Saturday, December 17, 2016

16. ஒரு வெட்டி ஆராய்ச்சி


பல பழைய தமிழ்ப் பாடல்களில் கிராமஃபோன் ரிகார்டில் வரும் (ரேடியோவில் ஒலிபரப்பப்படும்) வார்த்தைகள் சில திரைப்படத்தில் மாற்றப்பட்டிருக்கும். இதற்குக் காரணம் சென்ஸார் சில வார்த்தைகளை ஏற்றுக்குள்ளாதது. பொதுவாக, அரசியல் சார்பு, மதஉணர்வைப் புண்படுத்துவதாக அமைவது, காமம், ஆபாசம் போன்ற காரணங்களுக்காக சென்ஸார் ஆட்சேபங்களை எழுப்புவது வழக்கம். தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சென்ஸார் சான்றிதழ் வாங்கிப் படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசரத்தில் ஏதோ ஒரு வகையில் வார்த்தையை மாற்றிப் பாடகர்களை அந்த வார்த்தைகளை மட்டும் பாட வைத்து மாற்றி விடுவார்கள் என்று அறிகிறேன். சில மாற்றங்கள் வேடிக்கையாகவும், அபத்தமாகவும் இருக்கும். என் நினைவுக்கு வரும் சிலவற்றை இங்கே தருகிறேன். கடைசியாக நான் கொடுத்திருக்கும் உதாரணத்தில், சந்திரோதயம் பாடலின் ஒரு சரணம் முழுவதையும் வாலி அற்புதமாக மாற்றி அமைத்திருப்பதை வியந்திருக்கிறேன்.

1. படம்: அடுத்த வீட்டுப் பெண் பாடல்: காக்கை காக்கைக் கழகம் இது

இசைத்தட்டு
காக்கை காக்கைக் கழகம் இது
காரியம் கைகூடும் கழகம் இது  (கா.கை. கழகம் - காரியம்  கைகூடும்  கழகம்)

படம்
கற்றோர் நிறைந்த சங்கம் இது
காரியம் கைகூடும் சங்கம் இது

(கழகம் என்ற பெயர் கூடாது என்று சென்சஸார் வலியுறுத்தியிருக்கக் கூடம்!)

2. படம்: பாவ மன்னிப்பு  பாடல்: பாலிருக்கும்

இசைத்தட்டு
வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே- அது
வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே!

படம்
வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே- அது
மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே!

3. படம்: சுமைதாங்கி  பாடல்: எந்தன் பருவத்தின் கேள்விக்கு
இசைத்தட்டு
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?

படம்
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?

4. படம்: பணக்காரக் குடும்பம்  பாடல்: பறக்கும் பந்து பறக்கும்
இசைத்தட்டு
அடங்கும் ஆசை அடங்கும்

படம்
அடங்கும் அன்பு அடங்கும்

5.படம்: வல்லவன் ஒருவன்  பாடல்: அம்மம்மம்மா கன்னத்தில் கன்னம்
இசைத்தட்டு
முத்தம் என்பது புதுமையா?
முகத்துக்கு மேலே வா வா!

படம்
முத்தம் என்பது புதுமையா?
அழகுக்கு மேலே வா வா!

6. படம்: பெற்றால்தான் பிள்ளையா?  பாடல்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இசைத்தட்டு
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்

படம்
மேடையில் முழங்கு திருவிக போல்

7. படம்: அன்பே வா  பாடல்: புதுய வானம் புதிய பூமி
இசைத்தட்டு
உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

படம்
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

8 .படம்: பூவும் பொட்டும்  பாடல்: எண்ணம் போல
இசைத்தட்டு
கண்ணன் வழங்கும் இன்ப உலகம்

படம்
கண்ணன் வழங்கும் இந்த உறவு

9.படம்: எங்க வீட்டுப் பிள்ளை  பாடல்: நான் ஆணையிட்டால்

இசைத்தட்டு
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.

படம்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்.

10. படம்: சந்திரோதடயம்  பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
இசைத்தட்டு
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ

படம்
எழிலோடு எழில் வைத்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ

No comments:

Post a Comment