சரயு நதி |
நீராடியபின் நாங்கள் சென்றது அம்மாஜி மந்திர் என்று அழைக்கப்படும் ராமர் கோவிலுக்கு. சுமார் 100 வருடங்களுக்கு முன் சிங்காரம்மா என்ற பெண்மணியால் கட்டப்பட்ட கோவில் இது. சென்னையைச் சேர்ந்த யோகி பார்த்தசாரதி என்பவர் பல வைணவ நூல்களைப் பிரசுரித்தவர். அவர் மனைவி யோகி சிங்காரம்மாவின் முயற்சியால் கட்டப்பட்ட கோவில் இது. அதனாலேயே இது அம்மாஜி மந்திர் என்று அழைக்கப்படுகிறது.
அம்மாஜி மந்திர் |
லக்னோவுக்குக் கிழக்கே 135 கிலோமீட்டரில் அமைந்துள்ள அயோத்தி ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்ய தேசம். அயோத்தியில் ராமருக்குப் பல கோயில்கள் உள்ளன. ஆயினும் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அம்மாஜி மந்திர்தான் திவ்ய தேசக் கோவில் என்று கருதப்படுகிறது. ஆழ்வார்களால் பாடப்பட்ட கோயில் இப்போது அம்மாஜி மந்திர் அமைந்திருக்கும் இடத்தில்தான் இருந்தது என்று நம்பப்படுகிறது.
அயோத்தியில் சரயு நதிதான் திவ்யதேசம் என்று எங்கள் பயண நிர்வாகி நரசிம்மன் கூறினார். சரயு நதி காக்ரா என்றும் அழைக்கப்படுகிறது.
ராம் குப்தர் காட் |
அம்மாஜி மந்திரில் தரிசனம் செய்தபின், நாங்கள் சரயு நதிக்கரையில் உள்ள ராம் குப்தார் காட் என்ற இடத்துக்குச் சென்றோம். இந்த இடத்தில்தான் ராமர் தன் தம்பிகளுடன் சரயு நதியில் மூழ்கித் தம் அவதாரத்தை முடித்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இதுதான் மிகப் பழமையான கோவில் என்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
ராம் குப்தார் காட் |
ராம் குப்தார் காட் |
இங்கு ராமர், சீதை, லக்ஷ்மணர், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும், ராமர் பாதமும் உள்ளன.
ஹனுமான் இங்கு வந்து ராமபிரானுக்கு விடை கொடுத்து விட்டு அருகிலுள்ள ஹனுமான் கட்டி என்ற இடத்துக்குச் சென்று அமர்ந்து விட்டார். கோட்டை போன்ற அமைப்புடன் உள்ள பழமை வாய்ந்த கோவில் இது.
ராம் குப்தார் காட் நரசிம்மர் உருவப்படம் |
இங்கு சரயு நதியில் சற்று தூரம் சென்று வர படகு வசதியும் உள்ளது.
ராம் குப்தார் காட் படகுத்துறை |
ராம் குப்தார் காட் படகுத்துறை |
ராம் ஜென்ம பூமி ஓர்க் ஷாப் |
பிறகு ராம ஜென்ம பூமி ஓர்க் ஷாப் என்ற கட்டுமானப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இன்னொரு ராமர் கோவிலுக்குச் சென்றோம்.
விக்கிரகங்கள் |
இங்கு ராமர்., லக்ஷ்மணர், சீதை விக்கிரகங்கள் உள்ளன. இந்த விக்கிரகங்கள்தான் ராமஜென்ம பூமியில் கட்டப்படும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் என்று சொன்னார்கள்.
ராமர் கோவில் கட்டுமானப் பகுதிகள் |
ராமர் கோவில் கட்டப் பயன்படுத்தப்படும் வகையில், சிற்ப சித்திர வேலைப்பாடுகளுடன் பல கல் பிளாக்குகள் உருவாக்கப்பட்டுஇந்தக் கோவிலின் பல இடங்களிலும் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ளன. .
கட்டுமானப் பகுதிகள் |
ராமர் கோவில் கட்டுமான அமைப்பு |
ராமர் கோவில் "வரலாறு" சித்திர வடிவில் |
ராம ஜென்ம பூமி பற்றிய "வரலாறு" (இது சரித்திரச் சான்று பெற்றதல்ல என்பதால் இந்த மேற்கோள் குறி) சுவரில் சித்திர வடிவில் எழுதப்பட்டு கம்பி போடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது
ராமர் பட்டாபிஷேகக் கோவில் |
அதற்குப் பிறகு ராமர் பட்டாபிஷேகக் கோவிலுக்குச் சென்றோம். இங்கு பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர் காட்சி அளிக்கிறார். இங்கு சீதையின் சமையலறை என்று ஒரு அறை இருக்கிறது. இவையெல்லாம் அயோத்தி அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்திருக்கக் கூடும். இப்போது இந்த சமையலறையில் சமையல் செய்து தினம் அன்னதானம் செய்து வருகிறார்கள்.
இந்தக் கோவில் பெரும்பாலும் ராம் ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட
ஆதரவு திரட்டும் நோக்கத்திலேயே இயக்கப்பட்டு வருவதாகத் தோன்றியது. இங்கு வரும் பக்தர்களை ஒரு அறையில் உட்கார வைத்து ராம் ஜென்ம பூமிக்கு ஆதரவாக ஒருவர் இந்தியில் பேச அதை ஒரு மூதாட்டி எங்களுக்காகத் தமிழில் மொழிபெயர்த்தார். இறுதியில் கோவில் கட்டவும், அன்னதானம் செய்யவும் நன்கொடை கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்கள்,
ராமர் பட்டாபிஷேகக் கோவிலுக்கு எதிரே உள்ள உயரமான ஆஞ்சநேயர் சிலை |
இந்தப் பரந்த வளாகத்தின் ஆரம்பப் பகுதியில் இரண்டு மூன்று மண்டபங்கள் உள்ளன. இவற்றில் ராமர், லக்ஷ்மணர், பாரத சத்ருக்னர், சீதை, லவ, குசர் ஆகியோர் விக்கிரகங்கள் உள்ளன.
