Saturday, May 12, 2018

26. பத்ரிநாத் யாத்திரை 2 - ரிஷிகேஷ்

ரிஷிகேஷ் - ஒரு தோற்றம் 

1.5.2018 இரவு தில்லி பாலாஜி மந்திரிலிருந்து கிளம்பிய நாங்கள் 2.5.2018 காலை ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம். ரிஷிகேஷில் உள்ள பரத் மந்திருக்குச் சொந்தமான தர்மசாலாவில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'தர்மசாலா' என்று பெயர் இருந்தாலும், இந்த விடுதியில் அறைகள் ஓரளவுக்கு வசதியாகவே இருந்தன. விடுதி சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. விடுதிக்குள் இருந்த விஸ்தாரமான திறந்த வெளி மைதானத்தில் மூன்று வாகனங்கள்  நிறுத்தப்பட்ட பிறகும் நிறைய இடம் இருந்தது.பரத் மந்திரை ஒட்டிய சாலை 

தர்மசாலாவை ஒட்டி ஆண்டவன் ஆசிரமம் இருந்ததால், உணவு சமைக்கவும், பரிமாறவும் வசதியாக இருந்தது. எல்லா ஆண்டவன் ஆசிரமங்களில் இருப்பது போல் உள்ளே பெருமாள் சந்நிதியும் இருந்தது.

'திரிவேணி கட்' என்ற படித்துறையில் கங்கை நதியில் நீராடினோம். ஆற்றில் நீரோட்டம் குறைவுதான். நடுவே மணல் திட்டுகள் இருந்தன. ஆயினும் நீரோட்டத்தின் வேகம் அதிகமாகவே இருந்தது. கங்கா ஸ்நானம் உடலுக்கும் மனதுக்கும் ரம்மியமாக இருந்தது.

காலை உணவுக்குப் பிறகு ஆட்டோக்களில் கிளம்பினோம். பின்புறம் இரண்டு இருக்கைகளில் ஆறு பேர் தாராளமாக அமரவும், முன்புறம் ஓட்டுனருக்கு அருகே இருவர் அமரவும் இடவசதி கொண்ட ஆட்டோக்கள். போக வேண்டிய இடங்கள் ஒரு சில கிலோமீட்டர்களுக்குள்ளேயே இருந்ததால், ஆட்டோப் பயணம்   வசதியாகவே இருந்தது.

பரத் மந்திர் 
பரத் மந்திர் - விவரம் 
முதலில் நாங்கள் சென்ற இடம் பரத் மந்திர். இந்தக் கோவிலில் எழுந்தருளி இருப்பவர் பரத் பகவான்.

கிருத யுகத்தில், ரைப்ய முனிவர், சோம சர்மா என்ற இருவரின் தவத்தை மெச்சி அவர்களுக்குக்  காட்சி தந்த விஷ்ணு, அவர்கள் தவம் செய்த இந்தத் தலத்தில்,  கலியுகத்தில் தான் பரத் பகவானாகக்  காட்சி அளிப்பேன் என்று வரம் தந்தார்.

இரு முனிவர்களும் தங்கள் உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தித் தவம் செய்ததால், அவர்கள் தவம் செய்த இத்தலம்  ரிஷிகேஷ் என்று அழைக்கப்படும் என்றும் வரம் அருளினார் விஷ்ணு. ரிஷிகேசன் என்ற பெயருக்கு இந்திரியங்களுக்கு (உடல் உறுப்புகளுக்கு) இறைவன் என்று பொருள். இது விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று என்றாலும், இந்திரியங்களை அடக்கிய இந்த இரு தவசீலர்களுக்கும் இந்தப் பெயர் பொருந்தும் என்பதால் திருமால் இவ்வாறு அருளினார். இந்த விவரம் கோயில் வாசலில் உள்ள கல்லில் எழுதப்பட்டுள்ளது.
பரத் மந்திர் - விவரம் 

இந்தக் கோவிலில் உள்ள பரத் பகவானின் விக்கிரகம் ஆதிசங்கரரால் கி.பி.789ஆம் ஆண்டு வசந்த பஞ்சமி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தக் கோவில் பற்றி ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம், வாமன புராணம், நரசிம்ம புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் மண்டபத்தில் நுழைந்ததும், நமக்கு இடப்புறமாக ஹனுமான், ராமர், பாலகிருஷ்ணன், நர்த்தன விநாயகர் ஆகியோரின் சிறிய விக்கிரகங்கள் உள்ளன. பரமபதநாதனின் படமும் உள்ளது. சந்நிதிக்குள்ளே பரத் பகவானின் எழிலான தோற்றம்.


பரத் மந்திர் நுழைவாயில்  

பிறகு நமக்கு வலப்புறமாக சந்திரன்,  ஹனுமான் ஆகியோரின் சிற்பங்கள், ராமர் பட்டாபிஷேகப் படம்.

