Tuesday, June 23, 2015

12. இசைத்தமிழ் நீ(ங்கள்) செய்த அரும் சாதனை


Photo courtsy: msvtimes.com

உலகில் சில அற்புதங்கள் நடப்பதுண்டு. இந்து மதத்துக்குப் புத்துயிர் ஊட்டிய சங்கரரும் ராமானுஜரும் பிறந்தது வெவ்வேறு காலங்களில் (சங்கரர் காலத்தால் முந்தியவர்) என்றாலும் இருவரும் பிறந்தது சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில்.

நேர்மை மற்றும் எளிமையின் உருவாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியும் லால் பஹதுர் சாஸ்திரியும் பிறந்தது அக்டோபர் 2 ஆம் தேதி (சாஸ்திரி பிறந்தது காந்தி பிறந்து 35 வருடங்கள் கழித்து.)

அது போன்ற இன்னொரு ஜோடி கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்,எஸ்.விஸ்வநாதனும். (பொதுவாக யாரையும் பட்டப் பெயர் சொல்லி நான் குறிப்பிடுவதில்லை. ஆனால் இந்த இருவரையும் பட்டப் பெயர் சொல்லாமல் என்னால் குறிப்பிட முடிவதில்லை!)

கவியரசர் பிறந்தது 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி. அடுத்த ஆண்டு அதே மாதம்  19ஆம் தேதி பிறந்தார் இசை அரசர்.(இருவரின் பிறந்த தேதியும் 24தான் என்ற கருத்தும் பலரிடையே உள்ளது. எம் எஸ் வி அவர்கள் பிறந்த தேதி எது என்ற சரியான தகவலை அவர் குடும்பத்தினரேஅறிவார்.)

தமிழகத்தில் பிறந்த கண்ணதாசனும், கேரளாவில் பிறந்த விஸ்வநாதனும் சந்தித்து ஒன்று சேர்ந்து தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் படைக்க வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை போலும்!

இந்த இருவரைப் பற்றி  msvtimes.com/forum வலைப்பதிவில் "இவர்கள் இருவரும் கந்தர்வர்கள். ஏதோ ஒரு முனிவரின் சாபத்தினால் இந்த உலகில்  வந்து பிறந்திருக்கிறார்கள்" என்று ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்ததை நான் மிகவும் ரசித்தேன்.

'சாபத்தினால்' என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மனம் சங்கடப்பட வேண்டியதில்லை. நம் புராணங்களில் முனிவர்களின் சாபத்தினால் தெய்வங்கள் கூட  பூமியில் வந்து பிறந்த பல கதைகள் இருக்கின்றன! மகாபாரதத்தில் வரும் பீஷ்மர், யுதிஷ்டிரர் போன்ற உயர்ந்த பாத்திரங்கள் இவ்வுலகில் வந்து பிறந்தது சாபத்தினால்தான்.

கந்தர்வர்கள் இசையில் உயர்ந்தவர்கள். மிகவும் அற்புதமான பாட்டை கந்தர்வ கானம் என்று சொல்வார்கள். இவர்கள் இருவரும் தங்கள் பாடல்களால் கந்தர்வர்களாக விளங்குகிறார்கள் என்பதுதான் நண்பரின் கருத்து.

கண்ணதாசனும் விஸ்வநாதனும் (விஸ்வநாதன் என்று சொல்லும்போது, விஸ்வநாதன்- ராமமூர்த்தியையும் குறிப்பிட்டுத்தான் சொல்கிறேன்) இணைந்து கொடுத்த பாடல்களில் ஒன்று கூடச் சோடை போனது கிடையாது.

எனக்கு விவரம் அறிந்த காலத்திலிருந்து இவர்கள் பாடல்களையே உணவுடன் சேர்த்து அருந்தி வந்திருக்கிறேன். என்னை வளர்த்ததில் என் தாய் தந்தைக்கு அடுத்தபடியாக இந்த இருவர் இணைந்து கொடுத்த பாடல்களுக்கும் பங்கு உண்டு.

விவரம் புரியாத வயதில் இவர்கள் பாடல்கள் என் மனதில் எத்தனையோ உணர்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கின்றன. சில சமயம் உடலுக்குள் இனம் புரியாத ஒரு புளகாங்கிதம் ஏற்படும். சில சமயம் ஏதோ ஒரு ஏக்கம் ஏற்படும். சில சமயம் துள்ளிக் குதிக்கலாம் போல் இருக்கும். சில சமயம் கண்களில் கண்ணீர் முட்டும். காரணம் தெரியாது. பல பாடல்களை இப்போது கேட்கும்போதும் அதே உணர்ச்சிகள் எழுகின்றன.

