Saturday, December 17, 2016

16. ஒரு வெட்டி ஆராய்ச்சி

பல பழைய தமிழ்ப் பாடல்களில், கிராமஃபோன் ரிகார்டில் வரும் (ரேடியோவில் ஒலிபரப்பப்படும்) வார்த்தைகள் சில, திரைப்படத்தில் மாற்றப்பட்டிருக்கும். இதற்குக் காரணம் சென்ஸார் சில வார்த்தைகளை ஏற்றுக்குள்ளாதது. 

பொதுவாக, அரசியல் சார்பு, மதஉணர்வைப் புண்படுத்துவதாக அமைவது, காமம், ஆபாசம் போன்ற காரணங்களுக்காக சென்ஸார் ஆட்சேபங்களை எழுப்புவது வழக்கம். 

தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சென்ஸார் சான்றிதழ் வாங்கிப் படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசரத்தில், ஏதோ ஒரு வகையில், வார்த்தையை மாற்றிப் பாடகர்களை அந்த வார்த்தைகளை மட்டும் பாட வைத்து மாற்றி விடுவார்கள் என்று அறிகிறேன். 

சில மாற்றங்கள் வேடிக்கையாகவும், அபத்தமாகவும் இருக்கும். என் நினைவுக்கு வரும் சிலவற்றை இங்கே தருகிறேன். கடைசியாக நான் கொடுத்திருக்கும் உதாரணத்தில், சந்திரோதயம் பாடலின் ஒரு சரணம் முழுவதையும் வாலி அற்புதமாக மாற்றி அமைத்திருப்பதை வியந்திருக்கிறேன்.

1. படம்: அடுத்த வீட்டுப் பெண் பாடல்: காக்கை காக்கைக் கழகம் இது

இசைத்தட்டு
காக்கை காக்கைக் கழகம் இது
காரியம் கைகூடும் கழகம் இது  (கா.கை. கழகம் - காரியம்  கைகூடும்  கழகம்)

படம்
கற்றோர் நிறைந்த சங்கம் இது
காரியம் கைகூடும் சங்கம் இது

(கழகம் என்ற பெயர் கூடாது என்று சென்சஸார் வலியுறுத்தியிருக்கக் கூடம்!)

2. படம்: பாவ மன்னிப்பு  பாடல்: பாலிருக்கும்

இசைத்தட்டு
வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே- அது
வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே!

படம்
வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே- அது
மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே!

3. படம்: சுமைதாங்கி  பாடல்: எந்தன் பருவத்தின் கேள்விக்கு

இசைத்தட்டு
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?

படம்
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?

4. படம்: வல்லவன் ஒருவன்  பாடல்: அம்மம்மம்மா கன்னத்தில் கன்னம்

இசைத்தட்டு
முத்தம் என்பது புதுமையா?
முகத்துக்கு மேலே வா வா!

படம்
முத்தம் என்பது புதுமையா?
அழகுக்கு மேலே வா வா!

5. படம்: பெற்றால்தான் பிள்ளையா?  பாடல்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இசைத்தட்டு

மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்

படம்
மேடையில் முழங்கு திருவிக போல்

6. படம்: பாவ மன்னிப்பு  பாடல்: வந்த நாள் முதல்

இசைத்தட்டு

எதனைக் கண்டான்? மதங்களைப் படைத்தான்

படம்
எதனைக் கண்டான்? பணம்தனைப் படைத்தான்

7. படம்: அன்பே வா  பாடல்: புதிய வானம் புதிய பூமி

இசைத்தட்டு

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

படம்
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

8. படம்: பூவும் பொட்டும்  பாடல்: எண்ணம் போல

இசைத்தட்டு
கண்ணன் வழங்கும் இன்ப உலகம்

படம்
கண்ணன் வழங்கும் இந்த உறவு

9. படம்: எங்க வீட்டுப் பிள்ளை  பாடல்: நான் ஆணையிட்டால்

இசைத்தட்டு
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.

