Monday, April 13, 2015

11. "தமிழ்ப்" புத்தாண்டு வாழ்த்துக்கள்


அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இன்று புத்தாண்டுதான். ஆனால் இது தமிழ்ப் புத்தாண்டுதானா என்பது குறித்து எனக்கு ஐயப்பாடு உண்டு.

சரி. இன்று பிறந்திருக்கும் புதிய ஆண்டின் பெயர் என்ன? உங்களில் எத்தனை பேர்  பஞ்சாங்கத்தைத் தேடி ஓடுகிறீர்கள், எத்தனை பேர் புத்திசாலித்தனமாக இன்னொரு வலைப் பக்கத்தைத் திறந்து முக்காலும் உணர்ந்த முழு அறிஞர் கூகுள்  தாத்தாவின் உதவியை நாடுகிறீர்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

கண்டு பிடித்து விட்டீர்களா மன்மத ஆண்டின் பெயரை?

சரி அடுத்த கேள்வி. இந்த முறை பஞ்சாங்கம், கூகுள் போன்ற வழிகாட்டிகளை நாடாமல் பதில் சொல்லுங்கள்.

தமிழ் ஆண்டுகள் எத்தனை?

'அறுபது' என்று சொன்னவர்கள்  உஙளுக்கு நீங்களே ஐந்து மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளுங்கள்!

அடுத்த கேள்வி. இதற்கும் சரியாக பதில் சொன்னால் இன்னொரு ஐந்து மதிப்பெண்கள் உண்டு.

முதல் தமிழ் ஆண்டின் பெயர் என்ன?

இதற்கு பதில் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள், அவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், 'பழைய பஞ்சாங்கம்' என்று உங்களுக்குப் பட்டம் சூட்டி மகிழ்கிறேன்.

இந்தப் பெயர்களை நீங்கள் பஞ்சாங்கத்தில்தான் பார்க்க முடியும்! இதோ அறுபது வருடங்களின் பெயர்கள். அடுத்த ஆண்டு நான் இதே கேள்வியைக் கேட்டால் நீங்கள் சரியாக பதில் சொல்லிப் பரிசு வாங்கலாம்!

1. பிரபவ 2. விபவ 3. சுக்ல  4. பிரமோதூத  5. பிரஜோத்பத்தி  6. ஆங்கிரஸ  7.ஸ்ரீமுக  8. பவ  9.யுவ  10.  தாது  11.ஈஸ்வர  12.வெகுதான்ய  13.பிரமாதி 14.விக்ரம 15.விஷு  16.சித்ரபானு  17.சுபானு   18.தாரண  19.பார்த்திப  20.விய  21.சர்வஜித்  22. சர்வதாரி  23.விரோதி 24.விக்ருதி  25.கர  26.நந்தன  27.விஜய  28.ஜய  29.மன்மத  30.துர்முகி  31.  ஹேவிளம்பி  32.விளம்பி  33.விகாரி  34.சர்வாரி  35.பிலவ  36.சுபகிருது  37.  சோபகிருது  38.குரோதி 39.  விஸ்வாவசு  40.பராபவ  41.பிலவங்க  42.கீலக  43.சௌமிய  44.சாதாரண  45.விரோதிகிருது  36.பரிதாபி  47.பிரமாதீச  48.ஆனந்த  49.ராட்சஸ  50.நள 51.ப்ங்கள  52.காளயுக்தி  53.சித்தார்த்தி  54.ரௌத்ரி  55.துன்மதி  56.துந்துபி   57.ருத்ரோத்காரி 58. ரக்தாக்ஷி  59.குரோதன  60.அக்ஷய

எதற்கு இந்தப் பெயர்கள் எல்லாம் என்று கேட்கிறீர்களா?

அடுத்த கேள்வி கேட்கத்தான். ஆனால் இந்தக் கேள்விக்கு நீங்கள் புத்தகத்தைப் பார்த்தே பதில் சொல்லலாம்!

மேலே உள்ள பெயர்களில் எத்தனை பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்?

கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டு '0' என்று பதில் சொன்னால் உங்களுக்கு முழு மதிப்பெண்கள்!

இந்தக் கேள்வி என் பள்ளி நாட்களிலேயே  "தமிழ்" வருடங்களின் பெயர்களைப் படித்தபோதே என் மனதில் எழுந்தது.

கேள்வி பிறந்தது அன்று
பதில் கிடைக்கவில்லை இன்றுவரை!