சுவற்றில் வரையப்பட்டுள்ள ஒரு படத்தில் மார்க்கண்டேய முனிவர் வெள்ளத்தில் நீந்தியபடி இருக்க, சற்றுத் தள்ளி ஆலிலை மீது பாலமுகுந்தன் படுத்திருக்கும் காட்சி.  இதன் முக்கியத்துவம் எனக்குப் புரியவில்லை. (படத்தில் இருப்பவர்கள் மார்க்கண்டேயரும், பாலமுகுந்தனும் என்று எனக்குச் சொன்னவர் கோவில் அர்ச்சகர். அதற்கு மேல் அவரிடம் விவரம் கேட்கப் போதிய இந்தி அறிவு இல்லை!) இவற்றைத் தாண்டி, கருடன் விக்கிரகமும், ராதாகிருஷ்ணரின் படமும் இருக்கின்றன..

பிரகாரத்தில் விநாயகர், மற்றும் சிவலிங்கம் சந்நிதிகள்.தரைமட்டத்துக்குக் கீழே இருக்கும் சிவலிங்கத்தை தரிசிக்க ஐந்தாறு படிகள் கீழே இறங்கிச்  வேண்டும்.
பரத் மந்திர் - நுழைவாயில் 

கோவில் வாசலில் ஒரு பழைய அரசமரம். வெளிப் பிரகாரத்தில் நாகர் சந்நிதியும், அதைத் தாண்டி அருங்காட்சியகமும் அமைந்திருக்கின்றன.

அருங்காட்சியகத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பல சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கி.பி. 5 - 8 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று தீர்மானிக்கப்பட்டிருக்கும் இச்சிற்பங்களில் விஷ்ணு, சிவன், பார்வதி, யக்ஷி போன்ற தெய்வ வடிவங்களும், மனித முகம், தலை போன்ற உறுப்புகளும், வேலைப்பாடுடன் கூடிய செங்கற்களும், அம்மி, குழவி போன்ற உபகரணங்களும் அடங்கும்.

பரத் மந்திர்  - பிரகாரத்தில் சிற்ப வேலைப்பாடுகள்  
பரத் மந்திர் - முகப்புத் தோற்றம் பரத் மந்திர் - அரச மரம் 


பரத் மந்திர் - வெளிப்புறம் 
பரத் மந்திரிலிருந்து தெரியும் காட்சி 
வெங்கடாசலபதி திருக்கோவில் (திருமலை-திருப்பதி தேவஸ்தானம்)
பரத் மந்திரில் தரிசனம் செய்தபின், நாங்கள் சென்ற இடம் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் அமைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோவில்.

கோவிலின் பிரதான சந்நிதியில் வெங்கடாசலபதி அருள் பாலிக்கிறார்.  பத்மாவதித் தாயார், அனந்த பத்மநாபர், ஸ்ரீதேவி பூதேவி ஸமேத லக்ஷ்மிநாராயணர், ஆண்டாள் ஆகியோருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. பெருமாளைப் பார்த்தபடி கருடனும் சேவை சாதிக்கிறார். தென்னிந்தியக் கோவில் வழிபாடு முறை இங்கு பின்பற்றப்படுகிறது.

இஸ்கான் கோவில் (ISKCON Temple)


வெளிப்புறத் தோற்றம் 
 இஸ்கான் நிறுவனத்தின் கிருஷ்ணர் கோவில் சற்று உயரமான இடத்தில் அழகாகவும், எடுப்பான தோற்றத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.

இஸ்கான் கோவில்களில் இருப்பது போல் சலவைக்கல் தரை, அழகிய, அலங்கரிக்கப்பட்ட விக்கிரகங்கள் என்று பொலிவான தோற்றம்.

முக்கிய சந்நிதியான ராதா கோவிந்தர்  விக்கிரகங்களுக்கு இடப்புறம் பூரி ஜகந்நாதர் கோயிலில் உள்ளது போல் பலராமர், சுபத்ரா, பூரி ஜகந்நாதர் விக்கிரகங்களும், வலது புறம்

வெளிப்புறத் தோற்றம்


நித்யானந்த பிரபு, சைதன்ய மகாபிரபு  ஆகிய கௌடிய வைஷ்ணவ ஆச்சார்யர்களின் விக்கிரகங்களும் உள்ளன.

பிரகாரத்தில் ராமர், லக்ஷ்மணர், சீதை, ஆஞ்சநேயர் விக்கிரகங்களும், நுழைவாயில் அருகில்  கருடன் விக்கிரகமும் உள்ளன.


கருடன் 
நித்யானந்தா பிரபு, சைதன்ய மகாபிரபு, கிருஷ்ணர், ராதை
கிருஷ்ணர், ராதை, பலராமர், சுபத்ரா, ஜகந்நாதர் 
நித்யானந்தா பிரபு, சைதன்ய மகாபிரபு, கிருஷ்ணர், ராதைஹனுமான், லக்ஷ்மணர், ராமர், சீதை 
ஹனுமான், லக்ஷ்மணர் 


