Thursday, December 10, 2020

39. மதிப்பு அறியப்படாத வைரம் - ராஜாஜி

இன்று டிசம்பர் 10ஆம் தேதி ஐ.நா மனித உரிமைகள் தினம். மனித உரிமைகளுக்காகப் போராடிய ராஜாஜியின் பிறந்த தினமும் இன்றுதான் என்பது இயற்கை உருவாக்கும் அற்புதமான ஒற்றுமைகளில் ஒன்று. 

இதில் என்ன வேடிக்கை என்றால் பல வருடங்களாக ராஜாஜியின் பிறந்த நாள் டிசம்பர் 8 என்று கருதப்பட்டு அவரிடம் அன்பம் மதிப்பும் வைத்திருந்தவர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் ஆர்வம் இல்லாதவரான ராஜாஜி இந்தத் தவற்றைத் திருத்த முயலவில்லை. அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்புதான் அவர் பிறந்த தினம் டிசம்பர் 8 அல்ல, டிசம்பர் 10 என்று யாராலோ கண்டறியப்பட்டு, டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படத் துவங்கியது.

 25.12.1972 இல் மறைந்த ராஜாஜி தன் வாழ்நாள் முழுவதும் தான் நம்பிய கொள்கைகளுக்காகவும், நலக்கோட்பாடுகளுக்காகவும் போராடியவர். 

அதனால்தானோ என்னவோ, அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராஜ்மோகன் காந்தி (இவர் காந்திஜியின் புதல்வர் தேவதாஸ் காந்தி, ராஜாஜியின் புதல்வி லக்ஷ்மி தேவதாஸ் காந்தி ஆகியோரின் புதல்வர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.) அந்த நூலுக்கு A Warrior from the South - The Rajaji Story (தெற்கிலிருந்து ஒரு போர் வீரர் - ராஜாஜியின் கதை) என்று பெயர் வைத்தார்.

ராஜாஜியின் அரசியல், சமுதாயப் பார்வை காந்திஜி அரசியலுக்கு வருவதற்கு முன்பே உருப்பெற்று விட்டது. தன் இளம் வயதிலிருந்தே தீண்டாமை, குடிப்பழக்கம் ஆகிய இரண்டையும் எதிர்த்துப் போரிடுவதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு விட்டார் அவர்.

சேலம் நகராட்சியின் தலைவராக (அந்நாளில் இது ஒரு கௌரவாமான, ஊதியம் இல்லாத பணி) இருந்தபோதே அந்தணர்கள் வாழ்ந்த பகுதியில் தண்ணீர் திறந்து விட ஒரு தலித் நியமிக்கப்பட்டபோது அந்தணர்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித் ஊழியரைப் பணியில் தொடர வைத்தவர் ராஜாஜி.

உயர் ஜாதி இந்துக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி 200 உயர் ஜாதி மாணவர்கள் படித்து வந்த சேலம் நகராட்சிப் பள்ளியில் இரண்டு தலித் சிறுவர்களைச் சேர்த்துக் கொள்ள வைத்து அவர்களுடைய பள்ளிக் கட்டணத்தைத் தானே கட்டி வந்தார் ராஜாஜி. 

சநாதனர்களின் எதிர்ப்பை மீறி ஒரு விதவைக்கு மறு திருமணத்தையும் நடத்தி வைத்தார். இவை நடந்தது 1910ஆம் ஆண்டு வாக்கில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சுதந்திரப் போராட்டதின்போது ஒரு முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டதில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் உள்ள திருச்சானூர் கோவிலுக்குள் நுழைந்து விட்டார் என்ற குற்றத்துக்காக(!) ஒரு தலித்தின் மீது வழக்குப் போடப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

ராஜாஜியின் தீண்டாமை எதிர்ப்பு மனநிலையை அறிந்திருந்த சித்தூரைச் சேர்ந்த ஒரு நண்பர் அந்த தலித்துக்கு ஆதரவாக வாதிடும்படி ராஜாஜியைக் கேட்டுக் கொண்டார்.

