Saturday, March 3, 2018

20. கேரள யாத்திரை - 3

23.01.18 - மூன்றாம் நாள்
குருவாயூரிலிருந்து அதிகாலை கிளம்பி கொடுங்காளுரில் உள்ள  உள்ள திருவஞ்சிக்குளம் சிவாலயத்துக்குச் சென்றோம். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தலம் இது. பாடல் பெற்ற சிவனாலயங்கள் 276இல் கேரளத்தில் உள்ள ஒரே தலம் இதுதான்.

லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் சந்நிதி தவிர, சங்கரநாராயணர், பார்வதி, ராமர், கோசாலகிருஷ்ணன், கிராதமூர்த்தி, வடக்குநாதர், சாஸ்தா, கணபதி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. ஆதிசங்கரர், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

இங்கிருந்து கொடுங்காளூர் பகவதி கோவிலுக்குச் சென்றோம். ருத்ர பகவதி, சாந்த பகவதி என்று இரண்டு பகவதி விக்கிரகங்கள் இங்கே இருக்கின்றன. இந்தக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. ஆயினும் தரிசனத்துக்கு வருபவர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பும் முறை இல்லாததாலும், பக்தர்களின் முண்டியடித்துச் செல்லும் நடைமுறையாலும் தள்ளுமுள்ளுதான் அதிகம். கேரளாவில் உள்ள பல கோவில்களில் இந்த நிலைமைதான்!

கேரளாவில் பரசுராமர் 36 பகவதி கோவில்களை நிறுவியிருப்பதாகவும் , எல்லாக் கோயில்களிலும் ஆதிசங்கரர் யந்திரங்களை பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் எங்கள் வழிகாட்டி ரமேஷ் கூறினார். யந்திரங்களால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்தக்  கோவில்களுக்கு பக்தர்கள்  அதிகம் வருவதாகவும் அவர் கூறினார்.

அடுத்து நாங்கள் சென்றது ஆதிசங்கரர் பிறந்த இடமான காலடிக்கு. இந்த மகான் பிறந்த இல்லம்  ஆதிசங்கரர் ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு நினைவிடமாக சிருங்கேரி மடத்தால் உருவாக்கப் பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

உள்ளே  வைஷ்ணவி, பிரம்மி, சாமுண்டி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இவர்களின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புப் பலகைகள் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சங்கரரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக சுவரில் வரையப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்கள், அவற்றின் வழிமுறைகள் பற்றிய ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குப் பின்புறமாக பூர்ணா நதி ஓடுகிறது. இந்த நதி முதலில் சூர்ணா நதி என்ற பெயரில் சற்றுத் தொலைவில் ஓடிக்கொண்டிருந்ததாகவும், ஆதிசங்கரர் இந்த நதியைத் தம் இல்லத்துக்கு அருகில் ஓடும்படி செய்ததாகவும் அதன் பிறகு இந்த நதி பூர்ணா நதி என்று அழைக்கப்பட்டதாகவும் எங்கள் வழிகாட்டி ரமேஷ் கூறினார்.

பூர்ணா நதிக்கருகே ஆதிசங்கரரின் பிருந்தாவனம் உள்ளது.ஆதிசங்கரரின் குடும்பத்தின் குலதெய்வமான கிருஷ்ணர் கோவிலும்  அருகில் இருக்கிறது.

நுழைவாயில் 


சங்கரர் வாழ்க்கையைக் குறிக்கும் ஓவியம் 
சங்கரர் வாழ்க்கையைக் குறிக்கும் ஓவியம் 


நந்தவனம் 
பூர்ணா நதி 


பூர்ணா நதி
பூர்ணா நதி


கிருஷ்ணர் கோவில் 
கிருஷ்ணர் கோவில் 




மாலையில் திருமூழிக்களம், திருக்காட்கரை ஆகிய திவ்யதேசங்களுக்குச் சென்று தரிசனம் செய்தபின் சோ ட்டானிக்கராவில் இரவு தங்கினோம்.

(அடுத்த பகுதியுடன்  இந்தக் கட்டுரை நிறைவு பெறும்.)


No comments:

Post a Comment