Monday, February 26, 2018

18. கேரள யாத்திரை - 1

கேரள திவ்யதேச யாத்திரை 21.01.18 அன்று பாலக்காட்டில் தொடங்கியது. இந்த ஆறு நாள் யாத்திரையில் நான் தரிசித்த 12 திவ்ய தேசங்கள் பற்றி விரிவாக வழிகாட்டும் வைணவம் என்ற என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். நான் சென்ற மற்ற இடங்கள், தரிசனம் செய்த பிற ஆலயங்கள் பற்றி இங்கே சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். 

21.01.18 - முதல் நாள் 
காலையில் முதலில் நாங்கள் சென்றது கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலுக்கு. எங்கள் குழுவின் வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்கள் இந்த ஆலயத்தின் சிறப்பு பற்றிக் கூறினார். 'கல்பாத்தி காசியில் பாதி' என்ற வழக்குக்கேற்ப இந்தக் கோவில் பழமையும், புனிதமும் நிறைந்தது.

கோவில் பிரகாரத்தை ஒட்டி அருகே கல்பாத்தி ஆறு ஓடுகிறது. விஸ்வநாதர் ஆலயத்துக்கு வெளியில் ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது.

கோவில்களின் புகைப்படங்களைக் கீழே காணலாம்  











கல்பாத்தி கோயில் தரிசனத்துக்குப் பிறகு நாங்கள் சென்ற இடம் வடக்குந்தரா  பகவதி கோவில். இந்தக் கோவிலில் விஷ்ணு சந்நிதியும், பகவதி சந்நிதியும் இருக்கின்றன. கோவில் புகைப்படங்கள் கீழே. 



அடுத்து நாங்கள் சென்ற இடம் பாலக்காடு கோட்டை. இது மிகவும் பழமை வாய்ந்த கோட்டை என்று கருதப்படுகிறது. 1757ஆம் ஆண்டு இது ஹைதர் அலியால் கைப்பற்றப்பட்டது. பிறகு திப்பு சுல்தான் வசமும் இருந்தது. இது திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. பின்பு இதை பிரிட்டிஷார் கைப்பற்றினர். 

மதில் சுவர்களையம், சில வாயில்களையும் தவிர,  தவிர பெரும்பாலும் இது ஒரு திறந்த வெளியாகத்தான் இப்போது இருக்கிறது. கோட்டையின்  உள்ளே ஒரு சிறிய ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. ஹைதர் அலி இந்தக் கோட்டையைத் தாக்க முயன்றபோது, ஒரு குரங்கு ஹைதர் அலியின் வீரர்களுடன் சண்டையிட்டு விரட்டி, கோட்டைக்குள் ஒளிந்திருந்த மக்களைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. வரம் தரும் ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றிருக்கும் இவரை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.

கோட்டையின் சில புகைப்படங்களைக் கீழே காணலாம்.









ஆஞ்சநேயர் கோவில் முன் 





















பிற்பகலில் மலம்புழா அணைக்கட்டுக்குச் சென்றோம். ஆற்றில் தண்ணீர் அதிகம் இல்லாததால் அணைக்கட்டு சோபை குன்றிக் காணப்பட்டது. கேபிள் காரில் அணைக்கட்டுப் பகுதி முழுவதும் சுற்றிப்பார்க்கக் கட்டணம் ரூபாய் 80. சுமார் 15 நிமிடங்கள் பயணம். புகைப்படங்களைக் கீழே காணலாம். நான்கு சிறிய வீடியோக்களும் உள்ளன .




































































மாலையில் புத்தூர் பகவதி க்வில் தரிசனத்துடன் யாத்திரையின் முதல் நாள் நிறைவடைந்தது. இரவில் பாலக்காட்டிலேயே தங்கினோம்.

Monday, May 29, 2017

17. திரைப்பாடல்களில் கர்நாடக இசை

 'The journey of classical Music in Tamul Films' என்ற தலைப்பில் திரு எம்.ஓ. பார்த்தசாரதி (எம் ஓ பி),  திரு பத்ரி இருவரும் இணைந்து மந்தைவெளி ரயில் நிலையத்துக்கு எதிரில் உள்ள கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ராஜகோபால்  அரங்கில்  இன்று (28/05/17) மாலை ஒரு நிகழ்ச்சி நடத்தப்  போவதாக என் கைபேசியில் எனக்கு அழைப்பு வந்திருந்தது.

