Wednesday, May 13, 2020

38. குறையொன்றுமில்லை


இன்று (3.05.2020) ஹிந்து பெங்களூர் பதிப்பில் (பக்கம் 2 இல்) ''Man cheated of Rs.45 lakh" என்ற செய்தியை அதிக ஆர்வம் இன்றிப் படித்தேன்.

அமெரிக்க லாட்டரியில் 1 மில்லியன் டாலர் ரூபாய் பரிசு, குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருதல், அரசாங்க கிராண்ட் (இலவச நிதி) பெற்றுத் தருதல், சிலபொருட்களை சப்ளை செய்தல் போன்ற வாக்குறுதிகளில் ஏமாந்து பலர் இது போல் பெரும் தொகையைப் பறி கொடுத்து வருவது அடிக்கடி நடந்து வரும் சம்பவம்தான். இவை தவிர வங்கிக் கணக்குகளிலிருந்து இணையதளம் மூலம் மோசடியாகப் பணம் திருடப்படுவது வேறு.

ஆனால் இந்தச் சம்பவம் சற்று வித்தியாசமானது. 75 வயதான ஒரு தொழிலதிபர் 2018 இல் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் சந்தித்த ஒரு நபர் திருப்பதி அறக்கட்டளையில் தனக்கு இருக்கும் உயர்நிலைத் தொடர்புகளைப்  பயன்படுத்தி, தொழிலதிபருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னதை நம்பி அவருக்கு 45 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்திருக்கிறார்.

பணம் எப்படிக் கொடுக்கப்பட்டது, பணம் பெற்றவரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டதா போன்ற விவரங்கள் இந்தச் சுருக்கமான செய்தியில் இல்லை.

முதலில் பணத்தைப் பறி கொடுத்தவருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில் செய்து பணம் ஈட்டுவது எளிதல்ல. அவ்வாறு ஈட்டிய பணத்தை ஒருவர் இவ்வளவு எளிதாக அடித்துக்கொண்டு போவது கொடுமைதான். ஏமாற்றியவர் பிடிபட்டுப் பணத்தை இழந்தவருக்குப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.

ஆயினும் சிறப்பு தரிசனத்துக்காக ஒருவர் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார் என்பது எனக்கு வருத்தத்தையும், கவலையும் அளிக்கிறது.

ஒரு பெரிய கோவிலில் நான் தரிசனத்துக்காகக் காத்திருந்தபோது, சிலர் வரிசையில் நிற்காமல் நேரடியாக சந்நிதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊரில் வசிப்பவர்கள் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேரே சந்நிதிக்குச் சென்று இறைவனை தரிசிக்கும் முறை இருப்பதாக அப்போது அறிந்தேன். அதுவே எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது -. கட்டணச் சேவையிலும் சீசன் டிக்கட், ஆயுள் சந்தா போன்ற முறைகள் வந்து விட்டனவே என்று நினைத்து!

ஆனால் இது அது போல் கூட இல்லை. தன் உயர்மட்டத் தொடர்புகளைப்  பயன்படுத்தி சிறப்பு தரிசனத்துக்கு வழி செய்வதாக ஒருவர் சொன்னதை ஏற்றுக் கொள்வது என்பதைக் கடவுள் நம்பிக்கை உள்ள என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

இது போல் முறையற்ற வழிகளில் கடவுளை தரிசனம் செய்வது ஆன்மீக நெறிமுறைக்கு முரணானது இல்லையா? தங்கள் தொடர்புகளைப்  பயன்படுத்தி வரிசையில் நிற்காமல் நேரே சந்நிதிக்குச் சென்று சிலர் கடவுள் தரிசனம் செய்வதை நாம் பல கோவில்களில் பார்க்கலாம். இவர்களில் சிலர் "நல்ல தரிசனம் கிடைத்தது" என்று பெருமையாகக் கூட சொல்லிக் கொள்வார்கள்.

அறம் இல்லாத இறை வழிபாடு இறை நம்பிக்கைக்கே முரணானது என்பது என் கருத்து.

கடவுளை தரிசிப்பதற்காக இத்தனை பெரிய தொகையைச் செலவழிக்கத் தயாராக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு உதவ ஒரு சிறு தொகையையாவது செலவழிக்க முன் வருவார்களா என்ற கேள்வி எழுகிறது.

45 லட்ச ரூபாயை வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களை உருவாக்கலாம். ஏன் நாம் இருக்கும் இடத்திலேயே  திருப்பதி கோவிலைப் போன்றே ஒரு சிறிய கோவிலைக் கட்டலாம்!

கொரோனாவுக்குப் பிறகு கோவில்களில் வழிபாடு முறை எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. திருப்பதியில் நீண்ட வரிசைகள் இருக்குமா என்று தெரியவில்லை.

இன்று "ஆன்மீகம்" பற்றிப் பலரும் பேசுகிறார்கள். அரசியலில் ஆன்மீகம் வேண்டும் என்கிறார்கள். முதலில் இறைவழிபாட்டில் ஆன்மீகம் வரட்டும்!