திறந்த வெளியில் கம்பி வெளிக்குப் பின்னே இருந்த ஒரு மரத்துக்கருகே ஒரு பசுமாடு நின்று கொண்டிருந்தது. இதன் தாய்ப்பசு அந்த மரத்தை தினம் 108 முறைகள் பிரதட்சிணம் செய்யும் என்றும், தாய்ப்பசு இறந்த பின், இந்தப் பசுவும் தன் தாய் செய்தது போலவே தினமும் அந்த மரத்தை 108 முறை சுற்றி வருவதாகவும் எங்கள் பயண நிர்வாகி கூறினார். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்.
நீண்ட தூரம் சென்றதும் சற்றுத் தொலைவிலிருந்து ராமர், சீதை விக்கிரகங்களைப் பார்க்கலாம். மிகச் சிறிய விக்கிரகங்கள். ராமர் விக்கிரகம் ராம் லல்லா (குழந்தை ராமர்) என்று அழைக்கப்படுகிறது.
ராம் ஜென்ம பூமிக்கு வெளியில் வந்ததும் அருகில் உள்ள சாலைகளில் தொடர்ந்து பல ராமர் கோவில்கள் உள்ளன. ராஜ் கட்டி என்ற இடத்தில் ராமரின் சிங்காதனம் உள்ளது.
கனகமஹால் என்று ஒரு பெரிய கட்டடம் உள்ளது. இது தசரதர் சீதைக்குப் பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது. மாலை சுமார் ஆறரை மணிக்கு இங்கு நடக்கும் ஆரத்தி மிகப் பிரசித்தம். அந்த ஆரத்தியைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
பரத் பவன் என்ற மாளிகையில்தான் தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை.
இன்னொரு பிரபலமான கோவில் ஹனுமான் கட்டி முன்பே குறிப்பிட்டபடி ராம் குப்தார் காட்டில் ராமருக்கு விடை கொடுத்து விட்டு ஹனுமான் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்.
சற்று உயரமாக (சுமார் 100 படிகள் எற வேண்டும்) அமைந்துள்ளது இந்தக் கோவில். இங்கு ஆஞ்சநேயருக்கு இனிப்புகள் படைப்பது வழக்கமாக இருக்கிறது.
ஹனுமான் கட்டிக்குப் பிறகு நாங்கள் சென்றது லவ குசா கோவில். இது பெரிய மண்டபம் கொண்ட கோவில். இங்கு வால்மீகி இரு புறமும் லவ, குசர்கலின் கையைப் பற்றியபடி நிற்கிறார். இங்குள்ள சுவர்களில் வால்மீகி ராமாயணத்தின் 24,000 செய்யுள்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோவிலுக்கு எதிரே உள்ள இன்னொரு கோவிலில் ராமர், லக்ஷ்மணர், சீதை சந்நிதியும் அருகிலேயே பெரிய ரங்கநாதர் விக்கிரகமும் இருக்கிறது.
இந்தக்கோவில்களுக்கு அருகில் சார்தாம் என்ற கோவிலில் ராமேஸ்வரம், துவாரகை, பூரி, பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்களில் உள்ள மூர்த்திகளை தரிசிக்கலாம்.
சார்தாம் தரிசனத்துடன் அன்றைய தரிசனம் நிறைவு பெற்றது.
நந்திகிராமம் கோவில் நுழைவு |
காட்டுக்குச் சென்ற ராமரை சித்திரகூடத்தில் சந்தித்து, அவருடைய பாதுகையைப் பெற்ற பரதன், அவற்றை பரதன் நந்திகிராமத்தில் வைத்து அங்கிருந்துதான் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ராமர் அயோத்திக்குத் திரும்பி வரும் வரை பரதர் அயோத்திக்குத் திரும்பவில்லை.
பரதன்-ஹனுமான் |
பரதன் ஹனுமான் தழுவிக்கொள்ளுதல் |
பரதன்-ஹனுமான் |
பரதன்-ஹனுமான் |
நுழைவாயில் |
நுழைவாயில் |
பாதுகைகள் வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு சந்நிதி |
பரதனும், ஆஞ்சநேயரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் விக்கிரகம் இங்குள்ள கோவிலில் இருக்கிறது. கீழ்த்தளத்தில் (basement) ராமரின் பாதுகைகளை, ஹனுமான், பரதன் விக்கிரகங்களும் உள்ளன,
கோவிலுக்கு முன்புறம் நமக்கு வலது புறமாக இன்னொரு சிறிய அறையிலும் பாதுகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது பின்னால் ஏற்படுத்தப்பட்டது என்றும் கோவிலின் கீழ்த்தளத்தில் உள்ள பாதுகைகள்தான் பழமையானவை என்றும் கூறப்படுகிறது.
நந்திகிராமிலிருந்து கிளம்பி கோரக்பூர் வழியே 215 கிலோமீட்டர் பயணம் செய்துஇந்திய நேபாள எல்லை பகுதியான சோனாலிக்கு மாலை வந்து சேர்ந்தோம்.
No comments:
Post a Comment