நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.
பாரதியாரின் கவிதையில் 'எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்' என்ற வரியைப் படிக்கும்போது (கேட்கும்போது) எனக்குச் சற்று நெருடலாக இருக்கும். 'என்ன இது, பாரதியார் தன்னைத்தானே பெரிய அறிவாளி என்று சொல்லிக்கொள்வது போல் தொனிக்கிறதே இந்த வரி!'
இந்த வரியை பாரதியார் வேறொரு பொருளில்தான் எழுதியிருப்பார் என்று சமீபத்தில்தான் எனக்குத் தோன்றியது (என் புத்திக்கு உறைத்தது என்றும் சொல்லலாம்!)
அறிவு என்று பாரதியார் குறிப்பிடுவது அறிவாற்றலை (intelligence) அல்ல, சிந்திக்கும் திறனை.
சிந்திக்கும் திறன் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலோர் அதைப் பயன் படுத்துவதில்லை. எனவே அவர்களிடம் உள்ள இந்தச் சிந்தனை நெருப்பு சாம்பல் படிந்து நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. ஊதினால்தான் அடியில் நெருப்பு கனன்று கொண்டிருப்பதே தெரியும்.
ஆனால் சிந்தனைத் திறனைப் பயன்படுத்துபவர்களிடம் அந்தத் திறன் சுடர் விட்டு எரியும் நெருப்பாக இருக்கும். இதைத்தான் சுடர் விடும் நெருப்பு என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.
ஒருவர் தன் சிந்தனைத் திறனைச் சுடர் விடும் நெருப்பாக வைத்திருப்பாரா அல்லது நீறு பூத்த நெருப்பாக அடக்கி வைத்திருப்பாரா என்பதும் கடவுள் சித்தம்தான். அதனால்தான் "எனைச் சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?" என்கிறார் பாரதியார். ('அவன் அருளால் அவன் தாள் பணிந்து' என்று ஆழ்வார் கூறுவதற்கு ஒத்த கருத்து இது. 'கடவுளிடம் பக்தி கொள்வதற்கும் கடவுளின் அருள் வேண்டும்' என்கிறார் ஆழ்வார் ! அது போல் ஒருவர் தன் அறிவுத் திறனைச் சுடர் விடும் அளவுக்கு வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதும் இறைவன் தீர்மானிப்பதுதான்!)
சரி, 'சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?' என்று பாரதியார் ஏன் நொந்து கொள்கிறார்? அப்படி இருப்பது நல்ல விஷயம்தானே?
சிந்தனைத் திறனைப் பயன்படுத்தியதால்தான் பாரதியாரால் வேதங்களைப் போற்றியபோதும், மனு நீதியை நிராகரிக்க முடிந்தது. நம் பாரம்பரியம் பற்றிப் பெருமை கொண்டபோதும், சாதிப்பாகுபாடுகளைச் சாட முடிந்தது. இதனால் அவருக்கு எதிர்ப்புகளும், சங்கடங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால்தான், "என் சிந்தனையைச் சுடராக இருக்கும்படி ஏன் வைத்திருக்கிறாய்? அப்படி இல்லாவிட்டால் மற்றவர்களைப் போல் நானும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இசைவாக நடந்து கொண்டு இந்தக் கண்டனங்களுக்கும், சங்கடங்களுக்கும் ஆளாகாமல் இருந்திருப்பேனே!' என்று அங்கலாய்க்கிறார் போலும்!
இன்றும் 'தேச நலன்,' 'மத நம்பிக்கை,' 'பாரம்பரியப் பழக்கம்,' போன்ற ஏதாவது ஒரு முத்திரை குத்தப்பட்டு வழங்கப்படும் விஷயங்களை அனைவரும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கேள்வி கேட்பவர்கள் அல்லது அவற்றுக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் தேச விரோதிகள், மத விரோதிகள், அந்நிய நாட்டுக் கைக்கூலிகள் என்றெல்லாம் வசை பாடப்படுகிறார்கள்.
சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால் இவர்கள் INTELLECTUALS என்று முத்திரை குத்தப்பட்டு . வசை பாடப்படுகிறார்கள்! உயர்ந்த பொருள் உள்ள இந்த வார்த்தை இன்று ஒரு வசைச்சொல்லாகப் பயன்படுத்துகிறது! பாரதியார் 'எனைச் சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?' என்று கடவுளிடம் நொந்து கொண்டதை இதனுடன் ஒப்பிட்டால், பாரதியாரின் மன வருத்தத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.