முழுக்க முழுக்க சம்ஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட இவற்றை எப்படித் தமிழ் வருடங்கள் என்று சொல்கிறோம்? எங்கேயோ உதைக்கிறது.

'தமிழ்ப் புத்தாண்டு' என்ற பெயரே வினோதமாக இருக்கிறது. ஒரு மொழியின் பெயரில் ஒரு கால அட்டவணையா (calendar? மறுபடியும் உதைக்கிறது.

சிலர் சம்ஸ்கிருதப் பெயர்கள் பலவற்றை நாம் பயன்படுத்தவில்லையா என்று கேட்பார்கள். பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றைத் தமிழ்ப் படுத்தித்தான் பயன்படுத்துகிறோம். சம்ஸ்கிருதத்தில் கிருஷ்ணஹ என்று இருப்பதைத் தமிழில் கிருஷ்ணன் என்று சொல்கிறோம். அதுபோல் பிரபவ என்ற பெயர் பிரபவம் என்றாவது மாற்றப்பட்டிருக்க வேண்டும். இதற்கும் ஒரு பதில் இருக்கும். பெயருக்குப் பின் வருடம் என்று வருவதால் பிரபவம் வருடம் என்று சொன்னால் சரியாக இருக்காது. பிரபவ வருடம் என்றால்தான் இயல்பாக இருக்கும். இந்த வாதத்தின்படி பார்த்தால் கும்பகோணம் நகரம் என்று சொல்லக்கூடாது, கும்பகோண நகரம் என்றுதான் சொல்ல வேண்டும்!

முழுக்க முழுக்க சம்ஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட ஒரு கால அட்டவணையைத் தமிழ்க் கால அட்டவணை (Tamil calendar) என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது.

சித்திரை முதல் நாளில் நாம் கொண்டாடும் இந்தப் புத்தாண்டை 'இந்துப் புத்தாண்டு' என்று அழைக்கலாம், தமிழ்ப் புத்தாண்டு என்று அழைப்பதில் பொருத்தம் இல்லை. ஆனால் நாம் இதை 'இந்துப் புத்தாண்டு என்று சொன்னால் மற்ற மாநிலங்களில் உள்ள இந்துக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஆனால் தமிழர்கள் மீது எதை வேண்டுமானாலும் திணிக்கலாம். ஆயிரக்கணக்கான வருடங்களாக நாம் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடும் விதத்தை மாற்றி மஹாராஷ்டிராவில் கொண்டாடுவது போல் ஊர்வலமாகப் போய்க் கடலில் சிலைகளைக் கடலில் கரைப்பது என்ற முறையை நம் மீது திணிக்கவில்லையா! நாமும் அதைச் சற்றும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளவில்லையா?அதுபோல்தான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு விவகாரமும்!

என்னைப் பொறுத்தவரை சித்திரைத் திங்கள் முதல் நாளில் நாம் கொண்டாடுவது இந்துப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு இல்லை!

Sunday, April 12, 2015

10. நிறுத்துங்கள் தமிழ்க் கொலையை!

இன்று தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்ச்சி பார்த்தேன். 'தமிழோடு விளையாடு.' ஆஹா, அழகான தமிழ்ப் பெயராக இருக்கிறதே என்று நினப்பதற்குள், 'powered by' என்று ஆங்கிலம் வந்து விட்டது!

ஒரு நிகழ்ச்சிக்குத் தமிழில் பெயர் வைப்பவர்கள், (நிகழ்ச்சியை) 'வழங்குபவர்கள்' என்று தமிழில் சொல்லலாமே! 'powered by' என்று சொன்னால்தான் நிகழ்ச்சியின் பெயருக்குச் சக்தி பிறக்குமோ?

'சக்தி பிறக்குது மூச்சினிலே' என்று பாடிய பாரதி மூச்சடைத்துப் போயிருப்பார் இப்படிப்பட்ட தமிழ்க் கொலைகளைக் கண்டு (கேட்டு)!

தமிழ்க் கொலைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பல ஆங்கிலச் சொற்களுக்கிடையே சில தமிழ்ச் சொற்களைப் பேசி விட்டு அதைத் தமிழ் நிகழ்ச்சி என்று சொல்லிக் கொள்வது. இது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாள்தோறும் நடக்கிறது.

'தூய தமிழில் பேசுவது எப்படி' என்று ஒரு நிகழ்ச்சியை ஒரு தமிழ்ப் பற்று கொண்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்புவதாக வைத்துக் கொள்வோம். நிகழ்ச்சியை எப்படி அறிவிப்பார்கள்?  'தூய தமிழில் பேசுவது எப்படி?...  ஸ்பான்ஸர்ட் பை..!.'