நீதிமன்றப் புறக்கணிப்பிலிருந்த ராஜாஜி, சித்தூர் நீதிமன்றத்துக்குச் சென்று வக்கீலாக இல்லாமல் ஒரு தனி மனிதராக வாதாட நீதிபதியின் அனுமதியைப் பெற்று பெற்று வாதிட்டு அந்த தலித்துக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்! 

இதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள சரித்தர இயலாளர் ராமச்சந்திர குஹா, "இப்படிப்பட்ட மனநிலை இருந்ததால்தான் ராஜாஜியால் வேங்கட மலையான் மீது 'குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா' என்று பாடல் எழுத முடிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

குறை என்று சொல்லும்போது ராஜாஜியைக் குறை கூறிப் பலர் பேசி வந்திருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஒரு புறம் பெரியாரிஸ்டுகள் ராஜாஜியை விமரிசனம் செய்து வந்திருக்கிறார்கள், 

மறுபுறம் போலி தேசிய வாதிகள், 'சோ'வைப் போன்ற "மேதாவிகள்" என்று பல்வேறு தரப்பினரும் பல்வேறு குற்றங்களையும், குறைகளையும் கூறி வந்திருக்கிறார்கள்.

ராஜாஜி இவை பற்றிக் கவலைப்பட மாட்டார். ஆனால் ராஜாஜியைப் புரிந்து கொண்டவர்களுக்கு இவை மன வருத்தத்தை ஏற்படுத்துவது இயல்புதான். ஆனால் இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டுமா என்றால், வேண்டாம்! ஏனென்று சொல்கிறேன்.

1971ஆம் ஆண்டு,  சோவியத் யூனியனுடன் இந்தியா செய்து கொண்ட ராணுவ ஒப்பந்தத்தை  சுதந்திராக் கட்சி எதிர்த்தது. ஆனால் ராஜாஜி அதை ஆதரித்தார்.

 இதைப் பற்றிய விவாதம் சுதந்திராக் கட்சியின் செயற்குழுவில் நடந்தபோது (ராஜாஜி அதில் கலந்து கொள்ளவில்லை), ராஜாஜி ஏன் இப்படிச் சொல்லி இருப்பார் என்று சிலர் ராஜாஜியை ஆதரித்துப் பேச முற்பட்டபோது, கட்சியின் தலைவரான பிலூ மோடி ஒரே வரியில் அனைவரையும் அடக்கி விட்டார். "RAJAJI NEEDS NO DEFENSE!" என்பதுதான் அவர் சொன்னது! ராஜாஜிக்கு யாரும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை (ஏனெனில் அது அவசியமில்லை!) 

பெரியாரின் ஆதரவாளர்கள் இன்றும் ராஜாஜியைக் குறை கூறிப் பேசி வரும் நிலையில், பெரியார் ஆதரவாளரான திரு. வெ.மதிமாறன் குறிப்பிட்டுக் கூறிய ஒரு நல்ல விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சுய மரியாதைத் திருமணங்களை அண்ணாதான் சட்டமாக்கினார் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதற்கு முன்பே நீதிக்கட்சியின் ஆட்சியின்போது இதற்கான முயற்சி துவங்கப்பட்டது. ஆனால் அது வெற்றி பெறவில்லை. 

பிறகு ராஜாஜி தன் ஆட்சிக் காலத்தில் இதைச் சட்டமாக்க முயன்றார். ஆனால் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. 

அவருக்குப் பின் வந்த காமராஜ் இந்த முயற்சியை மேற்கொள்ளவே இல்லை. இதை மதிமாறன் அவர்கள் ஒரு காணொளியில் குறிப்பிட்டிருக்கிறார். 

ராஜாஜியைப் பழமைவாதி என்று நம்புபவர்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். 