நான் இவர்கள் பாடல்களை ரசிக்கத் துவங்கிப் பல வருடங்களுக்குப் பிறகுதான் பாடல்களை இயற்றியவர் யார், இசை அமைத்தவர் யார் போன்ற விவரங்கள் தெரிய வந்தது. உதாரணமாக 'மணப்பந்தல்' படத்தில் வரும் 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்' என்ற பாடல்.

1961இல் வெளியான இப்பாடலை முதலில் கேட்டபோது எனக்கு வயது 10 இருக்கும். அந்த வயதில் இந்தப் பாடல் என்னிடம் ஏன் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை!

இந்த இருவரைப் போல் இணைந்து இவ்வளவு அற்புதமான பாடல்களைக் கொடுத்த ஜோடி இவ்வுலகில் வேறொன்று இருந்ததில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற ஒரு இணை வேறு துறையில் இருந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான். தமிழ் தெரியாத மற்றும் என் போன்று இசையின் அடிப்படையை அறியாத பல சாதாரண மக்களை இவர்கள் பாடல்கள் உலுக்கி இருக்கின்றன.

கவிஞரின் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு எம்.எஸ்.வி. உயிர் கொடுத்தது போல் வேறு எந்த மொழியிலும் எந்த இசை அமைப்பாளரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஒரு கவிஞர்-இசை அமைப்பாளர் என்ற உறவையும் தாண்டி இவர்கள் இருவருக்கும் இருந்த நெருக்கத்தைப் பார்க்கும்போது msvtimes.com நண்பர் சொன்னது போல் இவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே ஏதோ ஒரு வகையில் இணைந்திருந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கண்ணதாசன் பல இசை அமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதி இருந்தாலும் எம்.எஸ்.வியின் இசையில் அமைந்த பாடல்களுக்கு அவை இணையாகா - கே.வி.மகாதேவன் அவர்கள் இசை அமைத்த கங்கைக்கரைத் தோட்டம், மன்னவன் வந்தானடி போன்ற ஒரு சில பாடல்களைத் தவிர. அதுபோல் எம்.எஸ்.வியிடம் இருந்த நெருக்கம் போல் கண்ணதாசனுக்கு மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்ததில்லை.

எம்.எஸ்.வியைப் பொறுத்தவரை யார் எழுதிய பாடலாக இருந்தாலும் அவரது இசை அமைப்பு golden touch அமைந்ததாகத்தான்ஆகத்தான் இருக்கும். 'அந்த நாள் ஞாபகம்' பாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது 'மூச்சுக் காற்றுக்குக் கூட இசை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி.' என்று ஏ.வி.எம் சரவணன் அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது! ஆயினும் கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைப்பதற்கென்று என்றே தனது ஆர்மோனியத்தில் ஒரு தனிப் பகுதியை ஒதுக்கி வைத்திருப்பார் போலும் எம்.எஸ்.வி.!

கவிஞர் வாலி எழுதிய எனக்கொரு காதலி இருக்கின்றாள் என்ற பாடலைக் கேட்கும்போது இந்தப் பாடல் கண்ணதாசனையும் எம்.எஸ்.வியையும் குறித்து எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆர்வமுள்ளவர்கள் இது பற்றிய எனது பதிவை இங்கே பார்க்கலாம்.

திரை இசையின்   எல்லாப் பரிமாணங்களையும் அனாயாசமாகக் கையாண்டவர் எம்.எஸ்.வி. அவருக்குப் பின்னால் வந்த இசை அமைப்பாளர்கள் செய்ததாகச் சொல்லிக்கொள்ளும் சாதனைகளை அவர் பல வருடங்களுக்கு முன்பே சத்தமில்லாமல் செய்து விட்டு அமைதியாக இருக்கிறார்.

உதாரணமாக 1970 ஆம் ஆண்டில் Thrilling Thematic Tunes என்ற ஆல்பத்தை அவர் ஸ்டீரியோ இசையில் அமைத்திருக்கிறார். ஆனால் தமிழின் முதல் ஸ்டீரியோ பதிவு இதற்கு எட்டு வருடம் கழித்துத்தான் நடந்ததாகச் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறாகள்.

Fusion என்று சொல்லப்படும் கலவை இசையை இவர் 1958இல் வெளியான பதி பக்தியிலேயே ராக் ராக் ராக் என்ற பாடலில் அமைத்திருக்கிறார் 'அடாணா' ராகமும்,'ராக் அண்ட் ரோல்' இசையும் இணைந்து ஒலிக்கும் பாடல் இது).

