Monday, May 29, 2017

17. திரைப்பாடல்களில் கர்நாடக இசை

 'The journey of classical Music in Tamul Films' என்ற தலைப்பில் திரு எம்.ஓ. பார்த்தசாரதி (எம் ஓ பி),  திரு பத்ரி இருவரும் இணைந்து மந்தைவெளி ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ராஜகோபால்  அரங்கில்  இன்று (28/05/17) மாலை ஒரு நிகழ்ச்சி நடத்தப்  போவதாக என் கைபேசியில் எனக்கு அழைப்பு வந்திருந்தது.

கடந்த 8 மாதங்களாக பெங்களூருவாசி ஆகிவிட்ட நான் இன்று சென்னையில் இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு அந்த ராகத்தைச்  சுருக்கமாக ஆலாபனை செய்து விட்டு, பிறகு அந்த ராகத்தில் அமைக்கப்பட்ட  ஒரு திரைப்படப் பாடலைப் பாடிக் காட்டுவதே நிகழ்ச்சியின் அமைப்பு முறை (format).

ராகங்களைப்  பற்றிய வர்ணனைகள், ஆரோஹண அவரோஹணங்கள் இல்லாமல் ராக ஆலாபனையை மட்டும் சுருக்கமாக வாய் மொழியாகவும், சில சமயம் கீபோர்டைப் பயன்படுத்தியும் செய்து முடித்தது என்னைப்  பொறுத்தவரை பாராட்டப்பட வேண்டிய விஷயம்.கர்நாடக இசை அறியாதவர்களுக்கு, 'இது 32ஆவது மேளகர்த்தா ராகம், கரஹரப்ரியா ஜன்யம் ' போன்ற செய்திகளோ, ஆரோஹண, அவரோஹணங்களோ ஒரு காது வழியே  புகுந்து மற்றோரு காது வழியே வெளியேறுகிற விஷயங்களாகத்தான் இருக்கும் என்பது என் அனுபவம்!

இவையெல்லாம் வேண்டும் என்பவர்கள் சாருலதா மணியோடு சேர்ந்து இசைப்பயணம் செய்யலாம்! மூன்று வேளை  சாப்பாடு, தங்கும் இடம், குறிப்பிட்ட தலங்களுக்கு வழிகாட்டியுடன் விஜயம் போன்ற அம்சங்கள் நிறைந்த பேக்கேஜ் டூர் போல் அது வேறொரு அனுபவம்!

பாட வகுப்புகள், கனமான விஷயங்கள் போன்ற 'சங்கதிகள்' இல்லாமல்   ஒரு மாலைப் பொழுதை இனிமையாகக் கழிக்க வேண்டும்  என்று நினைப்பவர்களுக்கு எம் ஓ பி - பத்ரி வழங்கிய இசை நிகழ்ச்சி ஒரு இனிய அனுபவமாக இருந்திருக்கும்.

ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு எம் ஓ பி ராக ஆலாபனை செய்ய, பத்ரி அந்த ராகத்தில் அமைந்த ஒரு திரைப்படப் பாடலை(முழுமையாக)ப்  பாடினர். சில பாடல்களை கரியோக்கியிலும் , சிலவற்றை நேரடியாகவும் பாடினார் பத்ரி

நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ராகங்கள், பாடல்கள் இவை. (பாடலின் பெயரை க்ளிக் செய்தால் யு டியூபில் பாடலைக் கேட்கலாம். பாடலைக் கேட்க விரும்பும் வாசகர்களுக்காக இந்த இணைப்புகளை நான் சேர்த்திருக்கிறேன்.)

1. ராகம்:  யமன், கல்யாணி
பாடல்: சிந்தனை செய் மனமே
படம்: அம்பிகாபதி
இசை: ஜி.ராமநாதன்

யமன் என்பது ஹிந்துஸ்தானி ராகம், கல்யாணி கர்நாடக ராகம் என்று குறிப்பிட்ட எம் ஓ பி, யமனில் வக்ரப்  பிரயோகம் அதிகம் என்று குறிப்பிட்டார். இரண்டு ராகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஆலாபனை செய்து காண்பித்தார்.