படம்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்.

10. படம்: சந்திரோதடயம்  பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?

இசைத்தட்டு
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ

படம்
எழிலோடு எழில் வைத்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ

இது போல் இன்னும் பல உதாரணங்கள் உள்ளன.

Tuesday, July 12, 2016

15. கடவுள் நம்பிக்கை - பல நிலைகள்


பக்தி 
சிந்தனை செய் மனமே 
செய்தால் தீவினை அகன்றிடுமே 
சிவகாமி மகனை ஷண்முகனை 
சிந்தனை செய் மனமே! 
மனமே, தினமே! 

அடைக்கலம் 
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே 
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! 

பரவசம் 
நாராயண மந்த்ரம் - அதுவே 
நாளும் பேரின்பம். 

கோரிக்கை 
கேட்டதும் கொடுப்பவனே க்ருஷ்ணா க்ருஷ்ணா 
கீதையின் நாயகனே க்ருஷ்ணா, க்ருஷ்ணா! 

கெஞ்சல் 
ஆண்டவனே உன் பாதங்களை என் கண்ணீரில் நீராட்டினேன் 
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன். 

இயலாமை 
ஆட்டுவித்தால் ஆரொருவர் 
ஆடாதாரோ கண்ணா? 
ஆசையென்னும் தொட்டிலினிலே 
ஆடாதாரோ கண்ணா? 

புரிதல்
மனிதன் நினைப்பதுண்டு 
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று

வெறுப்பு 
கையளவு உள்ளம் வைத்து 
கடல் போல் ஆசை வைத்து 
விளையாடச் சொன்னானடி - அவனே 
விளையாடி விட்டானடி. 

நன்றி 
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை 
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான். 

புலம்பல் 
ஆண்டவன் முகத்தைப் பாக்கணும் 
அவங்கிட்டே ஒண்ணே ஒண்ணு கேக்கணும் 
ஏண்டா சாமி என்னப் படைச்சே? 
என்னைப் படைக்கையிலே என்ன நெனச்சே? 

வேதனை  
அழுதால் என்ன தொழுதால் என்ன 
நடக்கும் கதைதான் நடக்குதப்பா!

கோபம் 
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் 
... படுவான், துடித்திடுவான் 
பட்டதே போதுமென்பான். 

விரக்தி 
இறைவன் இருக்கின்றானா? 
மனிதன் கேட்கிறான் 
அவன் இருந்தால் உலகத்திலே 
எங்கே வாழ்கிறான்? 
நான் ஆத்திகனானேன் 
அவன் அகப்படவில்லை. 
நான் நாத்திகனானேன் 
அவன் பயப்படவில்லை. 

முதிர்ச்சி 
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு 
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்! 

நன்றி - திரைப்படப் பாடல்கள் 


Saturday, January 23, 2016

14. இலக்கு நோக்கிய பயணம்

டேவிட் ஷ்வார்ட்ஸ் எழுதிய 'உயர்ந்த சிந்தனையின் மந்திர சக்தி' (Magic of Thinking Big) என்ற புத்தகம் பல  இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் சில கோட்பாடுகளை அவர் விளக்குகிறார்.

இன்றைய  இளைஞர்கள் எந்த ஒரு குறிக்கோளும், நோக்கமும் இல்லாமல் தங்கள் கல்வியையும், தொழிலையும் தேர்ந்தெடுப்பது துரதிர்ஷ்டவசமானது. தங்கள் முயற்சியில் அவர்களால் அதிக வெற்றி அடைய முடிவதில்லை. அதனால் அவர்கள் விரக்தியடைந்து மற்றவர்களைக் குறை சொல்லத் துவங்குகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமற்ற பழக்கம்.

நூலின் மூன்றாவது பகுதியில், வாழ்க்கையில் வெற்றி பெற இலக்குகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றி 
ஷ்வார்ட்ஸின் விளக்குகிறார். சரியான குறிக்கோள் இல்லாமல் ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பது வீணான முயற்சி.