ஜாஸ் (வர வேண்டும் ஒரு பொழுது - கலைக்கோவில் மற்றும் பல பாடல்கள்), வால்ட்ஸ் (கண்ணிரண்டும் மின்ன மின்ன - ஆண்டவன் கட்டளை) போன்ற மேற்கத்திய இசையின் பல வடிவங்களை மிக இயல்பாகக் கையாண்டிருக்கிறார்.

1960 ஆம் ஆண்டுக்கு முன்பே சிம்பஃனி என்ற இசை வடிவையும் இவர் கையாண்டிருப்பதாக இசையின் பரிமாணங்களை அறிந்த என் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 'ஒருவர் வாழும் ஆலயம்'  என்ற 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படப்  பாடலில் கூட  சிம்ஃபனி அமைப்பு இருப்பதாக அறிகிறேன்.

'கர்ணன்' படத்தில் இவர் ஹிந்துஸ்தானி ராகங்களையும் இசைக்கருவிகளையும் கையாண்ட அளவுக்கு ஹிந்திப் பட இசை அமைப்பாளர்கள் கூடக் கையாண்டதில்லை!

மெல்லிசை என்பதற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்தவர் இவர். எம்.எஸ்.வி. போட்ட பாதையில்தான் தாங்கள் செல்கிறோம் என்று இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யா சாகர், தேவா, பரத்வாஜ் போன்ற பல இசை அமைப்பாளர்களும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

இசை நுணுக்கம் அறிந்த கமலஹாசன் 'தமிழ்த் திரை இசையில் எம்.எஸ்.வியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் இசை அமைக்க முடியாது' என்று சொல்லி இருக்கிறார்.

கர்நாடக சங்கீதத்தைப் பொறுத்தவரை, மற்ற பல இசை அமைப்பாளர்களைப் போல் எம்.எஸ்.வி. குறிப்பிட்ட ராகங்களில் இசை அமைப்பதில்லை (ஒரு சில பாடல்களைத் தவிர) 'கவிதைக்குள் இசை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதுதான் என் வேலை' என்பார் எம்.எஸ்.வி.

ஒரு பாடலை அவரிடம் கொடுத்தால் அதைப் படித்து அதன் பொருளைப் புரிந்து கொண்டு அந்தப் பாடலுக்கு மெட்டு அமைப்பார் எம்.எஸ்.வி. அவர் பாடல்களின் அழகைப் பார்த்து கல்யாணி, காம்போதி, மோஹனம், பைரவி போன்ற ராகங்கள் அவர் பாட்டுக்குள் போய் சில இடங்களில் அமர்ந்து கொள்ளும். அவர் பாடலை ஆய்வு செய்பவர்கள், இது கல்யாணி போலவும் இருக்கிறது, மோஹனம் போலவும் இருக்கிறதே என்று குழம்புவது இதனால்தான்.

'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலைக் கேட்ட லால்குடி ஜெயராமன் அவர்களுக்கு இது போன்ற ஒரு குழப்பம் ஏற்பட்டு அவர் கர்நாடக இசை விமர்சகர் சுப்புடுவிடம் கேட்க, சுப்புடு, "விஸ்வநாதனின் பாடல்கள் அவரே உருவாக்கிய ராகங்களில் அமைந்தவை. எனவே அவற்றுக்கெல்லாம் 'விஸ்வ கல்யாணி,' 'விஸ்வ மோஹனம்,' 'விஸ்வ பைரவி' என்றெல்லாம்தான் பெயர் வைக்க வேண்டும்" என்றாராம். யாரையுமே எளிதில் பாராட்டாத சுப்புடு அவர்களிடமிருந்து வந்த இந்த வார்த்தைகளை விடப் பெரிய பாராட்டு வேறென்ன இருக்க முடியும்?

எம்.எஸ்.வியுடன் சேர்ந்து 'சங்கமம்' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார் மகாராஜபுரம் சந்தானம் அவர்கள். நாரத கான சபாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட நான் , "நான் எம்.எஸ்.வியின் ரசிகன்" என்று சந்தானம் அவர்கள் கூறியதைக் கேட்டுப் புல்லரித்துப் போனேன்.