ராஜாஜியை விமரிசனம் செய்பவராக இருந்தாலும், ராஜாஜி பற்றிய இந்த உண்மையைப் பகிர்ந்து கொண்ட மதிமாறன் பாராட்டுக்குரியவர்.

காந்திஜி இந்தியாவுக்கு வரும் முன்பே சுதந்திரப் போராட்டதில் ஈடுபாடு கொண்ட ராஜாஜி திலகரின் தீவிரவாதக் கொள்கையின் தீவிர ஆதரவாளராக இருந்து சேலத்தில் அவருக்கு ஆதரவு திரட்டினார்.

தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் போராட்டங்களை அறிந்ததிலிருந்தே காந்திஜியிடம் ஈடுபாடு கொள்ளத் துவங்கினார் ராஜாஜி.

துவக்கக் காலத்தில் காந்திஜியின் தளபதிகளாக இருந்த நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி ஆகியோரில் காந்திஜியை முதலில் இனம் கண்டவர் ராஜாஜிதான். 

நேருவும், சர்தார் பட்டேலும் முதலில் காந்திஜியைப் பார்த்தபோது அவரைப் பற்றிப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனல் காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே அவரை அடையாளம் கண்டு அவர் வருகையை எதிர் நோக்கி இருந்தார் ராஜாஜி.

காந்திஜி இந்தியாவுக்கு வந்த சிறிது காலத்துக்குப் பிறகு, முதன்முறையாகச் சென்னைக்கு வந்தபோது, 'ஹிந்து' பத்திரிகையின் உரிமையாளாரன கஸ்தூரிரங்க ஐயங்கார் வீட்டில் தங்கினார். 

இப்போது சோழா ஹோட்டலாக இருக்கும் அந்த விட்டில் அப்போது ராஜாஜி வாடகைக்குக் குடி இருந்தார். (மாத வாடகை ரூ. 230. சிறிது காலத்துக்குப் பிறகு அவ்வளவு வாடகை கொடுக்கத் தனக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்பதால் ராஜாஜி வேறு ஒரு சிறிய வீட்டுக்குக் குடி போய் விட்டார்!) 

எனவே, காந்திஜி சென்னையில் தங்கி இருந்தது ராஜாஜியின் விருந்தினராகத்தான்! காந்திஜிக்கு முதலில் அது தெரியாது. தன்னை கவனித்துக் கொண்ட ராஜாஜியைப் பற்றி அவர் அறிந்திருக்கவும் இல்லை. 

காந்திஜியின் செயலரான மகாதேவ தேசாய்தான் ராஜாஜியைப் பற்றித் தெரிந்து கொண்டு, 'இவரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று காந்திஜியிடம் கூறினார். அதற்குப் பிறகே காந்திஜியின் கவனத்துக்கு வந்த ராஜாஜி இறுதி வரை காந்திஜியின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக இருந்தார்.

ராஜாஜியுடன் காந்திஜி இருந்த அந்த சில நாட்களில் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்தார் காந்திஜி. முதலாவது சத்தியாக்கிரகம் என்ற அஹிம்சைப் போராட்டம். ராஜாஜியின் வீட்டில் தங்கி இருந்தபோது தனக்கு ஏற்பட்ட இந்தக் கருத்தை முதன் முதலில் ராஜாஜியிடம்தான் பகிர்ந்து கொண்டார் காந்திஜி. ராஜாஜி இதை உற்சாகமாக வரவேற்றுச் சென்னையில் இதைத் தானே நிகழ்த்தியும் காட்டினார்.

இரண்டாவது, உடுக்க உடை கூட இல்லாத இந்த நாட்டின் ஏழைகளின் நிலையைக் கருத்தில் கொண்டு தான் அரை வேட்டியை மட்டுமே ஆடையாக உடுத்துவது என்று காந்திஜி முடிவெடுத்தது ராஜாஜியுடன் அவர் மதுரைக்குச் சென்றபோதுதான். இதையும் காந்திஜி முதலில் பகிர்ந்து கொண்டது ராஜாஜியிடம்தான்!