கடந்த 8 மாதங்களாக பெங்களூருவாசி ஆகிவிட்ட நான் இன்று சென்னையில் இருந்ததால் இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்.

ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு அந்த ராகத்தைச்  சுருக்கமாக ஆலாபனை செய்து விட்டு, பிறகு அந்த ராகத்தில் அமைக்கப்பட்ட  ஒரு திரைப்படப் பாடலைப் பாடிக் காட்டுவதே நிகழ்ச்சியின் அமைப்பு முறை (format).

ராகங்களைப்  பற்றிய வர்ணனைகள், ஆரோஹண அவரோஹணங்கள் இல்லாமல் ராக ஆலாபனையை மட்டும் சுருக்கமாக வாய் மொழியாகவும், சில சமயம் கீபோர்டைப் பயன்படுத்தியும் செய்து முடித்தது என்னைப்  பொறுத்தவரை பாராட்டப்பட வேண்டிய விஷயம்.கர்நாடக இசை அறியாதவர்களுக்கு, 'இது 32ஆவது மேளகர்த்தா ராகம், கரஹரப்ரியா ஜன்யம் ' போன்ற செய்திகளோ, ஆரோஹண, அவரோஹணங்களோ ஒரு காது வழியே  புகுந்து மற்றோரு காது வழியே வெளியேறுகிற விஷயங்களாகத்தான் இருக்கும் என்பது என் அனுபவம்!

இவையெல்லாம் வேண்டும் என்பவர்கள் சாருலதா மணியோடு சேர்ந்து இசைப்பயணம் செய்யலாம்! மூன்று வேளை  சாப்பாடு, தங்கும் இடம், குறிப்பிட்ட தலங்களுக்கு வழிகாட்டியுடன் விஜயம் போன்ற அம்சங்கள் நிறைந்த பேக்கேஜ் டூர் போல் அது வேறொரு அனுபவம்!

பாட வகுப்புகள், கனமான விஷயங்கள் போன்ற 'சங்கதிகள்' இல்லாமல்   ஒரு மாலைப் பொழுதை இனிமையாகக் கழிக்க வேண்டும்  என்று நினைப்பவர்களுக்கு எம் ஓ பி - பத்ரி வழங்கிய இசை நிகழ்ச்சி ஒரு இனிய அனுபவமாக இருந்திருக்கும்.

ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு எம் ஓ பி ராக ஆலாபனை செய்ய, பத்ரி அந்த ராகத்தில் அமைந்த ஒரு திரைப்படப் பாடலை(முழுமையாக)ப்  பாடினர். சில பாடல்களை கரியோக்கியிலும் , சிலவற்றை நேரடியாகவும் பாடினார் பத்ரி

நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ராகங்கள், பாடல்கள் இவை. (பாடலின் பெயரை க்ளிக் செய்தால் யு டியூபில் பாடலைக் கேட்கலாம். பாடலைக் கேட்க விரும்பும் வாசகர்களுக்காக இந்த இணைப்புகளை நான் சேர்த்திருக்கிறேன்.)

1. ராகம்:  யமன், கல்யாணி
பாடல்: சிந்தனை செய் மனமே
படம்: அம்பிகாபதி
இசை: ஜி.ராமநாதன்

யமன் என்பது ஹிந்துஸ்தானி ராகம், கல்யாணி கர்நாடக ராகம் என்று குறிப்பிட்ட எம் ஓ பி, யமனில் வக்ரப்  பிரயோகம் அதிகம் என்று குறிப்பிட்டார். இரண்டு ராகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஆலாபனை செய்து காண்பித்தார்.

2. ராகம்:  சாருகேசி
பாடல்: மன்மத லீலையை வென்றார் உண்டோ?
படம்: ஹரிதாஸ்
இசை: ஜி.ராமநாதன்

3. ராகம்: ஆபேரி (பீம்ப்ளாஸ்)
பாடல்: நீல வான  ஓடையில் 
படம்: வாழ்வே மாயம்
இசை: கங்கை அமரன்

4.ராகம்:  கீரவாணி
பாடல்: பாட்டுப் பாட வா
படம்: தேன் நிலவு
இசை: ஏ. எம். ராஜா
கீரவாணியை வித்தியாசமாகப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட பாடல் இது என்று பத்ரி குறிப்பிட்டார்.