இன்னொரு வகைக் கொலை, செய்திகள் போன்ற தமிழ் நிகழ்ச்சிகளிலேயே தமிழைக் கொலை செய்வது. இந்தக் கொலையும் அடிக்கடி நடக்கிறது. மிகவும் அதிகமாக நடக்கும் ஒரு வகைக் கொலை பன்மை எழுவாய்க்கு ஒருமை  வினைச்சொல்லைப் பயன்படுத்துவது. என்ன புரியவில்லையா? அதாவது plural subject-க்கு singular verb-ஐப் பயன்படுத்துவது. இப்போது புரிகிறதா?

'பரிசுகள் வழங்கப்பட்டது' போன்ற பன்மைப் பெயர்ச்சொல்லுக்கு ஒருமை வினைச்சொல்லை பயன்படுத்தும் தமிழ்க்கொலைகளை தொலைக்காட்சிகளில் நிறையக் கேட்கலாம். இதுவரை கேட்டதில்லை என்றால், இனி கவனித்துக் கேளுங்கள். நிறையவே கேட்பீர்கள்!

தமிழை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் பெருகி விட்டது. நாம் கற்ற மொழியான ஆங்கிலத்தில் பேசும்போது சிறு தவறு நேர்ந்தால் கூட அதைப் பெருமளவில் எள்ளி நகையாடும் இலக்கணப் பிரியர்கள், தமிழ் மொழிப் பயன்பாட்டில் செய்யப்படும் பெரும் தவறுகளையும் அபத்தங்களையும் கண்டு கொள்வதில்லை.

'ஒவ்வோரு பூக்களுமே சொல்கிறதே' என்ற திரைப்படப் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். பாடலில் உள்ள கருத்துக்களுக்காகப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற பாடல் இது. இதில் எனக்கு வேறு கருத்து இல்லை.

ஆனால் இந்த வரியை ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்துப் பாருங்கள்.
'Every flowers says' என்று வரும். இப்படி ஒரு வாக்கியத்தை யாராவது ஆங்கிலத்தில் பேசியோ, எழுதியோ இருந்தால் ஆங்கிலப் பிரியர்களான நாம் அவரைச் சும்மா வீட்டிருப்போமோ? 'ஐயோ அடிப்படை ஆங்கிலம் கூடத் தெரியவில்லையே இவருக்கு!  என்று அவரை  எள்ளி நகையாடிக் கூனிக் குறுகிப் போயிருக்கச் செய்திருக்க மாட்டோமா?

ஆனால் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தமிழ் இலக்கணத்தைப் பற்றி நமக்கென்ன கவலை? அப்படி யாராவது தவறைச் சுட்டிக் காட்டினால் கூட 'வேறு வேலை இல்லை இவருக்கு!' என்று அவரைச் சிறுமைப் படுத்துவோம்!

ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ப் பேச்சு இல்லை என்று ஆகி விட்டது. சரி, இதை மாற்ற முடியாது. இன்றைய நிலையில், ஆங்கிலம் கலக்காமல் யாராவது தமிழ்  பேசினால் அது செயற்கையாகத் தோன்றும். சிலருக்குக் கோமாளித்தனமாகக் கூடத் தோன்றலாம்! எந்த அளவுக்கு ஆங்கிலத்தைக்  கலப்பது என்று ஒரு வரைமுறையாவது வைத்துக் கொள்ளலாமே. இதை யாரும் வரையறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் தமிழ் பேசுபவர்கள் தங்கள் மனச்சாட்சியைக் கலந்து கொண்டு எந்த அளவுக்கு ஆங்கிலம் கலக்கலாம் என்று முடிவு செய்து கொள்ளலாமே!

முன்பெல்லாம் பால்காரர்கள் வீடுகளுக்குப் பால் ஊற்றுவார்கள் (சப்ளை செய்வார்கள் என்று சொன்னால்தான் புரியுமோ?) அப்போதெல்லாம் பால் வாங்குபவர்கள் பால்காரர்களிடம், "என்னப்பா பாலில் தண்ணீர் கலக்கிறாயா அல்லது தண்ணீரில் பால் கலக்கிறாயா?' என்று வேடிக்கையாகக் கேட்பது என்பது வாடிக்கையாக நடக்கக் கூடிய ஒன்று.