காந்திஜி ராஜாஜியின் இல்லத்தில் தங்கி இருந்தபோது அவரைப் பார்க்க வந்த பாரதியாரை, இவர் நம் தேசியக் கவி என்று பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தார் ராஜாஜி.

ராஜாஜியைத் தன் 'மனச்சாட்சியின் காவலர்' (Conscience Keeper) என்று குறிப்பிடுவார் காந்திஜி. காரணம், விருப்பு வெறுப்பின்றித் தன் கருத்தைத் தெரிவிப்பவர் ராஜாஜி. இதனால் காந்திஜியுடன் அவர் சில முறை முரண்பட்டுச் சிறிது காலம் இருவரும் பிரிந்து கூட இருந்திருக்கின்றனர்.

1942ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தை காந்திஜி துவக்கியபோது ராஜாஜி அதை ஆதரிக்கவில்லை. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் ஈடுபட்டிருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் போரிடுவது சரியில்லை என்று அவர் நினைத்தார். 

உலகின் மிப் பெரிய எதிரிகளான ஹிட்லரையும், முசோலினியையும் முறியடிப்பதுதான் அன்றைய நிலையில் முக்கியம் என்பது ராஜாஜியின் கருத்து.

சில காலம் காந்திஜியிடமிருந்து விலகி இருந்த பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றினார் ராஜாஜி.

ஜின்னா பிரிவினை வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தபோது, பிரிவினை தவிர்க்க முடியாதாது என்பதை முதலில் உணர்ந்தவர் ராஜாஜிதான். 

காந்திஜி துவக்கத்தில் பிரிவினையை எதிர்த்ததால் இருவருக்கும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

அப்போது காங்கிரஸ்காரர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ராஜாஜி. 'கருப்புக் கண்ணாடி ராஜகோபாலாச்சாரிக்குக் களிமண்ணு மூளை' போன்ற தரக்குறைவான விமரிசனங்களெல்லாம் செய்யப்பட்டன. 

பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது அவர் முகத்தில் தார் வீசப்பட்டது. முகத்தில் வழிந்த தாரைக் கையால் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து பேசினார் ராஜாஜி.

தன் கருத்துக்களைத் தெரிவிப்பதில் உறுதியாக இருந்தவர் ராஜாஜி. மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்பதற்காகவோ, பொதுவான விருப்பத்துக்கு எதிராகப் பேசினால் தனக்கு அவப்பெயர் ஏற்படுமே என்பது பற்றியெல்லாம் அவர் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. 

BCG தடுப்பூசி, குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றை எதிர்த்திருக்கிறார் அவர். தன் கருத்துக்களைக் காரணங்களோடு விளக்குவார். மற்றவர்களுக்கு அது பிடிக்காவிட்டால் அது பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.

பொதுவாக எல்லோரும் பதவிகளில் கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் பயணம் செய்வார்கள். ஆனால் ராஜாஜி வகித்த பதவிகள் தலைகீழ் வரிசையில் இருந்திருக்கின்றன. 

சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு மத்திய அமைச்சரவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தார். (கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த நேருவுக்கும், பட்டேலுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு அவர்களிடையே ஒருமித்த செயல்பாட்டை உருவாக்கும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது). 

பிறகு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். (காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பல சிறு கட்சிகளுடன் ஆதரவோடுதான் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டி இருந்தது. அவர்கள் ஆதரவைப் பெற்று நிலையான ஆட்சியை அமைப்பது ராஜாஜியால்தான் முடியும் என்பதால் முதல்வர் பதவியை ஏற்றுக் கட்சியை வழி நடத்தும்படி காங்கிரஸ் கட்சி அவரைக் கேட்டுக் கொண்டதால்தான் அவர் முதல்வர் பதவியை ஏற்றார்.)

