Monday, April 15, 2019

32. நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை - 1.நைமிசாரண்யம்

டெல்லியில் உள்ள ஸ்ரீனிவாசா டிராவல்ஸ் நரசிம்மன் அவர்கள் ஏற்பாடு செய்த நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரையில் பங்கேற்க, நானும் என் மனைவியும்  3.4.19 அன்று காலை பெங்களூரிலிருந்து கிளம்பி ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி சென்றடைந்தோம்.

சென்னை, கோவையிலிருந்து என் மனைவியின் சகோதர, சகோதரிகள் குடும்பத்தினர் 10  பேரும்  டெல்லிக்கு வந்தனர். டெல்லியிலிருந்து  மொத்தம் சுமார் 100 பேர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டோம். நைமிசாரண்யத்தில் இன்னும் 20 பேர் சேர்ந்து கொள்ள, 120 பேர் இதில் பங்கு கொண்டோம். இது தவிர இன்னும் 10 பேர்  நேபாளத்தில் உள்ள போக்ராவில் வந்து சேர்ந்து கொண்டனர்.

டெல்லி பேர் சராயில் உள்ள வேதாந்த தேசிகா மார்கில் (வேதாந்த தேசிகர் பெயரில் டெல்லியில் ஒரு முக்கிய சாலை இருப்பது மகிழ்ச்சியளிக்கும் ஆச்சரியம்தான். இந்தச் சாலை மந்திர் மார்க் என்றும் அழைக்கப்படுகிறது) உள்ள வைகுந்தநாத்ஜி கோயிலிலிருந்து 3.4.19 மாலை கிளம்பி ஆர் கே புரத்தில் உள்ள பாலாஜி மந்திருக்குச் சென்றோம். இங்கிருந்து இரவு சுமார் 10 மணிக்கு மூன்று பஸ்களில் நைமிசாரண்யத்துக்குக் கிளம்பினோம்.

370 கிலோமீட்டர் பயணம் செய்து, மறுநாள் 4.4.19 காலை நைமிசாரண்யம் வந்து சேர்ந்தோம்.

நைமிசாரண்யம் என்ற பெயரை நைமிச ஆரண்யம் என்று பிரிக்கலாம். நேமி என்றால் சக்கரம், ஆரண்யம் என்றால் காடு. இந்த இடம்  ஒரு காடாக இருந்தது. இங்கு திருமால் காடு வடிவமாகவே இருப்பதாக ஐதீகம், இப்போது இது மரங்கள் கூட அதிகம் இல்லாமல் ஒரு நவீன நகரமாகக் காட்சி அளிக்கிறது. இந்த ஊர் நிம்சார் அல்லது நிம்கார் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு முறை சௌனகர் முதலான முனிவர்கள் பிரம்மாவிடம் சென்று பூவுலகில் தவம் செய்ய மிகவும் சிறந்த இடம் எது என்று கேட்க, பிரம்மா ஒரு தர்ப்பையை எடுத்து அதைச் சக்கரம் போல் சுருட்டி உருள விட்டார். அந்தச் சக்கரம் உருண்டு வந்து இந்தக் காட்டில் நின்றதால், இது நைமிசாரண்யம் என்று அழைக்கப்படுகிறது.

சக்கரம் வந்து நின்ற இடத்தில் வட்டமாக ஒரு சிறு குளம் இருக்கிறது. இது சக்ர தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

இந்தத் தலத்தில் ஒரு நிமிடம் தவம் செய்தாலும் முக்தி அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவும் நைமிசாரண்யம் (நிமிஷம் + ஆரண்யம்) என்ற பெயர் அமைந்துள்ளது.

இங்கு தானவர்கள் என்ற அரக்கர்கள் பகவானால் ஒரு நிமிஷத்தில் அழிக்கப்பட்டதாக வராஹ புராணம் கூறுகிறது.

நைமிசாரண்யம் புராணங்களில் போற்றப்பட்டிருக்கும் ஒரு தலம்.
பல முனிவர்கள் தவம் செய்த புண்ய பூமி இது.

ராமாயணம், மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் நைமிசாரண்யம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்ய வந்தபோது, லவ குசர்கள் தங்கள் தந்தை ராமரைச் சந்தித்தது இங்குதான்.

அர்ஜுனனின்  மகன் அபிமன்யுவின் வாரிசாக, உத்தரையின் வயிற்றில் உதித்த பரீக்ஷித் மன்னன் ஒரு முனிவரின் சாபம் காரணமாக தக்ஷகன் என்ற பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டான். அப்போது சிறுவனாக இருந்த பரீக்ஷித்தின் மகன் ஜனமேஜயன் வளர்ந்து அரசனான பின் தன் தந்தைக்கு நேர்ந்த கொடுமைக்குப் பழி தீர்க்கும் விதத்தில், பாம்புகளை மொத்தமாக அழிக்க எண்ணி சர்ப்ப யாகம் என்ற யாகம் செய்தான். அந்த யாகத்துக்கு வந்திருந்த வியாசர், தன் சீடர் வைசம்பாயனரிடம் சொல்லி,  அங்கிருந்த முனிவர்களுக்கு மகாபாரதக் கதையைச் சொல்ல வைத்தார்.