பாலில் தண்ணிர் கலப்பது வியாபாரம். தண்ணிரில் பாலைக் கலப்பது மோசடி. ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசுவதும் அப்படித்தான். அன்பு கூர்ந்து தமிழில் (அளவாக) ஆங்கிலம் கலந்து பேச முயற்சி செய்யலாமே. 'ட்ரை பண்ணுகிறேன்' என்று சிலர் சொல்வது என் காதுகளில் விழுகிறது. நன்றி!




Saturday, April 11, 2015

9. சாத்தான் ஓதும் வேதம்

'Extrovert,' 'Introvet' சொற்களைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழில் இவற்றுக்குச் சமமான வார்த்தைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. 'உட்புறப் பார்வை கொண்டவர்கள்,' 'வெளிப்புறப்பார்வை கொண்டவர்கள்' என்றெல்லாம் கடுமையாக மொழிமாற்றம் செய்ய விரும்பவில்லை. எளிதாகப் பொருள் விளங்க வேண்டுமானால் 'அமைதியானவர்கள்,' 'கலகலப்பானவர்கள்' என்று சொல்லலாம்.

இந்த இரண்டில் எந்த வகையாக இருப்பதிலும் சாதக பாதகங்கள் உண்டு. இந்த வகையாக இருப்பதுதான் சரி என்று வகுப்பது சரியாக இருக்காது.

பெரும்பாலானவர்கள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பார்கள். இவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் எந்த நிலைக்கும் மாறிக் கொள்ளலாம்!

பொதுவாக Introverts-க்கு நண்பர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள். இவர்கள் அதிக நேரம் தனிமையில் இருக்க நேரிடும். சிலர் இந்தத் தனிமையை விரும்புவார்கள். சிலர் விரும்ப மாட்டார்கள்.

தனிமையை விரும்பாதவர்கள் தனிமையிலிருந்து எப்படி விடுபடுவது என்ற கவலையிலும், மனப்போராட்டத்திலும் விரக்தி அடைவார்கள்.

தனிமையை விரும்புபவர்கள், தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு படிப்பிலோ வேறு பொழுதுபோக்குகளிலோ தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைவார்கள். இந்த அனுபவம் அவர்களை மேலும் தனிமையை நாடச் செய்யும். அவர்கள் இன்னும் தீவிரமான Introverts-ஆக மாற வாய்ப்பு உண்டு.

கலகலப்பானவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். பெரும்பாலும் மற்றவர்களுடன் இருப்பதால் இவர்களிடம் உற்சாகம், தன்னம்பிக்கை ஆகிய ஊக்கிகள் அதிகமாக இருக்கும். இவர்கள் முதுகுக்குப் பின்னே இவர்களை , 'போர்,' 'ஓட்டை வாயன்,' 'ஆளை விட மாட்டான். பேசிப் பேசியே கொன்று விடுவான்' என்றெல்லாம் சிலர் பேசலாம்.

ஆயினும் மொத்தமாகப் பார்க்கும்போது, இவர்கள்  popular-அக இருப்பார்கள். அதாவது இவர்கள் நட்பை விரும்புபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். Contacts, Network போன்ற வியாபாரத்துக்கு உதவும் சங்கதிகளை இவர்கள் நிரம்பப் பெற்றிருப்பார்கள். அதனால் இவர்கள் தங்கள் contacts-ஐ வியாபார நோக்கில் பயன்படுத்துவார்கள் என்பது பொருளல்ல.

எனக்குத் தெரிந்த பல Extrovertsகள் சுயநலம் இல்லாமல் தங்கள் contacts-ஐப் பொதுநலத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். நட்பு என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத பல Extroverts உண்டு.

நீஙல் Extrovert-ஆ Introvert-ஆ?

என் அனுபவத்தில், இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொல்லப் பலரும் தயங்குவார்கள். இதற்கு ஒரு முக்கியமான காரணம், இந்த இரண்டில் எதுவாக இருப்பதில் பெருமை உண்டு என்று அவர்கள் தீர்மானிக்க முடியாததால்தான்! நான் தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தும்போது இந்தத் தயக்கத்தைப் பார்த்திருக்கிறேன்.

நான் முன்பே சொன்னதுபோல், இதில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று எதுவும் இல்லை.

இது ஒருவரின் இயல்பான குணமாக இருக்கலாம் . ஆயினும் காலப்போகில் சூழ்நிலைகளின் தாக்கத்தினால் இந்த நிலை மாறக்கூடும்.

