Wednesday, May 16, 2018

31. பத்ரிநாத் யாத்திரை 7 - ஹரித்வார் ஆரத்தி

பத்ரிநாத் யாத்திரையின் ஐந்தாம் நாளான 5.5.18 சனிக்கிழமை காலை அலகனந்தா நதிக்கரையில், மறைந்த முன்னோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பிண்டம் வைத்து சிராத்தம் செய்த பின் பத்ரிநாத்திலிருந்து கிளம்பினோம்.

ஹனுமான் சட்டி
பத்ரிநாத்திலிருந்து ரிஷிகேஷ் செல்லும் சாலையில் பத்ரிநாத்திலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில், சாலையோரத்தில் ஹனுமான்  சட்டி என்ற சிறிய ஆலயம் அமைந்துள்ளது.

பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது, ஒருமுறை பீமன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு குரங்கு தன் வாலை சாலையின் குறுக்கே நீட்டியபடி அமர்ந்திருந்தது.

மிருகங்களின் வாலை மிதிக்கவோ தாண்டவோ கூடாது என்ற விதி இருப்பதால், பீமன் அந்தக் குரங்கை அதன் வாலை  மடக்கிக் கொள்ளச் சொன்னான். ஆனால் அந்தக் குரங்கு, "நீயே என் வாலை  நகர்த்தி வைத்து விட்டு நடந்து செல்" என்று கூறி விட்டது.

பீமன் எவ்வளவோ முயன்றும் அவனால் குரங்கின் வாலை அசைக்க முடியவில்லை. பிறகு ஒரு சாதாரணக் குரங்கு போல் அங்கே அமர்ந்திருந்த ஹனுமான் தான் யார் என்பதை பீமனுக்கு காட்டி, தான் பீமனுடைய மூத்த சகோதரன் என்பதையும் உணர்த்தினார். (இருவரும் வாயுவின் புதல்வர்கள்.) அதன் பிறகு பீமன் ஹநுமானை வணங்கி அவரிடம் ஆசி பெற்றுச் சென்றான்.

இந்தப் புராணக் கதை இந்த இடத்தில்தான் நிகழ்ந்தது என்று  சொல்லப்படுகிறது.

இது ஒரு மிகச் சிறிய கோவில் என்றாலும், மிகவும் புகழ் பெற்ற கோவில். இங்கு நிறைய யாத்ரீகர்கள் வந்து போகிறார்கள்.

ஹனுமான் சட்டியில் இறங்கி, ஹநுமானை வணங்கி விட்டு, எங்கள் பயணத்தைக் தொடர்ந்தோம்.

தாரிணி தேவி ஆலயம்
வழியில் நாங்கள் பார்த்த இன்னொரு கோவில் தாரிணி தேவி ஆலயம். அலகானந்தா ஆற்றுக்குள் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் தாரிணி தேவியின் தலை மட்டும்தான் நீர் மட்டத்துக்கு மேலே இருக்கும். இவர் கேதார்நாத்தில் உள்ள சிவபெருமானைப் பார்த்தபடி உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோவிலை உயர்த்திக் கட்ட முயன்ற சமயம் பெரும் வெள்ளம் வந்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இந்தக் கோவிலை நாங்கள் பஸ்ஸிலிருந்தபடியே தரிசித்து விட்டு எங்கள் பயணத்தைக் தொடர்ந்தோம். நேரமின்மையால் கீழே இறங்கிப் பார்க்கவில்லை.

விருத்த பத்ரி 

ஜோஷிமத் தாண்டி 7 கிலோமீட்டர் பயணம் செய்தால் அனிமத் என்ற ஊரில் விருத்த பத்ரி ஆலயம் உள்ளது.

சாலையிலிருந்து மலைச் சரிவில் இறங்கி சுமார் 1 கிலோமீட்டர் ஏற்ற இறக்கமான மலைச் சாலையில் நடந்துதான் இந்தக் கோவிலை அடைய வேண்டும்.

திரும்ப வரும்போது, மேலே ஏறாமல், இன்னும் சற்றுக் கீழே இறங்கி முக்கிய சாலையை அடையலாம்..