அவருக்குப் பதவி ஆசை என்று அவரைப் பிடிக்காதவர்கள் இதைப் கொச்சைப் படுத்துவார்கள். உண்மையில் அவர் பதவிகள் மீது பற்றற்றவர் என்பதுதான் இதற்குக் காரணம். 

பதவியை மக்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பை வழங்கும் ஒரு சாதனமாக அவர் நினைத்ததால்தான் தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை அவர் ஏற்றார். சீதையின் தந்தை ஜனகர் தன் அரச பதவியின் மீது பற்றில்லாமல் இருந்தவர் என்று கூறுவார்கள். ராமாயணம் எழுதிய இந்த அறிஞர் ஜனகரைப் பின்பற்றி வாழ்ந்தார் என்பதுதான் உண்மை.

ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, உபநிஷத்துக்கள், திருக்குறள், ஆழ்வார்களின் பாசுரங்கள், ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம், சாக்ரடீஸ் போன்ற தலைப்புகளில் பல நூல்களை அவர் எழுதி இருக்கிறார். 

ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை முழுமையாகவும், இவ்வளவு எளிமையாகவும் வேறு யாரும் எழுதியதில்லை என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.

அவர் ராமனிடம் பக்தி கொண்டவர். 'இலங்கேஸ்வரன்' என்ற தன் நாடகத்தைப் பார்க்க வருமாறு ஆர் எஸ் மனோகர் ராஜாஜியை அழைத்தபோது, "ராவணனை நல்லவனாக்க் காட்டும் நாடகத்தை என்னால் பார்க்க முடியாது" என்று கூறி விட்டார். 

ஆனால், தான் எழுதிய ராமயணத்தில் வாலி வதம் பற்றி எழுதும்போது, "ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது சரிதான் என்பதற்குப் பல சமாதானங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இதைச் சரியென்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று உறுதியாகச் சொல்லி இருப்பார்.

 'வாலிவதம்' என்ற தனிக் கட்டுரையில் ராமர் செய்தது தவறு என்று கடுமையாக விமரிசித்து எழுதி இருப்பார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் அதைப் படித்ததில்லை. 

ராஜாஜியைப் பொருத்தவரை, ஒன்று தவறு என்றால் தவறுதான். தவறான ஒன்றை அவர் நியாயப்படுத்த மாட்டார்.

1967ஆம் ஆண்டு தேர்தல்களைப் பற்றி ஒரு ஐரோப்பியர் எழுதிய ஒரு நூலில் நான் படித்த செய்தி இது. அப்போது சில வட மாநிலங்களில் ஜனசங்க் கட்சி (இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் முன் வடிவம் என்று கூறலாம்) பசுவதைத் தடுப்பைத் தன் தேர்தல் பிரசாரத்தில் கூறி வந்தது. 

சுதந்திராக் கட்சியின் தலைவராக இருந்த திரு. மசானி, சுதந்திராக் கட்சி ஜனசங்கத்துடன் சில மாநிலங்களில் கூட்டாகத் தேர்தலில் போட்டி இட்டதால், சுதந்திராக் கட்சியும் பசு வதைத் தடையை ஆதரித்துப் பேசினால், அது தேர்தலில் சாதகமாக அமையும் என்று தெரிவித்தார். 

ஆனால் ராஜாஜி இந்த யோசனையை நிராகரித்து விட்டார். மத நம்பிக்கை தொடர்பான விஷயங்களை அரசியலில் கலப்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சைவ உணவு உண்ணும் அந்தணராக இருந்தும் இந்த யோசனையை ஏற்கவில்லை என்று அந்த நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 

பிரச்னைகள் ஏற்படும்போது சிந்தித்து அவற்றுக்குத் தீர்வு காண்பதில் சிறந்து விளங்கியவர் ராஜாஜி. ஒருமுறை தலித்துகள் தனி வாக்காளர் குழுக்களாகச் செயல்பட்டுத் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் (separate electorate) முறை வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார். 