நான் Introvert-தான். இதனால் எனக்கு நன்மைகள், இழப்புகள் இரண்டுமே ஏற்பட்டிருக்கின்றன. இழப்புகளே அதிகம் என்பது எனது மதிப்பீடு.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்திதான் இந்தப் பதிவை நான் எழுதக் காரணம்.

மர்ரே மாநிலப் பலகலைக் கழகம், வேக் வனப் பல்கலைகழகம் ஆகியவை தனிதனியே நடத்திய  ஆராய்ச்சிகளின் முடிவுகள் Extroverts-க்கே சாதகமாக இருக்கின்றன.

Fortune 1000 பட்டியலில் வரும் உலகின் மிகச் சிறந்த ஆயிரம் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளில் மிகப் பெரும்பாலோர் Extrovets-தான்.  உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கான வாய்ப்பு Introverts-ஐ விட Extroverts-க்கேஅதிகம் இருக்கிறது. அத்துடன் Introverts-ஐ விட Extroverts-ஆலேயே தங்கள் வேலை, சொந்த வாழ்க்கை இரண்டையும் ஒருசேர நிர்வகிக்க முடிகிறது.

இதைப் படிக்கும் உங்களில் Extroverts இருந்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். Introvets இருந்தால், உங்களை மாற்றிக்கொள்ள முயலுங்கள். இது மிகவும் சுலபம். வாய் திறந்து அதிகம் பேச வேண்டும், அவ்வளவுதான். உளறினாலும் பரவாயில்லை. அதுவும் அதிகம் பேரிடம் பேச வேண்டும், அறிமுகம் இல்லாதவர்கள் உட்பட.

அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ள உங்களிடம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் இருக்கிறது. அதன் பெயர் புன்னகை. நீங்கள் யாரிடமாவது பேச முயன்று அவர்கள் சரியாக பதில் சொல்லா விட்டால், 'ஓஹோ! இவர் Introvertபோலிருக்கிறது!' என்று பரிதாபப் பட்டு விட்டு, விலகி விடுங்கள்.

நான் முன்பே சொன்னபடி, நான் ஒரு Introvert. இந்தப் பதிவின் தலைப்பின் பொருள் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும்!

Friday, April 10, 2015

8. காலம் கெட்டு விட்டதா?


1980களில் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மொழியை நாம் உபயோகிப்பதில் முன்பு இருந்ததற்கும், அப்போது (80-களில்) இருந்ததற்குமான சில மாற்றங்களை ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். உதாரணமாக 'முன்பெல்லாம் வயதில் பெரியவர்களைப் 'பெரியவர்' என்று மரியாதையாகக் குறிப்பிடுவோம். இப்போது 'பெரிசு' என்று சொல்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். மற்ற உதாரணங்கள் எனக்கு நினைவில்லை.

எண்பதுகளில் இந்த மாற்றம் என்றால், இப்போது?

பெரியவர்களிடம் மரியாதை குறைந்து விட்டதா?

இந்தக் கேள்விக்கு விடை காணுமுன், இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

1962-இல் வெளியான 'பாச மலர்' படத்தில் இடம் பெற்ற 'எங்களுக்கும் காலம் வரும்' என்ற பாடலின் பல்லவி இது.

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ வைப்போமே!

என்ன ஒரு பரந்த சிந்தனை! 'எனக்கு வாழ்வு வரும்போது நான் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்' என்ற இந்த உயர்ந்த எண்ணத்தைப் பாடலில் வடித்தவர் கண்ணதாசன்.

எண்பதுகளின் இறுதியில் வெளியான 'படிக்காதவன்' என்ற படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. தன் தம்பி  பாஸ் செய்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் கதாநாயகன் பாடுகிறான்:
'சொல்லி அடிப்பேனடி!'

இவர் தம்பி பாஸ் செய்ததற்கு இவர் மற்றவர்களை அடிப்பாராம்! எப்படி இருக்கிறது!

இது நச்சயமாக மதிப்பீடுகளின் வீழ்ச்சியைத்தான் காட்டுகிறது.

இப்போது முந்தைய கேள்விக்கு வருவோம். பெரியவரை 'பெரிசு' என்று குறிப்பிடுவது மரியாதையான பழக்கங்கள் தேய்ந்து விட்டதைக் காட்டுகிறதா?

நான் அப்படி நினைக்கவில்லை. வார்த்தைகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் எண்ணங்களிலோ மதிப்பீடுகளிலோ மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கொள்ள முடியாது.

பொதுவாக, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், பேச்சு வழக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னை விட இப்போது இன்னும் சற்று வெளிப்படையாகப் பேசுகிறோம். ஒரு விதத்தில் இது நல்ல மாற்றம் என்று கூடக் கூறலாம்.