அங்கு அதைக் கேட்ட உக்ரஸ்ரவஸ் என்ற முனிவர் நைமிசாரண்யத்தில் தவம் செய்து வந்த சௌனகர் முதலான முனிவர்களுக்கு மகாபாரதக் கதையைச் சொன்னார்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நைமிசாரண்யத்தில் பல கோவில்கள் மற்றும் வேறு பல புனிதமான இடங்கள் உள்ளன.

நைமிசாரண்யம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோவிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும், சீதாபூரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் விஷ்ணுவின் 8 ஸ்வயம் வக்ஷ (தானே அமைந்த) க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. (ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம் (முக்திநாத்), தோத்தாத்ரி (வானமாமலை), திருப்பதி, புஷ்கர், பத்ரி இவை மற்றவை)

9 தபோவனங்களில் (தவம் செய்ய ஏற்ற இடங்கள்) ஒன்றாகவும் இந்தத் தலம் கருதப்படுகிறது. (தண்டகாரண்யம், சைந்தவாரண்யம், ஜம்புகாரண்யம், புஷ்கரராண்யம், உத்பலாரண்யம், பத்ரிகாரண்யம், குருஜங்களாரண்யம், அற்புதாரண்யம் ஆகியவை  மற்றவை.)

எங்கள் நைமிசாரண்ய யாத்திரை காலை கோமதி நதியில் நீராடுவதில் தொடங்கியது.

இன்று 4.4.19 அமாவாசை என்பதால் தர்ப்பணம் செய்ய வேண்டியவர்கள் நதிக்கரையிலேயே தர்ப்பணம் செய்து விட்டு, பாலாஜி கோவிலுக்குச் சென்றோம்.

பாலாஜி கோவில் 
இது சமீபத்தில் கட்டப்பட்ட  கோவில். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு டிரஸ்ட்டால்
கட்டப்பட்டுள்ள இந்தக் கோவிலில் வெங்கடாசலபதி அருள் பாலிக்கிறார். பெருமாள் சந்நிதிக்கு அருகில் மகாலக்ஷ்மி, வராஹர், பூதேவி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன.






பாலாஜி கோவில் 
பாலாஜி கோவில் 




















பாலாஜி கோவில் 
பாலாஜி கோவில் 






















தேவராஜப்  பெருமாள் கோவில் 



இங்கிருந்து தேவராஜப்  பெருமாள் கோவிலுக்குச் சென்றோம். நைமிஷ நாதர் கோவில் என்றும் அழைக்கப்படும் இந்த திவ்ய தேசம்  திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.







இதற்குப் பிறகு ஹநுமான் கட்டி என்ற ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றோம்.
ஹனுமான் கட்டி 
ஹனுமான் கட்டி 
இங்கு ராமரையும், லக்ஷ்மணரையும் இரு தோள்களில்   தாங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர் விக்கிரகம் இருக்கிறது.

ஹனுமான் கட்டிக்கு வெளியே 
ஹனுமான் கட்டிக்கு வெளியே 



















பாண்டவ கிலா 
பாண்டவ கிலா 


























ஹனுமான் கட்டிக்கு அருகிலேயே, அதற்குச் செல்லும் வழியிலேயே பாண்டவ கிலா (பாண்டவர் கோட்டை)  என்று அழைக்கப்படும்
பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திரௌபதி  கோவில் உள்ளது. இங்கு பஞ்ச பாண்டவர்கள், திரௌபதி ஆகியோரின் சிலைகளுடன், கிருஷ்ணர் சிலையும் இருக்கிறது.
வெளியே உள்ள குளம்










வெளியே உள்ள குளம் 



குளத்துக்கருகே வாத்து 















குளத்துக்கருகே வாத்துக்கள் 
குள த்துக்கருகே வாத்துக்கள் 
இந்த இரு கோவில்களுக்கருகே வட்ட வடிவில் ஒரு சிறு குளம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் மரங்கள் இருப்பதால் நிழலின் குளிர்ச்சியில் சில வாத்துக்கள் நடமாடிக் கொண்டிருந்தன.
குளத்துக்கருகே வாத்துக்கள்




குளத்துக்கருகே வாத்துக்கள்
























அடுத்து  நாங்கள் சென்ற இடம் அஹோபில மடம். இங்கே லட்சுமி நரசிம்மர் சந்நிதி உள்ளது. உத்தர அஹோபிலம் என்ற பெயரில் இங்கேயும் அஹோபிலத்தில் உள்ளது போல் நவ நரசிம்மர் சந்நிதிகளுடன்  கோவில் கட்டும் திட்டம் உள்ளது.

