Saturday, January 23, 2016

14. இலக்கு நோக்கிய பயணம்

டேவிட் ஷ்வார்ட்ஸ் எழுதிய 'உயர்ந்த சிந்தனையின் மந்திர சக்தி' (Magic of Thinking Big) என்ற புத்தகம் பல  இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது. வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் சில கோட்பாடுகளை அவர் விளக்குகிறார்.

இன்றைய  இளைஞர்கள் எந்த ஒரு குறிக்கோளும், நோக்கமும் இல்லாமல் தங்கள் கல்வியையும், தொழிலையும் தேர்ந்தெடுப்பது துரதிர்ஷ்டவசமானது. தங்கள் முயற்சியில் அவர்களால் அதிக வெற்றி அடைய முடிவதில்லை. அதனால் அவர்கள் விரக்தியடைந்து மற்றவர்களைக் குறை சொல்லத் துவங்குகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமற்ற பழக்கம்.

ஷ்வார்ட்ஸின் நூலின் மூன்றாவது பகுதியில் அவர் வாழ்க்கையில் வெற்றி பெற இலக்குகள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றி விளக்குகிறார். சரியான குறிக்கோள் இல்லாமல் ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பது வீணான முயற்சி.

முதலில், நமது தொழில் குறித்த இலக்குகளை நாம் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும். வேலை, குடும்பம், சமூக வாழ்க்கை ஆகிய மூன்று துறைகளிலும் நமது எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய மனத்தோற்றத்தை உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக, கீழ்க்கண்ட மூன்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, அவற்றுக்குத் தெளிவான விடை காண வேண்டும்:
1) என் வாழ்க்கையில் நான் என்ன சாதிக்க விரும்புகிறேன்?
2) நான் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறேன்?
3) எது எனக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது?

நமது கண்டுபிடிப்புகள், மருத்துவ முன்னேற்றங்கள் பொறியியல் சாதனைகள், தொழில்துறை வெற்றிகள் இவை எல்லாமே சிலரது மனதில் கற்பனை செய்யப்பட பிறகுதான் செயல் வடிவம் பெற்றன. இன்று பல குட்டி நிலாக்கள் (செயற்கைக் கோள்கள்) பூமியைச் சுற்றி வருவது தற்செயலாக நடந்த செயல் அல்ல - விஞ்ஞானகள் விண்வெளியை வெற்றி கொள்ள வேண்டும் என்ற இலக்கை மேற்கொண்டதால் ஏற்பட்டவை.

இலக்கு, குறிக்கோள் அல்லது நோக்கம் என்பது வெறும் கனவு அல்ல. கனவை உண்மையாக்கும் செயல். "என்னால் இப்படிச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்குமே"  என்று நினைப்பது இலக்கு அல்ல. "நான் இதை அடைவதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்" என்ற தெளிவான எண்ணம்தான் இலக்கு.

ஒரு இலக்கு தீர்மானிக்கப்படும் வரை எதுவுமே நடக்காது. எந்த முன்னேற்றமும் ஏற்படாது. இலக்கு இல்லாத மனிதர்கள் வாழ்க்கையில் எங்கோ அலைந்து திரிகிறார்கள். எங்கே போகிறோம் என்று தெரியாமல் தடுமாறி, இறுதியில் அவர்கள் எங்கேயும் போய்ச் சேர்வதில்லை!

உயிர் வாழக் காற்று எப்படி அவசியமோ அதுபோல வாழ்க்கைக்கு இலக்கு அவசியம்.

ஒரு விளம்பர நிறுவனத்தின் தபால் அனுப்பும் பிரிவில் வாரத்துக்கு 25 டாலர் சம்பளம்  வாங்கிகொண்டிருந்த தவே மகோனி என்பவர் தனது 27ஆவது வயதில் ஒரு விளம்பர நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆனார். 33ஆவது வயதில் இன்னொரு நிறுவனத்தின் தலைவர் ஆனார்.

இலக்குகளைப்பற்றி  அவர் சொல்வதைக் கேளுங்கள். "நீங்கள் முன்பு எங்கே இருந்தீர்கள், இப்போது எங்கே எங்கே இருக்கிறீர்கள், என்பவை முக்கியமல்ல. நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள் என்பதுதான் முக்கியம்."

ஒரு வளரும் நிறுவனம் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறது. முன்னணி நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றுபவர்கள் "இன்னும் 10 வருடங்களில் நமது நிறுவனம் எங்கே இருக்க வேண்டும்?" என்று சிந்திக்க வேண்டும். அதற்கேற்ப முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

ஒரு புதிய நிறுவனத்தின் உற்பத்தித் திறன் இன்றைய தேவையின் அடிப்படையில்  தீர்மானிக்கப்படுவதில்லை. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கான தேவையை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்படக்கூடிய பொருட்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

இன்றைய வியாபார நிறுவனம் தனது எதிர்காலத்தை நடக்கிறபடி நடக்கட்டும் என்று விட்டு விடுவதில்லை. நீங்கள் விட்டு விடப் போகிறீர்களா?

முன்னேறிச் செல்லும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் பாடம் கற்கலாம். நாம் அடுத்த பத்தாண்டுகளுக்கு நமது வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும். நம்மால் அது முடியும்.

No comments:

Post a Comment