Tuesday, December 9, 2014

4. யானை


இன்று ஏன் யானையின் ஞாபகம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் யானையைப் பற்றிய நினைவு எனக்கு அடிக்கடி வருவதுண்டு.

யானை எனக்கு மிகவும் பிடித்த மிருகம் - ஏன் எல்லோருக்கும்தான்! யாருக்குத்தான் யானை பிடிக்காது? யானை, கடல், குழந்தை இவை மூன்றும் எப்போதுமே அலுக்காது என்று காலம் சென்ற என் அம்மா (முதலில் தாயார் என்று எழுதி விட்டுப் பிறகு அம்மா என்று திருத்தி இருக்கிறேன், தாயார் என்ற சொல்லை விட அம்மா என்ற சொல் நெருக்கமானதாகத் தோன்றியதால்!) அடிக்கடி சொல்லுவார். இந்தப் பட்டியலில் அம்மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏதாவது ஒரு கதையில் யானையை மோசமாகக் காட்டியிருந்தால் அதை என்னால் ஏற்க முடியாது. யானையை விட சிங்கம் பலம் வாய்ந்தது என்று யாராவது சொன்னாலும் என்னால் ஏற்க முடியாது. ஏன் காட்டுக்கு ராஜா சிங்கம் என்பதை ஏற்பது கூட எனக்குக் கசப்பான விஷயம்தான். யானைதானே அரசனாக இருக்க வேண்டும்?

எனக்கு யானையை அதிகம் பிடிப்பதற்கு மனரீதியான காரணங்கள் உண்டு. நம் எல்லா விருப்பு வெறுப்புகளுக்குமே மனரீதியான காரணங்கள் உண்டு என்று அறிகிறேன். என் ஆழ்மன உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் ஒரு பயிற்சியின்போது நான் உணர்ந்த விஷயம் இது.

நம் சிறு வயது அனுபவங்கள் நம் ஆழ் மனதில் பல விருப்பு வெறுப்புகளையும், கருத்துக்களையும் உருவாகுகின்றன. எனக்கு மூன்று வயது இருக்கும்போது என் தம்பி பிறக்கும் சமயம் என் அம்மாவுடன் என் அம்மாவின் பிறந்த வீட்டில் சில மாதங்கள் இருந்தேன். அப்போது என் அப்பாவைப் பிரிந்திருந்த ஏக்கம் என் மனதில் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.

என் அப்பா இருந்த ஊர், என் அம்மாவின் பிறந்த ஊர் இரண்டுமே (அன்றைய ஒன்று பட்ட) தஞ்சை மாவட்டத்தில்தான் இருந்தன. இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் நூறு கிலோமீட்டர்கள்தான் இருக்கும். ஆயினும். இந்த இரண்டு ஊர்களுக்குமிடையே வந்து போவது அவ்வளவு சுலபம் இல்லை. அன்றைய போக்குவரத்து வசதிகளைப் பயன் படுத்தி ஒரு ஊரிலிருந்து காலை எட்டு மணிக்குக் கிளம்பினால் இன்னோரு ஊருக்கு மாலை ஆறு மணிக்கு வந்து சேரலாம்! அன்றைய பொருளாதாரச் சூழலில் பயணச் செலவு என்பதும் எப்போதாவது மட்டுமே செய்யக் கூடிய ஒரு ஆடம்பரம்தான்!

நீண்ட நாட்கள் கழித்து என் அப்பா வந்தார். ஒருவேளை என் தம்பி பிறந்தபின் குழந்தையைப் பார்க்க வந்திருக்கலாம். எனக்கு நினைவில்லை. ஆனால் நினைவு இருக்கக்கூடிய ஒரு விஷயம் அவர் என்னை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றது. கோவிலுக்குப் போனது எல்லாம் எனக்கு நினைவில்லை. ஆனால் கோவில் வாசலில் எனக்கு ஒரு மர யானை பொம்மை வாங்கிக் கொடுத்தது புகைப்படம் போல் மனதில் நிற்கிறது. அந்த நீல நிற பொம்மையைப் பல நாட்கள் வைத்திருந்ததாக நினைவு.

அத்துடன் என் அப்பா அடிக்கடி எங்களுக்கெல்லாம் யானையை வரைந்து காட்டுவார். மிக எளிதாக அவர் வரையும் அந்தப் படம் ஒரு கார்ட்டூன் போல் தோற்றமளித்தாலும் யானையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது என் அப்பாவுக்கும் யானையை மிகவும் பிடித்திருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை அறிய அவரது சிறு வயது அனுபவங்களுக்குள்தான் தேட வேண்டும்!

Monday, December 8, 2014

3. சேதன் பகத் மற்றும் பலர்

காலையில் எழுந்ததும் நேற்றைய ஹிந்துவில் (ஞாயிறு பதிப்பு) வந்த சேதன் பகத்தின் பேட்டியைப் படித்தேன். அவர் பேட்டியில் அலட்டல் சற்று அதிகமாக இருந்ததாக எனக்குத் தோன்றியது.

வெற்றி தரும் போதையை வெற்றி கொள்வது எல்லோருக்கும் கைவரக் கூடியதில்லை.முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒருமுறை கூறியது போல வெற்றியாளர்களை நாம் கேள்வி கேட்க முடியாது (You can't quarrel with success).  மோடி, ஜெயலலிதா போன்ற பலருக்கும் இந்தப் பழமொழி பொருந்தும்!