தலித்துகளைத் தனியாகப் பிரித்து வைக்கும் இந்த யோசனையை காந்திஜி கடுமையாக எதிர்த்ததுடன் தன் எதிர்ப்பைக் காட்டும் விதமாகக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அம்பேத்கரும் தன் நிலையில் பிடிவாதமாக இருக்க, சிக்கலான சூழ்நிலை உருவானது. 

ராஜாஜிதான் இருவருக்கிடையேயும்  தூதுவராகச் செயல்பட்டு நீண்ட சமாதான முயற்சிகளுக்குப் பின், தலித்துகளுக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கலாம் என்ற யோசனையை இருவரும் ஏற்றுக் கொள்ளச் செய்தார். காந்திஜியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. ரிசர்வ்ட் (தனித்) தொகுதிகள்) முறை வந்தது இப்படித்தான். இந்த விஷயத்தில் ராஜாஜியின் பங்களிப்பை அம்பேத்கர் வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.

உலகின் அணு ஆயுங்களைக் குறைக்க வல்லரசுகளை வற்புறுத்தும் முயற்சியில் காந்தி அமைதி நிறுவனத்தின் சார்பாக ஒரு தூதுக்குழு அன்றைய வல்லரசுகளான அமெரிக்கவுக்கும், சோவியத் யூனியனுக்கும் சென்றது.

அதற்குத் தலைமையேற்குமாறு பிரதமர் நேரு ராஜாஜியைக் கேட்டுக் கொண்டார். இருவரும் அன்று அரசியல் எதிரிகளாக இருந்தாலும் உலகத் தலைவர்களிடம் நம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல மிகவும் ஏற்றவர் ராஜாஜிதான் என்பதை உணர்ந்ததால்தான் நேரு அவரிடம் இந்தப் பொறுப்பை அளித்தார்.

அமெரிக்க அதிபர் கென்னடி, சோவியத் தலைவர் குருஷ்சேவ் இருவருமே ராஜாஜியின் வாதத் திறமையால் கவரப்பட்டு அவரை மிகவும் புகழ்ந்து பேசினர். கென்னடியுடனான சந்திப்பு  ஒதுக்கப்பட்ட நேரமான இருபது நிமிடங்கள் கடந்த பின்னும் நாற்பது நிமிடங்கள் வரை நீடித்தது. 

தன் கருத்துக்கள் தவறு என்று உணர்ந்தால் அவற்றை மாற்றிக் கொள்ள ராஜாஜி சிறிதும் தயங்கியதில்லை. 

1937ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது தேசிய மொழியாக ஹிந்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கேற்ப ஹிந்தி படிப்பதைப் பெரும் எதிர்ப்புக்கிடையே அறிமுகப்படுத்திய ராஜாஜி, 1965-இல் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தார்!

ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியைத் திணிப்பது அவர்களுக்குக் கூடுதலான சுமையைக் கொடுக்கும் என்று வாதிட்டு, unequal burden (சமமற்ற சுமை) என்று அவர் உருவாக்கிய எளிய சொற்றொடரை விடப் பொருத்தமாக ஹிந்தித் திணிப்புக்கு எதிரான வேறொரு வாதம் இருக்க முடியாது.

தான் கருத்தை மாற்றிக் கொள்வதைப் பற்றி அவர் கூறினார்: "மாங்காய் வடுவாக இருக்கும்போது துவர்க்கும், காயாக இருக்கும்போது புளிக்கும், கனியானதும் இனிக்கும். மனம் முதிர்ச்சி அடைவதன் காரணமாகக் கருத்துக்கள் மாறுவது இயல்பானதுதான்!"

மதுவிலக்கில் அதிக நம்பிக்கை கொண்டிருந்த அவர் அன்றைய தமிழக முதல்வர் திரு. கருணாநிதியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டதை அனைவரும் அறிவர்.