"எம்.எஸ்.வியின் இசையை நான் கூர்ந்து கேட்பேன். அவர் பாடல்களில் இருக்கும் சில அற்புதமான சங்கதிகளை என் பஜனைப் பாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வேன்" என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் அவர்கள் ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

எம்.எஸ்.வியுடன் இணைந்து பணியாற்றிய கர்நாடக இசைக் கலைஞர் ஜி.எஸ்.மணி அவர்கள், "எம்.எஸ்.வியுடன் இணைந்து பணியாற்றியதால் என் கர்நாடக இசைத்திறன் மெருகேறி இருக்கிறது" என்று msvtimes.com நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார்.

கண்ணதாசன் - விஸ்வநாதன் இணையின் இசைப்பங்களிப்பு திரை இசையைத் தாண்டியும் அமைந்திருக்கிறது. இவர்கள் படைப்பில் வந்த கிருஷ்ண கானம் என்ற ஆல்பத்துக்கு இணையாக வேறு பக்திப் பாடல்களைக் குறிப்பிட முடியுமா? 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,' 'ஆயர்ப்பாடி மாளிகையில்' என்ற இரண்டு பாடல்களும் பக்திப் பாடல் வரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் என்பது எனது கருத்து. இது தவிர, தேவாரம், திருவாசகம், அய்யப்பன் பாடல்கள், அம்மன் பாடல்கள் என்று பல பக்திப்  பாடல் ஆல்பங்களை உருவாகி இருக்கிறார் எம்.எஸ்.வி.

1962 ஆம் ஆண்டில் நடந்த சீனப்போரின்போது 'சிங்கநாகம் ஓடுது' என்ற ஒரு குறும் படம் எடுக்கப்பட்டது. சிவாஜி, ஜெமினி, சாவித்திரி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இத்திரைப்படத்தை இயக்கியவர் திரு பீம்சிங் என்று நினைக்கிறேன். சென்னை போன்ற ஒரு சில நகரங்களில் மட்டுமே (திரைப்படத்துக்கு முன்பு வரும் செய்திப்படம் போல்) திரையிடப்பட்ட இந்தப் படத்தை ஒரு கிராமத்தில் வசித்த என்னால் வானொலியில் ஒலிச்சித்திரமாகத்தான் கேட்க முடிந்தது. கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்த 'சிங்க நாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது,' என்ற பாடல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் எல்லாம் இப்போது கிடைக்குமா என்றே தெரியவில்லை. (இந்தப் பாடலை எழுதியவர்/இசை அமைத்தவர் பற்றி மாறுபட்ட தகவலும் உண்டு.)

சென்னையில் பிர்லா கோளரங்கம் துவக்கப்பட்டபோது அதன் நிகழ்ச்சிகளுக்குப் பின்னணி இசை அமைத்தவர் எம்.எஸ்.விதான் என்று ஒரு பத்திரிகையில் படித்தேன். அந்த இசை இப்போது மாற்றப்பட்டிருக்கலாம்.

இந்திப்பட இசை அமைப்பாளர்கள் பலருக்கு எம்.எஸ்.வியின் மீது பெரு மதிப்பு உண்டு. எம்.எஸ்.வியால் தனது குரு என்று கருதப்படும் நௌஷத் அலி அவர்கள் பங்கேற்ற ஒரு விழாவில் ஒருவர் எம்.எஸ்.வியை 'தென்னாட்டு நௌஷத் அலி (Naushad Ali of the South)' என்று குறிப்பிட்டபோது, நௌஷத் அலி  "நான் 'வட நாட்டு எம்.எஸ்.வி (MSV of the North)' என்று அழைக்கப்படுவதையே விரும்புவேன்" என்றார்.


'சிவந்த மண்' படத்துக்காக 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலுக்கு எம்.எஸ்.வி இசை அமைப்பதை நேரில் பார்த்த இசை அமைப்பாளர் ஜெய்கிஷன், அந்த நீண்ட பாடலுக்கு எம்.எஸ்.வி. சுமார் நான்கு மணி நேரத்தில் இசை அமைத்து விட்டதைப் பார்த்துப் பிரமித்து, "இது போன்ற ஒரு பாடலுக்கு இசை அமைக்க எங்களுக்குப் பத்து நாட்கள் பிடிக்கும்!" என்று சொல்லி வியந்து எம்.எஸ்.விக்கு ஒரு ஆர்மோனியபெட்டியைப் பரிசளித்து விட்டுச் சென்றார்.

எம்.எஸ்.வியின் சாதனைகளையும் பெருமைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். இதை ஒரு பாரதம் போல் விரிவாகச் சொல்ல ஒரு வியாசரும், அதை எழுத ஒரு விநாயகரும் வேண்டும்!