முதலில், நமது தொழில் குறித்த இலக்குகளை நாம் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும். வேலை, குடும்பம், சமூக வாழ்க்கை ஆகிய மூன்று துறைகளிலும் நமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய மனத்தோற்றத்தை உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக, கீழ்க்கண்ட மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, அவற்றுக்குத் தெளிவான விடை காண வேண்டும்:

1) என் வாழ்க்கையில் நான் என்ன சாதிக்க விரும்புகிறேன்?
2) நான் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்?
3) எது எனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது?

நமது கண்டுபிடிப்புகள், மருத்துவ முன்னேற்றங்கள், பொறியியல் சாதனைகள், தொழில்துறை வெற்றிகள் இவை எல்லாமே சிலரது மனதில் கற்பனை செய்யப்பட பிறகுதான், செயல் வடிவம் பெற்றன. இன்று பல குட்டி நிலாக்கள் (செயற்கைக் கோள்கள்) பூமியைச் சுற்றி வருவது தற்செயலாக நடந்த செயல் அல்ல - விஞ்ஞானகள் விண்வெளியை வெற்றி கொள்ள வேண்டும் என்ற இலக்கை மேற்கொண்டதால் ஏற்பட்டவை.

இலக்கு, குறிக்கோள் அல்லது நோக்கம் என்பது வெறும் கனவு அல்ல. கனவை உண்மையாக்கும் செயல். "என்னால் இப்படிச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமே"  என்று நினைப்பது இலக்கு அல்ல. "நான் இதை அடைவதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்" என்ற தெளிவான எண்ணம்தான் இலக்கு.

ஒரு இலக்கு தீர்மானிக்கப்படும் வரை, எதுவுமே நடக்காது. எந்த முன்னேற்றமும் ஏற்படாது. இலக்கு இல்லாத மனிதர்கள், வாழ்க்கையில் எங்கோ அலைந்து திரிகிறார்கள். எங்கே போகிறோம் என்று தெரியாமல் தடுமாறி, இறுதியில், அவர்கள் எங்கேயும் போய்ச் சேர்வதில்லை!

உயிர் வாழக் காற்று எப்படி அவசியமோ, அதுபோல், வாழ்க்கைக்கு இலக்கு அவசியம்.

ஒரு விளம்பர நிறுவனத்தின் தபால் அனுப்பும் பிரிவில், வாரத்துக்கு 25 டாலர் சம்பளம்  வாங்கிகொண்டிருந்த தவே மகோனி என்பவர், தனது 27ஆவது வயதில் ஒரு விளம்பர நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆனார். 33ஆவது வயதில் இன்னொரு நிறுவனத்தின் தலைவர் ஆனார்.

இலக்குகளைப்பற்றி  அவர் சொல்வதைக் கேளுங்கள். "நீங்கள் முன்பு எங்கே இருந்தீர்கள், இப்போது எங்கே எங்கே இருக்கிறீர்கள் என்பவை முக்கியமல்ல. நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம்."

ஒரு வளரும் நிறுவனம், அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறது. முன்னணி நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றுபவர்கள், "இன்னும் 10 வருடங்களில் நமது நிறுவனம் எங்கே இருக்க வேண்டும்?" என்று சிந்திக்க வேண்டும். அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

ஒரு புதிய நிறுவனத்தின் உற்பத்தித் திறன், இன்றைய தேவையின் அடிப்படையில்  தீர்மானிக்கப்படுவதில்லை. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கான தேவையை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்படக்கூடிய பொருட்களைப் பற்றி, ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

இன்றைய வியாபார நிறுவனம், தனது எதிர்காலத்தை, நடக்கிறபடி நடக்கட்டும் என்று விட்டு விடுவதில்லை. நீங்கள் விட்டு விடப் போகிறீர்களா?

முன்னேறிச் செல்லும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் கற்கலாம். நாம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நமது வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும். நம்மால் அது முடியும்.