ஹனுமான், லக்ஷ்மணர், ராமர் 


ஹனுமான், லக்ஷ்மணர், ராமர், சீதை

வெளிப்புறத் தோற்றம்வெளிப்புறத் தோற்றம் 


இஸ்கான் கோயிலின் சுற்றுப்புறத் தோற்றம் 
லக்ஷ்மன் ஜூலா 
மூன்று கோவில்களையும் தரிசித்த பிறகு லக்ஷ்மண் ஜூலாவுக்குச் சென்றோம். கங்கை நதியின் மீது நிறுவப்பட்டிருக்கும் புகழ் பெற்ற இந்தத் தொங்கு பாலம் ஆரம்பத்தில் ஒரு கயிற்றுப் பாலமாக இருந்தது. இப்போது இரும்புக் கம்பிகளால் வலுவாகக் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் மீது பாதுகாப்பாக நடப்பதற்கு உதவும் வகையில் இரும்புத் தகடுகள் போடப்பட்டுள்ளன. குறுகலான பாலத்தில் பலர் நடந்து செல்வதுடன் இரு திசைகளிலும் இரு சக்கர வாகனங்களும் செல்வதால் தள்ளுமுள்ளுகளுக்கிடையேதான் பாலத்தில் நடக்க வேண்டும்!

லக்ஷ்மன் ஜூலாவின் மீது நடக்கும் மக்கள் 
லக்ஷ்மான் ஜூலாவுக்குச் செல்லும் வழி லக்ஷ்மண்  ஜூலாவின் மேல் நடந்து செல்லும் மக்கள்

பாலத்தின் மீது நடக்கும் மனிதர்

லக்ஷ்மன் ஜூலாவுக்குக் கீழ் கங்கை 
லக்ஷ்மன் ஜூலா அருகே கங்கையின் தோற்றம் 
 

பாலத்தில் நடக்கும் திரு R,சம்பத் 
பாலத்தில் செல்லும் ஸ்கூட்டர் 


பாலத்தைத் தாங்கும் கயிறு 
மேலே தொங்கும் கயிறும் கீழே ஓடும் கங்கையும் 


ராம் ஜூலா 
லக்ஷ்மன் ஜூலாவைக் கடந்ததும் சற்றுத் தூரம் நடந்து, பிறகு ஜீப்பில் சிறிது தூரம் சென்று ராம் ஜூலா என்ற அதே போன்ற இன்னொரு பாலத்துக்கருகே வந்தோம். இந்தப் பாலம் லக்ஷ்மண் ஜூலா போன்ற அமைப்பில் பிற்காலத்தில் அரசாங்கத்தால் கட்டப்பட்டது என்று எங்கள் சுற்றுலா அமைப்பாளர் தெரிவித்தார்.

ராம் ஜூலா அருகில் இருக்கும் படகுத் துறையில் படகில் ஏறி ஆற்றின் மறுகரை வந்து லக்ஷ்மன் ஜூலா அருகே இறங்கி கொண்டோம். பிறகு அங்கிருந்த நாங்கள் பயணம் செய்த ஆட்டோக்களில் ஏறி விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

லக்ஷ்மண் ஜூலா, ராம் ஜூலா  ஆகிய இடங்களிலும், அவற்றுக்கு அருகிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைக் கீழே காணலாம்.

லக்ஷ்மண் ஜூலாவைக் கடந்த பின் 
லக்ஷ்மண் ஜூலாவைக் கடந்த பின்

ராம் ஜூலா அருகே 
சத்ருக்னன் கோவில் பற்றிய விவரம் 


ராம் ஜூலா அருகே 

ராம் ஜூலா 
பிற்பகலில் பத்ரிநாத் செல்வதற்கான பாஸ் வாங்கிக் கொண்டோம். மலைச்சரிவு போன்ற விபத்துக்கள் நேர்ந்தால், அதில் சிக்கிக்கொண்டவர்கள் யார் என்ற விவரம் தெரியாமல் போவதால், பத்ரிநாத் செல்பவர்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் காட்ட்டி இந்த அனுமதி அட்டையை வாங்கிக்  கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு. ஆயினும், பத்ரியில் யாரும் எங்களிடம் பாஸ் கேட்கவில்லை!

1992ஆம் ஆண்டு ரிஷிகேஷுக்கு வந்திருக்கிறேன். தில்லியிலிருந்து பஸ்ஸில் வந்து பொழுது விடியும் சமயத்தில் லக்ஷ்மன் ஜூலா அருகில் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது ஒரு புதிய உலகத்துக்கு வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அன்று நான் அனுபவித்த பசுமை, அழகு, அமைதி, தூய்மை எல்லாம் கலந்த ஒரு தோற்றம் இப்போதும் என் மனதில் நிற்கிறது.

ரிஷிகேஷ் சாலையில் நடக்கும் அடியேன்!
ஆனால் இப்போது நான் பார்த்த ரிஷிகேஷ் அழுக்கும், சத்தமும், வேகமும் மிகுந்த ஒரு நகரமாக மாறி விட்டது. ரிஷிகேஷின் பசுமையையும், தூய்மையையும், அமைதியையும் மீண்டும் கொண்டு வர, ரைப்ய முனிவரைப் போல் வேறு யாராவது தவம் செய்தால்தான் உண்டு. ஆனால் தவம் செய்ய அமைதியான ஒரு இடம் இன்றைய ரிஷிகேஷில் இருக்கிறதா என்று தெரியவில்லை!.
No comments:

Post a Comment