எம்.எஸ்.வி. அவர்கள் பாவத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதற்கு ஒரே ஒரு சான்று. பாலசந்தரின் திரைப்படங்களின் துவக்கத்தில் 'அகர முதல' என்ற திருக்குறள் வரும். ஆரம்ப காலங்களில் இதைப் பாடியவர் எம்.எஸ்.வி. பிற்காலத்தில் வேறொரு இசை அமைப்பாளரின் குரலில் இதைப் பாட வைத்து மாற்றி விட்டார் பாலசந்தர்.

இங்கே அவரது இரண்டு திரைப்படங்களுக்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். திரைப்படங்களின் துவக்கத்தில் வரும்  'அகர முதல..' என்ற திருக்குறளை மட்டும் கேளுங்கள். 'அவள் ஒரு தொடர்கதை'யில் இதைப் பாடி இருப்பவர் எம்.எஸ்.வி. 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் இதைப் பாடி இருப்பவர் இன்னொருவர். எம்.எஸ்.வி. பாவத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.



தமிழ் மொழி பற்றிய மூன்று பாடல்களுக்கு இசை அமைக்கும் பெருமை எம்.எஸ்.விக்குக் கிடைத்திருக்கிறது.

மனோன்மணி சுந்தரம் பிள்ளை எழுதிய 'நீராரிம் கடலுடுத்து' என்று துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து. 1968ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்காக இசை அமைக்கப்பட்ட இப்பாடல் அன்று முதல் இன்று வரை தமிழக அரசின் நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப் படுகிறது.

பாரதிதாசன் எழுதிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற பாடலுக்கு 'பஞ்சவர்ணக்கிளி' படத்துக்காக இசை அமைத்தார் எம்.எஸ். வி. மயக்கும் இனிமை கொண்ட மெட்டும், அடுக்கடுக்காய் வந்து விழும் வாத்தியக் கருவிகளின் இசை அழகும் சேர்ந்து இந்தப் பாடலைத் தமிழ்த்தாய்க்கு ஒரு அழகான அணிகலனாகத் திகழச் செய்கிறது.

மூன்றாவதாக 'கலங்கரை விளக்கம்' படத்துக்காக பாரதிதாசனின் 'சங்கே முழங்கு' என்ற பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி. இது தமிழர் பண்பாட்டையும், பெருமைகளையும் பெருமிதத்துடன் பறை சாற்றும் ஒரு அற்புதமான பாடல்.

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், தமிழ்த்தாய்க்கு வணக்கத்தைத் தெரிவிக்கும் 'நீராரும் கடலுடுத்த' இயற்றமிழைக் குறிப்பதாகவும், தமிழின் இனிமையைக் கொஞ்சும் இசையில் கூறும் 'தமிழுக்கும் அமுதென்று பேர்' இசைத்தமிழைக் குறிப்பதாகவும்', தமிழர் பண்பாட்டையும், தமிழர் ஒற்றுமையையும் உரத்த குரலில் பறை சாற்றும்  'சங்கே முழங்கு' நாடகத் தமிழைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

எனவே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பெருமையை நிலை நாட்டும் வகையில் இந்த மூன்று பாடல்களை அமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி என்று கொள்ளலாம். அரசு இவருக்குக் கொடுக்கத் தவறிய அங்கீகாரத்தை  விடப் பல மடங்கு சிறப்பான அங்கிகாரத்தைத் தமிழ் தெய்வம் இந்த இசை மேதைக்கு வழங்கி இருக்கிறது. இதை விட வேறென்ன பெருமை வேண்டும்?

தமிழ்த்தாயின் தவப் புதல்வரான கண்ணதாசானின் மீது  இசைத்தாய் அன்பு கொண்டு அவரது பாடல்களை எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன் போன்றோரின் இசை அமைப்பில்  சிரஞ்சீவித்துவம் கொண்ட பாடல்களாக இவ்வுலகில் நிலை பெறச் செய்திருக்கிறாள்.

இசைத்தாயின் தவப்புதல்வரான எம்.எஸ்.வியின் மீது தமிழ்த்தாய் அன்பு கொண்டு அவர் மூலம் இயல், இசை, நாடகம் என்ற தனது மூன்று வடிவங்களுக்கும் காலத்தால் அழியாத இசை வடிவம் அமைக்கச் செய்திருக்கிறாள்.

தமிழாலும் இசையாலும் ஒன்று பட்டு, இசையையும் தமிழையும் வளர்த்த இந்த இரு கலை மேதைகளின் பிறந்த நாட்கள் ஒரே மாதத்தில், ஐந்து நாட்கள் இடைவெளியில் அமைந்திருப்பது தற்செயலாக அமைந்த செயல் அல்ல!