அரசியலில் அவர் பலரையும் கடுமையாக எதிர்த்தாலும், யாரிடமும் காழ்ப்புணர்ச்சி கொண்டதில்லை. அதனால்தால் அவர் மறைந்தபோது, அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அரசியல் கடந்து அன்பு காட்டியவர்" என்று கூறினார் அன்றைய முதல்வர் திரு, கருணாநிதி.

ராஜாஜிக்கு நினைவாலயம் அமைத்து அதில் ராமரின் கிரீடம் போன்ற கோபுரம் அமைத்து, அந்த நினைவு மண்டபத்தை மாமனிதர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களைக் கொண்டு திறக்க வைத்து ராஜாஜியிடம் தனக்கிருந்த மதிப்பை வெளிக்காட்டினார் திரு கருணாநிதி.

ராஜாஜியுடன் அரசியலில் கடுமையாக மோதிய தலைவர்களான நேரு, பெரியார், காமராஜ், அண்ணா, கருணாநிதி ஆகிய அனைவருமே அவரிடம் அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர். 

பெரியார், தான் மணியம்மையைத் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்தபோது, ஆலோசனை கேட்டது தன் நண்பர் ராஜாஜியிடம்தான்.

அரசியலில் நேருவை ராஜாஜி கடுமையாக எதிர்த்து விமரிசனம் செய்து கொண்டிருந்தபோது ஒரு வெளிநாட்டு நிருபர் அவரிடம் கேட்டார்: "இவ்வளவு மக்கள் ஆதரவு பெற்றிருக்கும் நேருவை எதிர்த்து உங்களால் வெற்றி பெற முடியுமா?"

அதற்கு ராஜாஜி கூறிய பதில் இது:

"மக்கள் ஆதரவுடன் இருக்கும் நேருவை அரசியல் ரீதியாக எதிர்ப்பது மிகக் கடினம்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு தவறுகள் நடக்கும்போது அதை யாரும் எதிர்க்காமல் இருந்தால், 'இத்தனை தவறுகள் நடக்கும்போது இவற்றை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லையே!' என்று வரலாறு நம்மைப் பழிக்காதா?"

இன்று நாம் சிலவற்றை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும்போது, 'இவ்வளவு வலுவாக உள்ள அரசாங்கத்தை நம்மால் எதிர்க்க முடியுமா? நம் எதிர்ப்பு எடுபடுமா?' என்றெல்லாம் தயங்காமல், எதிர்க்க வேண்டியவற்றை நாம் உறுதியுடன் எதிர்க்க வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் கூற்று இது! 

ராஜாஜி மறைந்தபோது அன்று சுதந்திராக் கட்சியின் தலைவராக இருந்த பிலூ மோடி அவருக்குச் சூடிய புகழாரத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.

Rajaji was a human phenomenon - faultlessly straight, miraculously clean and supremely wise. He was not only the conscience keeper of Mahatma but of India itself. To us who have followed him for the last 13 years, he was the embodiment of our cause. With him, Gandhiji has died once again. (ராஜாஜி ஒரு மனித அற்புதம் - அப்பழுக்கற்ற நேர்மையும், பிரமிக்க வைக்கும் சுத்தமும், மேன்மையான அறிவாற்றலும் கொண்டவர். அவர் மகாத்மாவுக்கு மட்டும் மனச்சாட்சிக் காவலர் அல்ல, இந்தியாவுக்கும்தான். கடந்த 13 ஆண்டுகளாக அவரைப் பின்பற்றி வந்த எங்களுக்கு அவர் எங்கள் நோக்கத்தின் வடிவமாக இருந்தார். அவர் இறந்தபோது, காந்திஜி மீண்டும் ஒருமுறை இறந்து விட்டார்.)

ராஜாஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலான என் காணொளியையும் காணுங்கள்!






 


    


No comments:

Post a Comment