இன்று ஏன் யானையின் ஞாபகம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் யானையைப் பற்றிய நினைவு எனக்கு அடிக்கடி வருவதுண்டு.
யானை எனக்கு மிகவும் பிடித்த மிருகம் - ஏன் எல்லோருக்கும்தான்! யாருக்குத்தான் யானை பிடிக்காது? யானை, கடல், குழந்தை இவை மூன்றும் எப்போதுமே அலுக்காது என்று காலம் சென்ற என் அம்மா (முதலில் தாயார் என்று எழுதி விட்டுப் பிறகு அம்மா என்று திருத்தி இருக்கிறேன், தாயார் என்ற சொல்லை விட அம்மா என்ற சொல் நெருக்கமானதாகத் தோன்றியதால்!) அடிக்கடி சொல்லுவார். இந்தப் பட்டியலில் அம்மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது ஒரு கதையில் யானையை மோசமாகக் காட்டியிருந்தால் அதை என்னால் ஏற்க முடியாது. யானையை விட சிங்கம் பலம் வாய்ந்தது என்று யாராவது சொன்னாலும் என்னால் ஏற்க முடியாது. ஏன் காட்டுக்கு ராஜா சிங்கம் என்பதை ஏற்பது கூட எனக்குக் கசப்பான விஷயம்தான். யானைதானே அரசனாக இருக்க வேண்டும்?
எனக்கு யானையை அதிகம் பிடிப்பதற்கு மனரீதியான காரணங்கள் உண்டு. நம் எல்லா விருப்பு வெறுப்புகளுக்குமே மனரீதியான காரணங்கள் உண்டு என்று அறிகிறேன். என் ஆழ்மன உணர்வுகளை வெளிக்கொண்டு வரும் ஒரு பயிற்சியின்போது நான் உணர்ந்த விஷயம் இது.
நம் சிறு வயது அனுபவங்கள் நம் ஆழ் மனதில் பல விருப்பு வெறுப்புகளையும், கருத்துக்களையும் உருவாகுகின்றன. எனக்கு மூன்று வயது இருக்கும்போது என் தம்பி பிறக்கும் சமயம் என் அம்மாவுடன் என் அம்மாவின் பிறந்த வீட்டில் சில மாதங்கள் இருந்தேன். அப்போது என் அப்பாவைப் பிரிந்திருந்த ஏக்கம் என் மனதில் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.
என் அப்பா இருந்த ஊர், என் அம்மாவின் பிறந்த ஊர் இரண்டுமே (அன்றைய ஒன்று பட்ட) தஞ்சை மாவட்டத்தில்தான் இருந்தன. இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் நூறு கிலோமீட்டர்கள்தான் இருக்கும். ஆயினும். இந்த இரண்டு ஊர்களுக்குமிடையே வந்து போவது அவ்வளவு சுலபம் இல்லை. அன்றைய போக்குவரத்து வசதிகளைப் பயன் படுத்தி ஒரு ஊரிலிருந்து காலை எட்டு மணிக்குக் கிளம்பினால் இன்னோரு ஊருக்கு மாலை ஆறு மணிக்கு வந்து சேரலாம்! அன்றைய பொருளாதாரச் சூழலில் பயணச் செலவு என்பதும் எப்போதாவது மட்டுமே செய்யக் கூடிய ஒரு ஆடம்பரம்தான்!
நீண்ட நாட்கள் கழித்து என் அப்பா வந்தார். ஒருவேளை என் தம்பி பிறந்தபின் குழந்தையைப் பார்க்க வந்திருக்கலாம். எனக்கு நினைவில்லை. ஆனால் நினைவு இருக்கக்கூடிய ஒரு விஷயம் அவர் என்னை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றது. கோவிலுக்குப் போனது எல்லாம் எனக்கு நினைவில்லை. ஆனால் கோவில் வாசலில் எனக்கு ஒரு மர யானை பொம்மை வாங்கிக் கொடுத்தது புகைப்படம் போல் மனதில் நிற்கிறது. அந்த நீல நிற பொம்மையைப் பல நாட்கள் வைத்திருந்ததாக நினைவு.
அத்துடன் என் அப்பா அடிக்கடி எங்களுக்கெல்லாம் யானையை வரைந்து காட்டுவார். மிக எளிதாக அவர் வரையும் அந்தப் படம் ஒரு கார்ட்டூன் போல் தோற்றமளித்தாலும் யானையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது என் அப்பாவுக்கும் யானையை மிகவும் பிடித்திருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கு என்ன காரணம் என்பதை அறிய அவரது சிறு வயது அனுபவங்களுக்குள்தான் தேட வேண்டும்!
No comments:
Post a Comment