மொத்தத்தில் பார்க்கும்போது, கால ஓட்டத்தில் மாறுதல்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாது. சில மாற்றங்கள் வரவேற்கத் தக்கவைதான்.

ஆயினும் மதிப்பீடுகளின் வீழ்ச்சி கவலை அளிக்கக் கூடியது. மதிப்பீடுகள் வீழ்ச்சி அடைந்து விட்டன என்று ஒரு திரைப்படப் பாடலை வைத்துச் சொல்லவில்லை.

பொதுவாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிகவும் குறைந்து விட்டது. கூட்டுக் குடும்பம் போய், இப்போது கணவன், மனைவி, குழந்தை என்று மூவர் இருக்கும் குடும்பங்களிலேயே, சுதந்திரம் என்ற பெயரில், ஒவ்வொருவரும் - குழந்தை உட்பட - தங்கள் தனித்தன்மையை காத்துக் கொள்வதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

காலம் கெட்டு விட்டது என்ற பொதுவான புலம்பலை நான் ஏற்கவில்லை. ஆனால் நல்ல விஷயங்கள் பல தேய்ந்து வருவது நிச்சயம் வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. என்னென்ன விஷயங்கள் அவை என்று நான் பட்டியல் போட விரும்பவில்லை. உதாரணத்துக்கு ஒன்றிரண்டைக் குறிப்பிட்டேன்.

எந்தெந்த மாற்றங்கள் நமக்கு நன்மை பயப்பவை என்று நாமே சிந்தித்து அவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வர வேண்டும். இது என் விருப்பம்தான். நடைமுறையில் இது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

Thursday, April 9, 2015

7. காலம் மாறிப் போச்சு!


மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற தத்துவம் புளித்துப் போகும் அளவுக்குப் பேசப்பட்டு விட்டது.

மாற்றத்தைத் தவிர, மாறாத இன்னொரு விஷயம் உண்டு. 'காலம் மாறி விட்டதே' என்று ஒவ்வொரு தலைமுறையும் புலம்பும் பழக்கம்தான் அது. காலம் மாறும் என்பதை நம் நாட்டின் புராணங்களும், இதிகாசங்களும் அறுதியிட்டுச் சொல்லியிருக்கின்றன. ஒவ்வொரு யுகத்திலும் நல்லவை தேய்ந்து அல்லவை பெருகி, கலி யுகத்தில் இது உச்சக்கட்டத்தை எட்டும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது,  புராணம் படிக்காதவர்களுக்கும் நன்கு தெரியும். இந்தப் புராணத்தைத்தான் பலரும் பாடிக் கொண்டிருக்கிறார்களே!

'காலம் மாறிப்போச்சு' என்று ஒரு படம் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் வெளி வந்தது. ஜெமினியின் தயாரிப்பில் வெளி வந்த இந்தப் படத்தில் ஜிக்கி பாடிய 'ஏரு பூட்டிப் போவாயே' என்ற பாடல் மிகப் பிரபலமானது. இந்தப் பாடல் காட்சியில் பிரபல இந்தி நடிகை வஹிதா ரஹ்மான் நடித்திருக்கிறார் என்பது சிலருக்கு வியப்பான செய்தியாக இருக்கும். அவர் செங்கல்பட்டில் பிறந்தவர் என்ற (Youtube-இல் ஒருவர் குறிப்பிடப்பட்டிருக்கும்) செய்தி அதை விட ஆச்சரியமாக இருக்கும். இந்தப் பாடல் காட்சியின் காணொளி இணைப்பு இதோ.



இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் காலம் மாறிப் போச்சு என்ற பேச்சு எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாகத்தான். 1996-இல் இதே பெயரில் இன்னொரு தமிழ்ப் படம் வெளியானது. காலம் மாறினாலும், திரைப் படங்கள் எடுக்கப்படும் விதம் மாறினாலும், டைட்டில் மட்டும் மாறவில்லை!

நம் வாழ்க்கை வசதிகளில் குறிப்பாக திரைப்பட இசையில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் வந்திருக்கின்றன என்பதைப் பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் தயாரித்திருக்கும் சிறகடிப்பேன் என்ற ஆல்பத்தில் 'காலம் மாறிப்போயாச்சே' என்ற பாடலில்  ஒரு தாத்தாவாக அந்தக் கால இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனும் அவரது பேத்தியாக இன்றைய பின்னணிப் பாடகி ஸ்ரீஷாவும் பாடல் மூலம் பகிர்ந்து கொள்வதை இந்தக் காணொளியில் காணலாம்.



காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது, நாமும் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்புறம் ஏன் காலம் மாறிப் போய் விட்டது என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்?

இதற்கு ஒரு காரணம் உண்டு. சாதாரண மனிதர்கள் 'காலம் மாறிப் போச்சு' என்று சொல்வதில்லை, 'காலம் கெட்டுப் போய் விட்டது' என்றுதான் சொல்வார்கள்.

உண்மையிலேயே காலம் கெட்டு விட்டதா? இதைப் பற்றி நாளைய 'இன்று'வில் பார்க்கலாமே!

Wednesday, April 8, 2015

6. விபத்திலிருந்து தப்பிய பின்

இன்று ஒரு விபத்திலிருந்து தெய்வாதீனமாகத் தப்பினேன். தெய்வாதீனம் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று என் இரு சக்கர வாகனம்  ஒரு காரின் மீது மோதித் தள்ளப்பட்டபோது கீழே விழாமல் வண்டியைச் சற்று தூரம் ஓட்டிப்போய் நிறுத்தியது எப்படி என்பது எனக்கே விளங்கவில்லை. இன்று நிச்சயம் அடிபடப் போகிறேன் என்று நினைத்த பிறகு இது நிகழ்ந்தது அதிசயம்தான்.

இரண்டாவது காரணம் பொதுவாக வண்டி ஓட்டிச் செல்லும்போது நான் எப்போதும் செய்வதுபோல் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக்கொண்டு போனேன். (ஒரு வேளை வண்டி ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு நான் இறக்க நேரிட்டால் எனக்கு வைகுண்டப் பதவி நிச்சயம் என்று அவ்வப்போது விளையாட்டாக நினைத்துக் கொள்வது உண்டு.) இன்று வைகுண்டத்திலிருந்து  அழைப்பு வந்து, பிறகு அது கடைசித் தருணத்தில் திரும்பப் பெறப்பட்டதாகத் தோன்றியது!)

விபத்து எப்படி நிகழ்ந்தது? ஒரு சிக்னலில்  நான் வலது புறம் திரும்பிக்கொண்டிருந்தபோது எனக்கு முன்னே சென்று கொண்டிருந்த கார் நான் எதிர்பாராமல் பின்புறம் திரும்பியபோது (U- டர்ன் எடுத்தபோது) பின்னே வந்த நான்  காரில் பக்கவாட்டில் மோத நேர்ந்தது..

ஒரு வழியாகச் சமாளித்துச் சற்று தூரம் வண்டியை ஓட்டி நிறுத்திய பிறகு திரும்பிப் பார்த்தேன்.  கார் எனக்குச் சற்றுப் பின்னால் நின்று கொண்டிருந்தது. சுற்றியிருந்த மற்ற வாகன ஓட்டிகள் எதுவும் பேசாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. என் அருகில் நின்ற இரு சக்கரப் பயணி மட்டும் கார்க்காரரை மெல்லிய குரலில் எனக்கு மட்டும் கேட்கும்படி குறை கூறினார்.

சில வினாடிகளுக்குப் பின் காரை ஓட்டியவர் இறங்கி வந்து, "நான் இன்டிகேடர் போட்டுத்தானே வந்தேன்? நீங்கள் ஏன் என் மீது மோதினீர்கள்?" என்றார். "நீங்கள்தான் சற்றும் எதிர்பாராமல்  திரும்பினீர்கள்" என்றேன் நான். "காரை ரிப்பேர் செய்ய ஐயாயிரம் ரூபாய் செலவாகுமே, அதை யார் கொடுப்பார்கள்?" என்றார் அவர். "என் வண்டி எந்த அளவுக்குச் சேதம் அடைந்திருக்கிறது என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்" என்றேன் நான். மனதுக்குள், 'நான் கீழே விழுந்து எனக்கு அடிபட்டிருந்தால் உங்கள் நிலைமை என்ன ஆகியிருக்கும்?' என்று நினைத்துக் கொண்டேன். பிறகு அவர் போய் விட்டார்.

பொதுவாக இதுபோன்ற விபத்துகளின்போது  நாம் மற்றவர்களைக் குறை கூறுவது இயல்பு. அதனால், 'நான் ஏதாவது தவறு செய்திருப்பேனோ?' என்று யோசித்துக்கொண்டே வந்தேன். விபத்து நடந்ததற்கான முக்கிய காரணம் ஒரு வாகனம் வலது பக்கம் திரும்புமா அல்லது  பின்புறமாகத் திரும்புமா (U-டர்ன்) என்பதில் ஏற்படும் குழப்பம்தான் என்று தோன்றியது.

