்தனையைச் சுடராக இருக்கும்படி ஏன் வைத்திருக்கிறாய்? அப்படி இல்லாவிட்டால் மற்றவர்களைப் போல் நானும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இசைவாக நடந்து கொண்டு இந்தக் கண்டனங்களுக்கும், சங்கடங்களுக்கும் ஆளாகாமல் இருந்திருப்பேனே!' என்று அங்கலாய்க்கிறார் போலும்!

இன்றும் 'தேச நலன்,' 'மத நம்பிக்கை,' 'பாரம்பரியப்  பழக்கம்,' போன்ற ஏதாவது ஒரு முத்திரை குத்தப்பட்டு வழங்கப்படும் விஷயங்களை அனைவரும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கேள்வி கேட்பவர்கள் அல்லது அவற்றுக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள்  தேச விரோதிகள், மத விரோதிகள், அந்நிய நாட்டுக் கைக்கூலிகள் என்றெல்லாம் வசை பாடப்படுகிறார்கள்.

சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால் இவர்கள் INTELLECTUALS என்று முத்திரை குத்தப்பட்டு . வசை பாடப்படுகிறார்கள்! உயர்ந்த பொருள் உள்ள இந்த வார்த்தை இன்று ஒரு வசைச்சொல்லாகப் பயன்படுத்துகிறது!  பாரதியார் 'எனைச் சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?' என்று கடவுளிடம் நொந்து கொண்டதை இதனுடன் ஒப்பிட்டால், பாரதியாரின் மன வருத்தத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.






Thursday, April 18, 2019

36. நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை - 5. காத்மாண்டு

9.4.19 இரவு போக்ராவிலிருந்து கிளம்பி, 205 கிலோமீட்டர் பயணம் செய்து 10.4.19 காலை காத்மாண்டுவுக்கு வந்து சேர்ந்தோம்.

காத்மாண்டுவில் நாங்கள் முதலில் சென்றது ஜலநாராயண் கோவிலுக்கு. இந்தக் கோவிலில் நீரின் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சி அளிக்கிறார். அருகில் லட்சுமி மந்திர் என்ற லட்சுமி கோவிலும் இருக்கிறது.

காத்மாண்டுவில் நாங்கள் தங்கியிருந்த  ஹோட்டலிலிருந்து தெரிந்த காட்சிகள்



 ஜலநாராயண் கோவில்














 லக்ஷ்மி மந்திர் 
 
ஜலநாராயண் கோவிலில் புறாக்கள் (வீடியோ)


 பிற்பகல் காத்மண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சங்குநாராயண் கோவிலுக்குச் சென்றோம். இந்த ஊர் தொலைகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துக்கள் மற்றும் புத்தர்களால் வழிபடப்படும் இந்தக் கோவில் மிகப் புராதனமானது. பல கட்டடக்கலை நுணுக்கங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் கொண்டது. 1979ஆம் ஆண்டு  இதை யுனெஸ்கோ நிறுவனம்  World Heritage Site என்று அங்கீகரித்தது. அதனால்தான்  இந்தக் கோவிலுக்குள் செல்ல நுழைவுக்கட்டணமாக ரூ. 150 வசூலிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது!

கோவிலின் நுழைவிலிருந்து கோவிலுக்கு சுமார் அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும். சரிவான பாதை, சில படிகள் கொண்ட பாதை. நடப்பது கடினமில்லை.

3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது.

கோவிலுக்கு வெளியே, குளமும், சாலையும்








கோவிலின் முன்புறத்  தோற்றம்  (சந்நிதி பின்புறம் உள்ளது)



















                             சந்நிதி


கருடன் 




 சந்தா  நாராயண்  (கருட நாராயண்) (வலது)

 ஸ்ரீதர் விஷ்ணு


 முன்புறத் தோற்றம் 






















 வைகுண்ட விஷ்ணு

 கணபதி (இடது)









ஸ்ரீ கைலேஷ்வர் சிவா கோவில் (இடது)

நரசிம்மர் (வலது) 

  விஷ்ணு விக்ராந்த் (திரிவிக்கிரமர்)






சந்நிதி முன் பக்தர்கள்





 சந்நிதியின் முன்புறம்






சங்குநாராயன் கோவில் தரிசனம் முடிந்ததும் பசுபதி நாத் கோவிலுக்குச் சென்றோம். அப்போது மாலை ஆறரை மணி ஆகி விட்டது. அங்கு நடந்த ஆரத்தியை தரிசித்தோம் .


பின்னால் உயரமாகத் தெரிவது பசுபதிநாத் சந்நிதி. அதற்கு முன் ஓடும் பாக்மதி ஆற்றின் எதிர்புறத்திலிருந்து பசுபதிநாத்துக்கு ஆரத்தி காட்டப்பட்டது. வீடியோக்கள் கீழே உள்ளன.








இத்துடன் எங்கள் நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை நிறைவு பெற்றது. அடுத்த நாள் 11.4.19 காலை காத்மண்டுவிலிருந்து டெல்லி வந்து, அங்கிருந்து மாலை பெங்களூர் திரும்பினோம்.

காத்மாண்டு-டெல்லி விமானப்பயணத்தின்போது விமானத்துக்கு வெளியே தெரிந்த சில காட்சிகள்.























காத்மாண்டுவில் நான் எடுத்த புகைப்படங்களில் ஒரு சிலவற்றை எடுத்து கூகிள் தயாரித்துக் கொடுத்த வீடியோ இது!


இந்தப் பயணம் மேற்கொள்ள எனக்கு அருள் செய்த இறைவனுக்குத் தலை வணங்குகிறேன். பயணத்தை ஏற்பாடு செய்த என் மனைவியின் சகோதரர்கள், டெல்லியிலிருந்து இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்த ஸ்ரீநிவாஸா டிராவல்ஸ் திரு நரசிம்மன் ஆகியோருக்கு என் நன்றி. இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்த அனைவருக்கும் என் நன்றி.
ஓம் நமோ நாராயணாய