5. ராகம்:  தேஷ்
பாடல்: துன்பம் நேர்கையில்
படம்: ஓர் இரவு
இசை: ஆர். சுதர்சனம்

6. ராகம்:  பஹாடி
பாடல்: காலங்களில் அவள் வசந்தம்
படம்: பாவ மன்னிப்பு
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

7ராகம்:  நாட்டை
பாடல்: மனதில் உறுதி வேண்டும்
படம்:  சிந்துபைரவி
இசை: இளையராஜா

8. ராக மாலிகை
ஒன்றுக்கு மேற்பட்ட ராகங்கள் ஒரே பாடலில் அமைவது ராக மாலிகை (ராக மாளிகையம் கூட!). தமிழ்ப் பாடல்களில் மிகச் சிறந்த ராகமாலிகைகளில் ஒன்று கர்ணன் படத்தில் வரும் டி .எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ்  சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகிய நான்கு தலை சிறந்த பாடகர்களைப்  பாட வைத்து விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைத்த தொகையறாப்  பாடல்கள் என்று குறிப்பிட்டார் பத்ரி.

மழை கொடுக்கும் கொடையும் (சீர்காழி கோவிந்தராஜன்) - ஹிந்தோளம்
நாணிச் சிவந்தன (திருச்சி லோகநாதன்)  - கானடா
மன்னவர்  பொருட்களை (டி.எம்.சௌந்தரராஜன்) -  மோஹனம்
என்ன கொடுப்பான் (பி.பி.ஸ்ரீனிவாஸ்) - ஹம்ஸானந்தி
ஆயிரம் கரங்கள் நீட்டி (நால்வரும் இணைந்து) - ரேவதி

(5 பாடல்களையும் பாடிக் காட்டினார் பத்ரி.)

9. ராகம்:  ஆபோகி
பாடல்: தங்க ரதம்  வந்தது
படம்:  கலைக்கோவில்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

10. ராகம்: பிருந்தாவன சாரங்கா  (மேக் மல்ஹர்)
பாடல்: பொன் ஒன்று கண்டேன் 
படம்: படித்தால் மட்டும் போதுமா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

11.ராகம்:  சுத்த சாரங்கி
பாடல்:  இரவும் நிலவும்
படம்: கர்ணன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

12. ராகம்:  பாகேஸ்ரீ  
பாடல்: நிலவே என்னிடம் நெருங்காதே
படம்:  ராமு
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
கஜல் பாணியில் அமைந்த முதல் தமிழ்ப் பாடல் இது என்று குறிப்பிட்டார் பத்ரி.

13. ராகம்: கமாஸ் 
பாடல்: சித்திரம் பேசுதடி
படம்: சபாஷ் மீனா 
இசை:  டி .ஜி.லிங்கப்பா

14ராகம்:  சந்த்ர கௌன்ஸ்
பாடல்:  மாலைப் பொழுதின் மயக்கத்திலே  
படம்: பாக்யலக்ஷ்மி
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

15. ராகம்:  ஹமீர் கல்யாணி  
பாடல்:  என்னுயிர்த் தோழி கேளொரு சேதி
படம்:  கர்ணன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

16. ராகம்: மாயாமாளவகௌள 
பாடல்: கல்லெல்லாம் 
படம்: ஆலயமணி 
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

17.ராகம்:  தர்பாரி கானடா
பாடல்:  மலரே மௌனமா  தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த
படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
தர்பாரி கனடாவும், ஜோன்புரியும் ஒரே ஸ்கேலில் அமைந்த ராகங்கள் என்று குறிப்பிட்ட எம் ஓ பி இரண்டு ராகங்களுக்கு ம் உள்ள வேறுபாட்டை ஆலாபனை செய்து விளக்கினார். மலரே மௌனமா பாடலின் சில பகுதிகளைப்  பாடிக் காட்டினார்.

நேரம் குறைவாக இருந்ததால், மௌனம் சம்மதம் படத்தில் இடம் பெற்ற தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த 'கல்யாணத் தேன் நிலா' பாடலின் பல்லவியை மட்டும் பாடினர் பத்ரி.

18. ராகம்:  ஜோன்புரி  
பாடல்: நான் பெற்ற செல்வம்
படம்:  நான் பெற்ற செல்வம்
இசை: ஜி.ராமநாதன்

19. ராகம்: ஹம்சத்வனி  
இந்த ராகம் நிகழ்ச்சி நிரலில் இல்லை. பார்வையாளர் ஒருவரின் விருப்பத்துக்காக இந்த ராகத்தை ஆலாபனை செய்து காட்டினார் எம் ஓ பி.