பல சிக்னல்களில் வலது புறம் திரும்ப முயலும் வாகனங்களுக்கும், பின்புறம் திரும்ப முயலும் வாகனஙளுக்கும் இடையே நடக்கும் இழுபறியைப் பார்த்திருக்கிறேன். சிக்னலில் போகுவரத்து அதிகம் இருக்கும்போது எல்லா வாகனங்களும் மெதுவாக  ஊர்ந்து செல்லும்போது இது போன்ற விபத்துக்கள் தவிர்க்கப்படும். போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும்போது, வாகனங்கள் சிக்னல் விளக்கு மாறுவதற்குள் அவசரமாகக் கடக்க முயலும்போது இதுபோன்ற விபத்துக்கள் நிகழ வாய்ப்புக்கள் அதிகம்.

சிக்னலில் வலது புறம் திரும்ம்ப முயல்பவர்கள், சில வாகனங்கள் எதிர்பாராத விதமாகப் பின்புறம் திரும்ப முயலும் வண்டிகளிடம் கவனமாக இருப்பது பாதுகாப்பானது.

Tuesday, April 7, 2015

5. இன்று முதல்

இந்த வலைப்பதிவைத் துவக்கியபோது, தினமும் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துத்தான் துவங்கினேன். ஆனால் ஒன்பது மாதங்களில் மூன்றே பதிவுகளைத்தான் செய்திருக்கிறேன். 269 நாட்களில், 266 நாட்கள் எழுதத் தவறி விட்டேன் என்பது என்வரையில் ஒரு கடுமையான தவறு.

எழுதாதற்குக் காரணங்களைக் கூற விரும்பவில்லை. இதை அப்படியே விட்டு விடலாமா என்று நினைத்தேன். பிறகு எப்போதெல்லாம் எழுத முடிகிறதோ அப்போதெல்லாம் எழுதுவது என்று தீர்மானித்தேன். இன்று இதைப்பற்றி எழுதியே பக்கத்தை நிரப்பி விடப் போகிறேன்!

நாம் ஆரம்பிக்கும் பல செயல்களில் இது போன்று தொய்வோ  இடைவெளியோ ஏற்படுவது என்பது பலருக்கும் நிகழ்கிற அனுபவம்தான். (என் தவறைச் சிறிதாகக் காட்டும் நோக்கத்துடன்,  'நான் மட்டும்தான் இப்படிச் செய்கிறேனா, பல பேர் இப்படித்தானே செய்கிறார்கள்?' என்று வாதம் செய்வதற்காக இதைச் சொல்லவிலை என்பதை அடுத்த வரியைப் படிக்கும்போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்!)

இவ்வாறு ஒரு இடைவெளி ஏற்படும்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். 'இன்று முதல் என் செயலை மீண்டும் தொடங்குவேன்' என்று தீர்மானம் செய்து கொண்டு மீண்டும் அதைச் செய்யத் தொடங்குவதுதான் ஆக்கபூர்வமான வழி. எத்தனை முறை இது போல் தொய்வு ஏற்பட்டாலும், 'இன்று முதல்' என்று தொடரலாம்.

நான் செய்ததைப்போல் இவ்வளவு நாட்கள் செய்யாமல் இருந்து விட்டோமே என்று கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு நம்மையே நொந்து கொள்வதை விட, மீண்டும் துவங்குவது எளிது, பயனுள்ளது.

நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து ஊரில் இருந்த டூரிங் படக்கொட்டகையில், படத்தை மாற்றும்போது இன்று முதல் என்று சுவரொட்டியில் அச்சிட்டிருப்பார்கள். படம் இரண்டு நாட்களுக்கு முன்பே மாறி இருக்கலாம். ஆனால் சுவரொட்டியை நான் இன்று தான்  பார்க்கிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை, அந்தப் படம் 'இன்று முதல்' தான் ஓடுகிறது என்றுதான் கொள்வேன்.

அதுபோல், எந்த ஒரு பழக்கத்தையும் தொடர முடியாமல் போய் மீண்டும் தொடங்கும்போது இன்றுதான் தொடங்குகிறோம் என்பது போல் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தொடங்கலாம்.

இந்த 'இன்று' என்ற வலைப் பதிவை இன்று மீண்டும் தொடங்குகிறேன்!