Saturday, May 12, 2018

27. பத்ரிநாத் யாத்திரை 3 - தேவப்பிரயாகை

 1.5.18 அன்று தில்லியில் துவங்கிய எங்கள் யாத்திரையின் இரண்டாம் நாளான 2.5.18 அன்று ரிஷிகேஷில் பல இடங்களைப் பார்த்தபின், மூன்றாம் நாள் (3.5.18) அதிகாலை தேவப்பிரயாகைக்குக் கிளம்பினோம். ரிஷிகேஷிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவப்பிரயாகைக்கு சுமார் 9 மணிக்கு வந்து சேர்ந்தோம். இந்த இடம் கடல்மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

கங்கோத்ரியில் உற்பத்தியாகும் பாகீரதியும், பத்ரிநாத்தில் உற்பத்தியாகும் அலகானந்தா என்ற இரண்டு நதிகள் இணைந்து கங்கையாக உருவாவது  தேவப் பிரயாகை என்ற இந்த ரம்மியமான இடத்தில்தான்.

சாலையிலிருந்து பார்க்கும்போது நதிகள் மிகவும் கீழே ஓடுவதைப் பார்க்க முடியும். பல படிகள் இறங்கியும், சரிவான பாதையில் நடந்தும்தான் இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தை அடைய வேண்டும்.

குறுகலான பாதைகளில் நடந்து வந்து நீராடும் படித்துறையை அடையும்போது, கோவில் வாயிலிருந்து நடந்து வந்து  கர்ப்பக்கிரகத்துக்கு அருகில் வந்து இறைவனைத் தரிசிக்கும்போது கிடைக்கும் பரவசத்தைப் போன்ற பரவச உணர்வை ஏற்படுத்தியது இந்த சங்கமம்.

இரு நதிகளிலிருந்தும் இரு வண்ணங்களில் வரும் நீர்ப்பிபிரவாகங்கள் ஒன்று கலந்து ஒரே நீரோட்டமாக, கங்கை என்ற பெயர் பெற்று ஓடுவது ஒரு அற்புதமான காட்சி.

வெளிர் நிற ஆடை அணிந்து,மகளைப் பார்க்க ஆவலுடன் ஒடி வரும் தாய் போல் வேகமாக ஒடி வரும் அலகானந்தா,  பச்சை நிற ஆடை அணிந்து தாயைப் பார்க்க ஒடி வரும் குழந்தை போல் சற்றே  மெதுவாக ஒடி வரும் பாகீரதி, பிறகு இருவரும் இணைந்து ஒருவராகப் பயணிப்பது போல் செல்லும் கங்கை!

அங்கேயே நின்றபடி எத்தனை காலம் வேண்டுமானாலும் இந்த அற்புதக் காட்சியைப் பார்த்தபடியே நின்று கொண்டிருக்கலாம்!

சங்கமத்தில் நீராடுவதும் ஒரு பரவசமான அனுபவம்தான். சங்கிலியைப் பிடித்துக்கொண்டு படிக்கட்டில் அமர்ந்தபடிதான் நீராட வேண்டும்.

சங்கமத்தில் நீராடியபின் நதிக்கரையில் குன்றின் மீது இருக்கும் ரகுநாத்ஜி மந்திர் என்று அழைக்கப்படும் நீலமேகப் பெருமாள் கோவிலில் சென்று தரிசனம் செய்தோம். இங்கு ராமர் தவம் செய்ததால் இது ரகுநாத்ஜி மந்திர் என்று அழைக்கப்படுகிறது. இது கண்டம் என்றும் கடிநகர் என்றும் அழைக்கப்படும் திவ்ய தேசமாகும்.










தரிசனம் முடிந்தபின், பஸ்ஸில் பத்ரி நோக்கிய எங்கள் பயணத்தைக் தொடர்ந்தோம். மாலை சுமார் ஐந்து மணிக்கு பிபல்கோடி என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தோம். எங்கள் மூன்றாம் நாள் பயணம் இத்துடன் முடிந்தது. பிபல் கோடியில் விடுதியில் தங்கினோம்.




No comments:

Post a Comment