20. ராகம்: ரீதிகௌளை  
இந்த ராகமும் நிகழ்ச்சி நிரலில் இல்லை. பார்வையாளர் ஒருவரின் விருப்பத்துக்காக இந்த ராகத்தில் அமைந்த 'தலையைக் குனியும் தாமைரையே' பாடலின் சில வரிகளை பாடிக் காட்டினார் பத்ரி 
படம்: ஒரு ஓடை  நதியாகிறது 
இசை: இளையராஜா 

21. ராகம்:  சுத்த தன்யாசி
பாடல்:  நீயே உனக்கு என்றும்  
படம்:  பலே  பாண்டியா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இந்த ராகமும் நிகழ்ச்சி நிரலில் இல்லை. பார்வையாளர் ஒருவரின் விருப்பத்துக்காக பாடலின் சில வரிகளை பாடிக் காட்டினார் பத்ரி.

22. ராகம்:  சிந்து பைரவி  
பாடல்:  என்னை யாரென்று  
படம்:  பாலும் பழமும்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

கர்நாடக இசைக் கச்சேரிகளை சிந்து பைரவியைப் பாடி நிறைவு செய்யும் வழக்கம் உண்டு. அது போல் இந்த நிகழ்ச்சியையும் சிந்து பைரவி ராகத்தில் நிறைவு செய்தனர் இந்த இருவர்.

என்னை யாரென்று பாடலைப் பாடி முடித்ததும், இதே ராகத்தில் அமைந்த உனக்கென்ன மேலே நின்றாய் (படம்: சிம்லா ஸ்பெஷல் இசை: எம் எஸ் விஸ்வநாதன்) பாடலின் சில வரிகளைப்  பாடி நிறைவு செய்தார் பத்ரி.

'உனக்கென்ன மேலே நின்றாய்' என்ற வரிகளைக் கேட்டதும் மேலே வீற்றிருக்கும், என்றும் நம் நெஞ்சில் மேலே நிற்கும் பாடல்களை வழங்கிய எம் எஸ் வியை நினைத்து மன நிறைவுடன் எம் ஓ பி, பத்ரி இருவருக்கும் என் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து விட்டுக்  கிளம்பினேன். 

Saturday, December 17, 2016

16. ஒரு வெட்டி ஆராய்ச்சி


பல பழைய தமிழ்ப் பாடல்களில் கிராமஃபோன் ரிகார்டில் வரும் (ரேடியோவில் ஒலிபரப்பப்படும்) வார்த்தைகள் சில திரைப்படத்தில் மாற்றப்பட்டிருக்கும். இதற்குக் காரணம் சென்ஸார் சில வார்த்தைகளை ஏற்றுக்குள்ளாதது. பொதுவாக, அரசியல் சார்பு, மதஉணர்வைப் புண்படுத்துவதாக அமைவது, காமம், ஆபாசம் போன்ற காரணங்களுக்காக சென்ஸார் ஆட்சேபங்களை எழுப்புவது வழக்கம். தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சென்ஸார் சான்றிதழ் வாங்கிப் படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசரத்தில் ஏதோ ஒரு வகையில் வார்த்தையை மாற்றிப் பாடகர்களை அந்த வார்த்தைகளை மட்டும் பாட வைத்து மாற்றி விடுவார்கள் என்று அறிகிறேன். சில மாற்றங்கள் வேடிக்கையாகவும், அபத்தமாகவும் இருக்கும். என் நினைவுக்கு வரும் சிலவற்றை இங்கே தருகிறேன். கடைசியாக நான் கொடுத்திருக்கும் உதாரணத்தில், சந்திரோதயம் பாடலின் ஒரு சரணம் முழுவதையும் வாலி அற்புதமாக மாற்றி அமைத்திருப்பதை வியந்திருக்கிறேன்.

1. படம்: அடுத்த வீட்டுப் பெண் பாடல்: காக்கை காக்கைக் கழகம் இது

இசைத்தட்டு
காக்கை காக்கைக் கழகம் இது
காரியம் கைகூடும் கழகம் இது  (கா.கை. கழகம் - காரியம்  கைகூடும்  கழகம்)

படம்
கற்றோர் நிறைந்த சங்கம் இது
காரியம் கைகூடும் சங்கம் இது

(கழகம் என்ற பெயர் கூடாது என்று சென்சஸார் வலியுறுத்தியிருக்கக் கூடம்!)