2. ராகம்:  சாருகேசி
பாடல்: மன்மத லீலையை வென்றார் உண்டோ?
படம்: ஹரிதாஸ்
இசை: ஜி.ராமநாதன்

3. ராகம்: ஆபேரி (பீம்ப்ளாஸ்)
பாடல்: நீல வான  ஓடையில் 
படம்: வாழ்வே மாயம்
இசை: கங்கை அமரன்

4.ராகம்:  கீரவாணி
பாடல்: பாட்டுப் பாட வா
படம்: தேன் நிலவு
இசை: ஏ. எம். ராஜா
கீரவாணியை வித்தியாசமாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட பாடல் இது என்று பத்ரி குறிப்பிட்டார்.

5. ராகம்:  தேஷ்
பாடல்: துன்பம் நேர்கையில்
படம்: ஓர் இரவு
இசை: ஆர். சுதர்சனம்

6. ராகம்:  பஹாடி
பாடல்: காலங்களில் அவள் வசந்தம்
படம்: பாவ மன்னிப்பு
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

7ராகம்:  நாட்டை
பாடல்: மனதில் உறுதி வேண்டும்
படம்:  சிந்துபைரவி
இசை: இளையராஜா

8. ராக மாலிகை
ஒன்றுக்கு மேற்பட்ட ராகங்கள் ஒரே பாடலில் அமைவது ராக மாலிகை (ராக மாளிகையம் கூட!). தமிழ்ப் பாடல்களில் மிகச் சிறந்த ராகமாலிகைகளில் ஒன்று கர்ணன் படத்தில் வரும் டி .எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ்  சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு தலை சிறந்த பாடகர்களைப்  பாட வைத்து விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்த தொகையறாப்  பாடல்கள் என்று குறிப்பிட்டார் பத்ரி.

மழை கொடுக்கும் கொடையும் (சீர்காழி கோவிந்தராஜன்) - ஹிந்தோளம்
நாணிச் சிவந்தன (திருச்சி லோகநாதன்)  - கானடா
மன்னவர்  பொருட்களை (டி.எம்.சௌந்தரராஜன்) -  மோஹனம்
என்ன கொடுப்பான் (பி.பி.ஸ்ரீனிவாஸ்) - ஹம்ஸானந்தி
ஆயிரம் கரங்கள் நீட்டி (நால்வரும் இணைந்து) - ரேவதி

(5 பாடல்களையும் பாடிக் காட்டினார் பத்ரி.)

9. ராகம்:  ஆபோகி
பாடல்: தங்க ரதம்  வந்தது
படம்:  கலைக்கோவில்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

10. ராகம்: பிருந்தாவன சாரங்கா  (மேக் மல்ஹர்)
பாடல்: பொன் ஒன்று கண்டேன் 
படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

11.ராகம்:  சுத்த சாரங்கி
பாடல்:  இரவும் நிலவும்
படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

12. ராகம்:  பாகேஸ்ரீ  
பாடல்: நிலவே என்னிடம் நெருங்காதே
படம்:  ராமு
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
கஜல் பாணியில் அமைந்த முதல் தமிழ்ப் பாடல் இது என்று குறிப்பிட்டார் பத்ரி.