இங்கே நாரதர் தவம் செய்தபோது, விஷ்ணு ஒரு முதியவராக அவர் முன்
தோன்றியதால் இந்த இடம் விருத்த பத்ரி என்று அழைக்கப்படுகிறது.

முதலில் பத்ரிநாத் விக்கிரகம் இங்கேதான் இருந்ததாகவும், கலியுகத்தில்தான் பத்ரிநாராயணனே விரும்பி இங்கிருந்து சென்று,பத்ரிநாத்தில் உள்ள நாரத குண்ட் என்ற குளத்துக்குள் அமிழ்ந்திருந்ததாகவும், ஆதிசங்கரர் அந்த விக்கிரகத்தைத் தேடி எடுத்து பத்ரியில் பிரதிஷ்டை செய்ததாகவும் இங்குள்ள அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருத்தபத்ரி ஆலயத்தின் அருகில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே.

விருத்தபத்ரி ஆலயம் பற்றிய ஒரு வீடியோ

மீண்டும் பிபல்கோடி!
மாலை சுமார் 4 மணிக்கு பிபல் கோடி வந்தடைந்தோம். அங்கே போகும்போது தங்கிய அதே விடுதியில் இரவைக் கழித்தோம். பிபல்கோடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 

ஆதிபத்ரி 
மறுநாள், எங்கள் யாத்திரையின் 7ஆம் நாள், 7.5.18 ஞாயிறு அன்று காலை ஆதிபத்ரிக்குச் சென்றோம். ரிஷிகேஷ் செல்லும் சாலையில் கர்ணப்ரயாக் வந்து. அங்கிருந்து ஆதிபத்ரி செல்லும் சாலையில் திரும்பி 18 கிலோமீட்டர்  செல்ல வேண்டும்.சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் கொண்ட ஆதிபத்ரி கோவிலில் முக்கிய சந்நிதி விஷ்ணு சந்நிதி. இவர்தான் ஆதிபத்ரி. குளிர்காலத்தில் பத்ரிநாத் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து ஆதிபத்ரியை தரிசனம் செய்து கொள்வார்கள்.

ஆதிபத்ரி ஆலயத்தில் விஷ்ணு, கருடன், லக்ஷ்மி நாராயணர், ராமர்-சீதை-லக்ஷ்மணர், சத்யநாராயணர், சக்ரபாணி, ஹனுமான், சிவன், அன்னபூரணி, காளி, கணேஷ், கௌரிசங்கர்   ஆகியோருக்குத் தனித் தனியே சிறு கோவில்கள் உள்ளன. கல்லில் செதுக்கப்பட்ட அழகான கோவில்கள்.
ஆதிபத்ரி கோவிலின் அமைப்பை இந்த வீடியோவில் காணலாம்.


மீண்டும் ரிஷிகேஷ்!
மாலை ரிஷிகேஷ் வந்து விடுதியில் தங்கினோம். மாலையில் ரிஷிகேஷில் உள்ள திரிவேணி கட் என்ற கங்கையின் குளியல் துறையில் நடந்த ஆரத்தியைக் கண்டு களித்தோம். ரிஷிகேஷ் ஆரத்தியை இந்த வீடியோவில் காணலாம்.
ஹரித்வார் 
ரிஷிகேஷில் இரவைக் கழித்து விட்டு மறுநாள் (7.5.18 திங்கட்கிழமை) மாலை ஹரித்வார் சென்று ஹரித்வார் ஆரத்தியைக் கண்டு களித்தோம்.

ஹரித்வாரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், ஹரித்வார் ஆரத்தி வீடியோக்களையும் கீழே காணலாம்..

ஹரித்வார் ஆரத்தியை தரிசித்து எங்கள் யாத்திரையை முடித்துக்கொண்டு, இரவு தில்லிக்கு கிளாம்பினோம்.

ஒரு நிகழ்ச்சி மங்களமாக முடிந்த பிறகு ஆரத்தி எடுப்பது வழக்கம்.
எங்கள் பத்ரிநாத் யாத்திரை ஆரத்தியில் முடிந்தது பொருத்தம்தான்!

பத்ரிநாத் யாத்திரைக்கு கட்டுரைகளை படித்த அனைவருக்கும் நன்றி. நல்வாழ்த்துக்கள்! 


 


No comments:

Post a Comment