Saturday, March 17, 2018

24. நீ ரொம்ப அழகா இருக்கே!

ஒரு பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அழகா இருக்கே!' என்று அவளுடைய காதலனோ அல்லது கணவனோதான் (அதுவும் தனிமையில்தான்) சொல்ல முடியும் என்பது நமது பண்பாடு.( காதலர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த மந்திரச் சொற்களைக் கணவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்பது வேறு விஷயம்!)

இது போன்ற வாக்கியத்தை இரண்டு பெரிய மனிதர்கள் சமீபத்தில் பயன்படுத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற 23 வயதுப் பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் உணர்ச்சி அலைகளை எழுப்பியது.

பெண்கள் தினத்தன்று சில பெண்களை கௌரவிக்க நடந்த ஒரு விழாவில் பேசிய ஒரு முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி "நிர்பயாவின் அம்மாவின் உடலமைப்பு நன்றாக அமைந்துள்ளதைப் (good physique) பார்க்கும்போது நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருப்பாள் என்று என்னால் ஊகிக்க முடிகிறது" என்று கூறியிருக்கிறார். இந்தப் பேச்சை ரசிக்க முடியாமல் விழாவுக்கு வந்திருந்த சில விருந்தினர்கள் வெளியேறியிருக்கிறார்கள்.

ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் "நான் அவரைப் பாராட்டினேன். இதில் என்ன தவறு?" என்று தன் பேச்சை நியாயப்படுத்தி இருக்கிறார் இவர் . "பெண்களுக்கு, குறிப்பாக அழகான பெண்களுக்கு ஆபத்து அதிகம் என்பதை வலியுறுத்தவே இப்படிச் சொன்னேன்" என்கிறார் இவர்.

ஒரு சாதாரண மனிதன் ஒரு பெண்ணைப் பார்த்து "நீங்க அழகா இருக்கீங்க" என்று சொன்னால் ஈவ் டீசிங் என்று சொல்லி அவனைக் கைது செய்து விடுவார்கள். பாலியல் தொந்தரவு போன்ற வழக்குகள் கூட அவன் மீது போடப்படலாம். ஆனால் ஒழிவு பெற்ற காவல்துறை இயக்குனர் ஒருவர் இப்படிப் பேசி விட்டுத் தன் பேச்சை நியாயப்படுத்தி இருக்கிறார்.

இவர் பெண்களுக்கு இன்னொரு அறிவுரையையும் வழங்கி இருக்கிறார். "நீங்கள் பலாத்காரம் செய்யப்பட்டால் பணிந்து போய் விடுங்கள். அப்புறம் (எல்லாம் முடிந்த பிறகு?) புகார் கொடுத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இருக்காது" என்பது இவரது அறிவுரை! இதுதான் நடைமுறைக்கு உகந்தது என்று இவர் கருதுகிறார் போலும்! இது  எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதை பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

https://www.vikatan.com/news/india/119378-i-could-imagine-how-beautiful-nirbhaya-is-exdgps-speech-sparks-row.html

தன் பெயர் அடிக்கடி பதித்திரிகைகளில் இடம் பெரும் வகையில் ஏதாவது சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் வழக்கமுடைய தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது அங்கிருந்த ஒரு பெண் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் "உங்க கண்ணாடி அழகா இருக்கு" என்று சொல்லி இருக்கிறார்.

"அதை நான் தினமும்தான் அணிகிறேன். கூட்டத்தில் என்ன நடந்தது?" என்று அந்தச் செய்தியாளர் கேட்டதற்கு, அமைச்சர் "இன்னிக்கு உங்களுக்கு கண்ணாடி அழகா இருக்கு" என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார்.

பெண் ஊடகவியலாளர்கள் மையம் இதற்குக்  கண்டனம் தெரிவித்ததை அடுத்து அமைச்சர் "அரசியல் கேள்விகளைத் தவிர்க்கத்தான் அப்படிச் சொன்னேன்" என்று சொல்லி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

https://www.vikatan.com/news/coverstory/119374-shocking-reply-from-minister-vijayabaskar-to-women-journalist.html

அரசியல் கேள்விகளைத் தவிர்க்க அமைச்சர் கைப்பிடித்த வழி புதுமையானதுதான். ஆனால் இது போன்ற கருத்துக்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சங்கடத்தை விளைவிக்கக் கூடும் என்பதை அமைச்சர் ஏன் உணரவில்லை?

திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி அமைச்சர் விஜயபாஸ்கரைக் கடுமையாக விமரிசனம் செய்து வருகிறார். அடுத்த முறை விஜயபாஸ்கர் அவர்கள் ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கும்போது "ஸ்டாலின்  அண்ணே! உங்களுக்கு கூலிங் கிளாஸ்ரொம்ப அழகா இருக்கு!" என்று சொல்லிப் பார்க்கலாம்.

இதைக் கேட்டு ஸ்டாலின் அவர்கள் வாயடைத்துப் போய் விஜயபாஸ்கர் அவர்களை விமரிசனம் செய்வதை நிறுத்தி விடக்  கூடும்!

1 comment:

  1. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in

    ReplyDelete