Sunday, April 12, 2015

10. நிறுத்துங்கள் தமிழ்க் கொலையை!

இன்று தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்ச்சி பார்த்தேன். 'தமிழோடு விளையாடு.' ஆஹா, அழகான தமிழ்ப் பெயராக இருக்கிறதே என்று நினப்பதற்குள், 'powered by' என்று ஆங்கிலம் வந்து விட்டது!

ஒரு நிகழ்ச்சிக்குத் தமிழில் பெயர் வைப்பவர்கள், (நிகழ்ச்சியை) 'வழங்குபவர்கள்' என்று தமிழில் சொல்லலாமே! 'powered by' என்று சொன்னால்தான் நிகழ்ச்சியின் பெயருக்குச் சக்தி பிறக்குமோ?

'சக்தி பிறக்குது மூச்சினிலே' என்று பாடிய பாரதி மூச்சடைத்துப் போயிருப்பார் இப்படிப்பட்ட தமிழ்க் கொலைகளைக் கண்டு (கேட்டு)!

தமிழ்க் கொலைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பல ஆங்கிலச் சொற்களுக்கிடையே சில தமிழ்ச் சொற்களைப் பேசி விட்டு அதைத் தமிழ் நிகழ்ச்சி என்று சொல்லிக் கொள்வது. இது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாள்தோறும் நடக்கிறது.

'தூய தமிழில் பேசுவது எப்படி' என்று ஒரு நிகழ்ச்சியை ஒரு தமிழ்ப் பற்று கொண்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்புவதாக வைத்துக் கொள்வோம். நிகழ்ச்சியை எப்படி அறிவிப்பார்கள்?  'தூய தமிழில் பேசுவது எப்படி?...  ஸ்பான்ஸர்ட் பை..!.'

இன்னொரு வகைக் கொலை, செய்திகள் போன்ற தமிழ் நிகழ்ச்சிகளிலேயே தமிழைக் கொலை செய்வது. இந்தக் கொலையும் அடிக்கடி நடக்கிறது. மிகவும் அதிகமாக நடக்கும் ஒரு வகைக் கொலை பன்மை எழுவாய்க்கு ஒருமை  வினைச்சொல்லைப் பயன்படுத்துவது. என்ன புரியவில்லையா? அதாவது plural subject-க்கு singular verb-ஐப் பயன்படுத்துவது. இப்போது புரிகிறதா?

'பரிசுகள் வழங்கப்பட்டது' போன்ற பன்மைப் பெயர்ச்சொல்லுக்கு ஒருமை வினைச்சொல்லை பயன்படுத்தும் தமிழ்க்கொலைகளை தொலைக்காட்சிகளில் நிறையக் கேட்கலாம். இதுவரை கேட்டதில்லை என்றால், இனி கவனித்துக் கேளுங்கள். நிறையவே கேட்பீர்கள்!

தமிழை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற அலட்சிய மனப்பான்மை பலரிடமும் பெருகி விட்டது. நாம் கற்ற மொழியான ஆங்கிலத்தில் பேசும்போது சிறு தவறு நேர்ந்தால் கூட அதைப் பெருமளவில் எள்ளி நகையாடும் இலக்கணப் பிரியர்கள், தமிழ் மொழிப் பயன்பாட்டில் செய்யப்படும் பெரும் தவறுகளையும் அபத்தங்களையும் கண்டு கொள்வதில்லை.

'ஒவ்வோரு பூக்களுமே சொல்கிறதே' என்ற திரைப்படப் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். பாடலில் உள்ள கருத்துக்களுக்காகப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற பாடல் இது. இதில் எனக்கு வேறு கருத்து இல்லை.

ஆனால் இந்த வரியை ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்துப் பாருங்கள்.
'Every flowers says' என்று வரும். இப்படி ஒரு வாக்கியத்தை யாராவது ஆங்கிலத்தில் பேசியோ, எழுதியோ இருந்தால் ஆங்கிலப் பிரியர்களான நாம் அவரைச் சும்மா வீட்டிருப்போமோ? 'ஐயோ அடிப்படை ஆங்கிலம் கூடத் தெரியவில்லையே இவருக்கு!  என்று அவரை  எள்ளி நகையாடிக் கூனிக் குறுகிப் போயிருக்கச் செய்திருக்க மாட்டோமா?

ஆனால் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். தமிழ் இலக்கணத்தைப் பற்றி நமக்கென்ன கவலை? அப்படி யாராவது தவறைச் சுட்டிக் காட்டினால் கூட 'வேறு வேலை இல்லை இவருக்கு!' என்று அவரைச் சிறுமைப் படுத்துவோம்!

ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ப் பேச்சு இல்லை என்று ஆகி விட்டது. சரி, இதை மாற்ற முடியாது. இன்றைய நிலையில், ஆங்கிலம் கலக்காமல் யாராவது தமிழ்  பேசினால் அது செயற்கையாகத் தோன்றும். சிலருக்குக் கோமாளித்தனமாகக் கூடத் தோன்றலாம்! எந்த அளவுக்கு ஆங்கிலத்தைக்  கலப்பது என்று ஒரு வரைமுறையாவது வைத்துக் கொள்ளலாமே. இதை யாரும் வரையறுக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் தமிழ் பேசுபவர்கள் தங்கள் மனச்சாட்சியைக் கலந்து கொண்டு எந்த அளவுக்கு ஆங்கிலம் கலக்கலாம் என்று முடிவு செய்து கொள்ளலாமே!

முன்பெல்லாம் பால்காரர்கள் வீடுகளுக்குப் பால் ஊற்றுவார்கள் (சப்ளை செய்வார்கள் என்று சொன்னால்தான் புரியுமோ?) அப்போதெல்லாம் பால் வாங்குபவர்கள் பால்காரர்களிடம், "என்னப்பா பாலில் தண்ணீர் கலக்கிறாயா அல்லது தண்ணீரில் பால் கலக்கிறாயா?' என்று வேடிக்கையாகக் கேட்பது என்பது வாடிக்கையாக நடக்கக் கூடிய ஒன்று.

பாலில் தண்ணிர் கலப்பது வியாபாரம். தண்ணிரில் பாலைக் கலப்பது மோசடி. ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசுவதும் அப்படித்தான். அன்பு கூர்ந்து தமிழில் (அளவாக) ஆங்கிலம் கலந்து பேச முயற்சி செய்யலாமே. 'ட்ரை பண்ணுகிறேன்' என்று சிலர் சொல்வது என் காதுகளில் விழுகிறது. நன்றி!




No comments:

Post a Comment