13. ராகம்: கமாஸ் 
பாடல்: சித்திரம் பேசுதடி
படம்: சபாஷ் மீனா 
இசை:  டி .ஜி.லிங்கப்பா

14ராகம்:  சந்த்ர கௌன்ஸ்
பாடல்:  மாலைப் பொழுதின் மயக்கத்திலே  
படம்: பாக்யலக்ஷ்மி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

15. ராகம்:  ஹமீர் கல்யாணி  
பாடல்:  என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
படம்:  கர்ணன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

16. ராகம்: மாயாமாளவகௌள 
பாடல்: கல்லெல்லாம் 
படம்: ஆலயமணி 
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

17.ராகம்:  தர்பாரி கானடா
பாடல்:  மலரே மௌனமா  தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த
படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
தர்பாரி கனடாவும், ஜோன்புரியும் ஒரே ஸ்கேலில் அமைந்த ராகங்கள் என்று குறிப்பிட்ட எம் ஓ பி இரண்டு ராகங்களுக்கு ம் உள்ள வேறுபாட்டை ஆலாபனை செய்து விளக்கினார். மலரே மௌனமா பாடலின் சில பகுதிகளைப்  பாடிக் காட்டினார்.

நேரம் குறைவாக இருந்ததால், மௌனம் சம்மதம் படத்தில் இடம் பெற்ற தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த 'கல்யாணத் தேன் நிலா' பாடலின் பல்லவியை மட்டும் பாடினர் பத்ரி.

18. ராகம்:  ஜோன்புரி  
பாடல்: நான் பெற்ற செல்வம்
படம்:  நான் பெற்ற செல்வம்
இசை: ஜி.ராமநாதன்

19. ராகம்: ஹம்சத்வனி  
இந்த ராகம் நிகழ்ச்சி நிரலில் இல்லை. பார்வையாளர் ஒருவரின் விருப்பத்துக்காக இந்த ராகத்தை ஆலாபனை செய்து காட்டினார் எம் ஓ பி.

20. ராகம்: ரீதிகௌளை  
இந்த ராகமும் நிகழ்ச்சி நிரலில் இல்லை. பார்வையாளர் ஒருவரின் விருப்பத்துக்காக இந்த ராகத்தில் அமைந்த 'தலையைக் குனியும் தாமைரையே' பாடலின் சில வரிகளை பாடிக் காட்டினார் பத்ரி 
படம்: ஒரு ஓடை  நதியாகிறது 
இசை: இளையராஜா 

21. ராகம்:  சுத்த தன்யாசி
பாடல்:  நீயே உனக்கு என்றும்  
படம்:  பலே  பாண்டியா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இந்த ராகமும் நிகழ்ச்சி நிரலில் இல்லை. பார்வையாளர் ஒருவரின் விருப்பத்துக்காக பாடலின் சில வரிகளை பாடிக் காட்டினார் பத்ரி.

22. ராகம்:  சிந்து பைரவி  
பாடல்:  என்னை யாரென்று  
படம்:  பாலும் பழமும்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

கர்நாடக இசைக் கச்சேரிகளை சிந்து பைரவியைப் பாடி நிறைவு செய்யும் வழக்கம் உண்டு. அது போல் இந்த நிகழ்ச்சியையும் சிந்து பைரவி ராகத்தில் நிறைவு செய்தனர் இந்த இருவர்.

என்னை யாரென்று பாடலைப் பாடி முடித்ததும், இதே ராகத்தில் அமைந்த உனக்கென்ன மேலே நின்றாய் (படம்: சிம்லா ஸ்பெஷல் இசை: எம் எஸ் விஸ்வநாதன்) பாடலின் சில வரிகளைப்  பாடி நிறைவு செய்தார் பத்ரி.

'உனக்கென்ன மேலே நின்றாய்' என்ற வரிகளைக் கேட்டதும் மேலே வீற்றிருக்கும், என்றும் நம் நெஞ்சில் மேலே நிற்கும் பாடல்களை வழங்கிய எம் எஸ் வியை நினைத்து மன நிறைவுடன் எம் ஓ பி, பத்ரி இருவருக்கும் என் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து விட்டுக்  கிளம்பினேன். 

3 comments:

  1. Beautifully and very comprehensively written write up with details of Names of , Raaga name, Song and movie name.. You have listed very professionally and presented to public so selflessly and highly generously. Thanks and best wishes

    ReplyDelete