2. படம்: பாவ மன்னிப்பு  பாடல்: பாலிருக்கும்

இசைத்தட்டு
வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே- அது
வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே!

படம்
வேதமெல்லாம் காதலையே மறுக்கவில்லையே- அது
மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே!

3. படம்: சுமைதாங்கி  பாடல்: எந்தன் பருவத்தின் கேள்விக்கு
இசைத்தட்டு
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?

படம்
எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?

4. படம்: பணக்காரக் குடும்பம்  பாடல்: பறக்கும் பந்து பறக்கும்
இசைத்தட்டு
அடங்கும் ஆசை அடங்கும்

படம்
அடங்கும் அன்பு அடங்கும்

5.படம்: வல்லவன் ஒருவன்  பாடல்: அம்மம்மம்மா கன்னத்தில் கன்னம்
இசைத்தட்டு
முத்தம் என்பது புதுமையா?
முகத்துக்கு மேலே வா வா!

படம்
முத்தம் என்பது புதுமையா?
அழகுக்கு மேலே வா வா!

6. படம்: பெற்றால்தான் பிள்ளையா?  பாடல்: நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இசைத்தட்டு
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்

படம்
மேடையில் முழங்கு திருவிக போல்

7. படம்: அன்பே வா  பாடல்: புதுய வானம் புதிய பூமி
இசைத்தட்டு
உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

படம்
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

8 .படம்: பூவும் பொட்டும்  பாடல்: எண்ணம் போல
இசைத்தட்டு
கண்ணன் வழங்கும் இன்ப உலகம்

படம்
கண்ணன் வழங்கும் இந்த உறவு

9.படம்: எங்க வீட்டுப் பிள்ளை  பாடல்: நான் ஆணையிட்டால்

இசைத்தட்டு
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.

படம்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்.

10. படம்: சந்திரோதடயம்  பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
இசைத்தட்டு
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ

படம்
எழிலோடு எழில் வைத்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ

Tuesday, July 12, 2016

15. கடவுள் நம்பிக்கை - பல நிலைகள்


பக்தி 
சிந்தனை செய் மனமே 
செய்தால் தீவினை அகன்றிடுமே 
சிவகாமி மகனை ஷண்முகனை 
சிந்தனை செய் மனமே! 
மனமே, தினமே! 

அடைக்கலம் 
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே 
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! 

பரவசம் 
நாராயண மந்த்ரம் - அதுவே 
நாளும் பேரின்பம். 

கோரிக்கை 
கேட்டதும் கொடுப்பவனே க்ருஷ்ணா க்ருஷ்ணா 
கீதையின் நாயகனே க்ருஷ்ணா, க்ருஷ்ணா! 

கெஞ்சல் 
ஆண்டவனே உன் பாதங்களை என் கண்ணீரில் நீராட்டினேன் 
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன். 

இயலாமை 
ஆட்டுவித்தால் ஆரொருவர் 
ஆடாதாரோ கண்ணா? 
ஆசையென்னும் தொட்டிலினிலே 
ஆடாதாரோ கண்ணா? 

வெறுப்பு 
கையளவு உள்ளம் வைத்து 
கடல் போல் ஆசை வைத்து 
விளையாடச் சொன்னானடி - அவனே 
விளையாடி விட்டானடி. 

நன்றி 
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை 
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான். 

புலம்பல் 
ஆண்டவன் முகத்தைப் பாக்கணும் 
அவங்கிட்டே ஒண்ணே ஒண்ணு கேக்கணும் 
ஏண்டா சாமி என்னப் படைச்சே? 
என்னைப் படைக்கையிலே என்ன நெனச்சே? 

வேதனை  
அழுதால் என்ன தொழுதால் என்ன 
நடக்கும் கதைதான் நடக்குதப்பா!

கோபம் 
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் 
... படுவான், துடித்திடுவான் 
பட்டதே போதுமென்பான். 

விரக்தி 
இறைவன் இருக்கின்றானா? 
மனிதன் கேட்கிறான் 
அவன் இருந்தால் உலகத்திலே 
எங்கே வாழ்கிறான்? 
நான் ஆத்திகனானேன் 
அவன் அகப்படவில்லை. 
நான் நாத்திகனானேன் 
அவன் பயப்படவில்லை. 

முதிர்ச்சி 
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு 
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்! 

நன்றி - திரைப்படப் பாடல்கள்