அஹோபில மடத்தின் 43ஆவது பட்டம் தேவனார் வளாகம் அழகிய சிங்கர் வைகுண்ட பிராப்தி அடைந்தது இங்கேதான். அவருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது.


வியாச கட்டி 

 இதன் பிறகு நாங்கள் வியாச கட்டிக்குச் சென்றோம். இங்கு வியாசர்,
காஸ்யபர், சுகர், சௌனகர், வைசம்பாயனர் ஆகியோரின் உருவச்  சிலைகள் உள்ளன. இங்கு 5000 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்ததும், தன் சீடர்களான வைசம்பாயனர் முதலிய சீடர்களுக்கு மகாபாரதத்தை உபதேசித்ததும் இங்குதான் என்று சொல்லப் படுகிறது.
வியாச கட்டி (ஆலமரம்)












சக்ர தீர்த்தம் 









இறுதியாக சக்ர தீர்த்தத்துக்குச் சென்றோம். முன்பே குறிப்பிட்டபடி, பிரும்மா சக்கர வடிவில் செலுத்திய தர்ப்பை வந்து விழுந்த இடம்தான் சக்ர தீர்த்தம் என்று நம்பப்படுகிறது.







சக்ர தீர்த்தம்







சக்ர தீர்த்தம் 
நைமிசாரண்யத்துக்கு இன்னும் பல பெருமைகள் உண்டு. இங்குதான் சூதர் என்ற முனிவர் சௌனகருக்கு சத்யநாராயணா புராணத்தை உபதேசித்தார். 

விருத்தாசுரனைக் கொல்ல இந்திரனுக்கு வலுவான ஒரு ஆயுதம் தேவைப்பட்டது. ததிசி என்ற முனிவரின் எலும்புகளிலிருந்து வஜ்ராயுதம் என்ற வலுவான ஆயுதத்தைத் தயாரித்து அதைப் பயன்படுத்தித்தான் விருத்தாசுரனைக் கொல்ல முடியும் என்று இந்திரனிடம் விஷ்ணு கூறியதால், ததிசி முனிவரை அவர் எலும்புகளைக் கொடுத்து உதவ வேண்டும் என்று இந்திரன் கேட்டுக்கொள்ள, அவரும் அதற்குச் சம்மதித்தார். ஆனால், தாம்  உயிர் துறக்குமுன் எல்லாப் புண்ணிய நதிகளிலும் நீராட வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்திரன் எல்லாப் புனித நதிகளையும் நைமிசாரண்யத்துக்கு வரவழைக்க, ததிசி முனிவர் அதில் நீராடினார். நைமிசாரண்யத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ததிசி குண்ட் அல்லது மிஸ்ரிக் தீர்த் என்ற இடத்தில் ஒரு குளம், கோவில் மற்றும் ஆசிரமம் உள்ளன.

தச அஸ்வமேத கேட் என்ற இடத்தில்தான் ராமர் தன் 10ஆவது அஸ்வமேத யாகத்தை நடத்தினார்.

ஆதிசங்கரர் இங்கு வந்து லலிதா பீடத்தை இங்கே அமைத்திருக்கிறார். இங்கு லலிதா தேவிக்கு ஒரு ஆலயம் இருக்கிறது. லலிதா தேவிதான் இந்த ஊரின் காவல் தெய்வம் என்று கருதப்படுகிறார்.

பக்திப் பாடல்கள் பல இயற்றிய சூர்தாஸ் இந்த ஊரில் வாழ்ந்திருக்கிறார். சூர்தாஸ் பஜன் என்று கர்நாடக இசைக்க கச்சேரிகளில் அதிகம் இடம் பெறுவதை பலரும் கவனித்திருக்கலாம். 

சீதா குண்ட் என்ற குளத்தில்தான் சீதை கானகத்துக்குச் செல்லுமுன் நீராடினார் என்று நம்பப்படுகிறது,

சூத் கட்டி என்ற இடத்தில்தான் சூதர் சௌனகர் முதலான 88,000 முனிவர்களுக்குப் புராணங்களை உபதேசித்தார்.

இங்கு ராமானுஜ கூட்டம், வானமாமலை மடம் ஆகியவை இருக்கின்றன. 

நைமிசாரண்யத்தில் நாங்கள் இருந்தது அரை நாள்தான் என்பதால் எல்லா இடங்களையும் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. 

நைமிசாரண்யத்திலிருந்து பிற்பகல் கிளம்பி 180 கிலோமீட்டர் பயணம் செய்து மாலை சுமார் 7 மணிக்கு அயோத்தி வந்து சேர்ந்தோம். இரவு அயோத்யாவில் தங்கினோம்.

அயோத்தி பற்றி அடுத்த பதிவில்.








No comments:

Post a Comment