சேதன் பகத்தின் சமீபத்திய நாவல்  பாதிக் காதலி  (Half Girlfriend- இன்றைய மொழிப் பிரயோகத்தின்படி இதை செமி காதலி என்றும் - ஆங்கிலமும் தமிழும் கலந்து- மொழி பெயர்க்கலாம்!) எனக்கு ருசிக்கவில்லை.

அவருடைய முந்தைய நாவல்களான ஐந்து புள்ளி ஏதோ ஒன்று (Five point something) என் வாழ்க்கையின் மூன்று தவறுகள் (The three mistakes of my life) ஆகிய புத்தகங்களை ரசித்திருக்கிறேன். இவை இரண்டுமே இந்தியில் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. Five point something  என்ற நாவல் தமிழில் 'நண்பர்கள்' என்ற பெயரில் ஷங்கரின் இயக்கத்தில் வந்திருக்கிறது.

குறிப்பாக Five point something  என்ற நாவலில் இந்தியத் தொழில் நுட்பக் கழகங்கள் (IITs) ஏன் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதில்லை என்று சேதன் பகத் எழுப்பும்  கேள்வி பொருள் பொதிந்ததாக எனக்குத் தோன்றுகிறது. ஐ.ஐ.டி. கல்வி அங்கே படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பது சரிதான் - அதுவும் பெரும்பாலும் அமெரிக்காவில்! ஆனால் அது நம் நாட்டுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறதா என்ற கேள்வி சங்கடம் ஏற்படுத்தக் கூடியதுதான்.

ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் பலரும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றுதான். எனினும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த R.K.நாராயண், ராஜா ராவ், கமலா மார்க்கண்டேயா, நயன்தாரா சாகல், குஷ்வந் சிங் போன்றவர்கள் எழுத்தாற்றலிலும், படைப்பின் தரத்திலும் பெரிதும் மேலோங்கி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

ஒரு வேளை நான் ஒரு பத்தாம்பசலி (எத்தனை பேருக்கு இந்த வார்த்தையின் பொருள் தெரியும்? - old fashioned என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் இதுதான் என்று நினைக்கிறேன்) என்பதால் எனக்கு  அப்படித் தோன்றுகிறதோ என்னவோ! 

Sunday, December 7, 2014

2. நேற்றை நினைவூட்டிய இன்று

"இன்று ஹார்லிக்ஸ் கொடுத்தீர்களா" என்ற விளம்பரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் இது போன்ற இன்னொரு விளம்பரம் - பல ஆண்டுகளுக்கு முன் பார்த்தது நினைவுக்கு வந்தது.

நான் சிறுவனாக இருந்தபோது சில முக்கியமான ரயில் நிலையங்களில் 'இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்தீர்களா?' என்று ஒரு பெரிய விளம்பரப் பலகை ரயில் நிலையத்துக்கு வந்து போகிறவர்களைப் பார்த்துக் கேட்கும். அந்த விளம்பரப் பலகைகளில் விகடன் தாத்தாவின் உருவமும் இடம் பெற்றிருக்கும். விகடன் தாத்தாவே நம்மைப் பார்த்து அப்படிக் கேட்பதாகக் கூட வைத்துக் கொள்ளலாம். (இப்போதும் இந்த விளம்பரப் பலகைகள் சில இடங்களில் இருக்கலாம். ஆனால் நான் இதைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகி விட்டன.)

அப்போதெல்லாம் ரயில் பயணம் என்பது அடிக்கடி நடக்கும் விஷயம் இல்லை. அதுவும் குறிப்பாக கிராமத்தில் வளர்ந்த என் போன்றவர்களுக்கு ரயில் பயணம் என்பது எப்போதாவது நிகழ்கிற ஒரு திருவிழா. என் கிராமத்துக்கு அருகில் இருந்த ரயில் சந்திப்பு மாயூரம் (இப்போது மயிலாடுதுறை) எனவே நான் இந்த விளம்பரத்தை அதிகம் பார்த்தது மாயூரம் சந்திப்பில்தான்.

மாயூரம் சந்திப்பு என்றதும் எனக்கு நினைவு வருகிற இன்னொரு விஷயம் அந்த ஸ்டேஷனில் இருந்த IRR உணவு விடுதி. ரயில்வே கான்டீன்களில் கிடைக்கும் உணவின் தரம் பொதுவாக சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாத அந்தக் காலத்தில் மாயூரம் சந்திப்பின் உணவு விடுதிக்கு மிக நல்ல பெயர் உண்டு.

அந்த காண்டீனில் நான் உணவு அருந்திய சந்தர்ப்பங்களும் என் ரயில் பயணங்களைப் போலவே மிகக் குறைவுதான்.எப்போதோ ஒருமுறை என் மிகச் சிறிய வயதில் என் அப்பா வாங்கிக் கொடுத்த சாம்பார் சாதத்தின் ருசி இன்னும் என் நாக்கில் இருப்பதாகத் தோன்றுவது உண்மையா அல்லது பிரமையா என்று தெரியவில்லை.

இப்போது அந்த கான்டீன் பல விதங்களில் மாறியிருக்கும் என்று நினைக்கிறேன்.

'இன்று' என்ற இந்த வலைப் பதிவை 'நேற்றிலிருந்து' துவங்குகிறேன். இன்றைய 'இன்று' கூட நாளைய 'நேற்று'தானே!