Sunday, March 4, 2018

21. கேரள யாத்திரை - 4

24.01.18 - நான்காம் நாள் 
நான்காம் நாளான இன்று சோட்டாணிக்கரா பகவதி அம்மானின் அதிகாலை தரிசனத்துடன் தொடங்கியது. பெரிய கோவிலான இதில் மேலக்காவு பகவதி கீழக்காவு பகவதி என்று இரண்டு சந்நிதிகள் உள்ளன. மேலக்காவு பகவதி காலையில் சாஸ்வதியாகவும்,மதியத்தில் மகாலக்ஷ்மியாகவும்,இரவில் துர்க்கையாகவும் விளங்குவதாக ஐதீகம்.

தரைமட்டத்துக்குக் கீழே உள்ள கீழக்காவு பகவதி பத்ரகாளி அல்லது மஹாகாளியாக உக்ர வடிவில் இருக்கிறார். (கொடுங்காளூர் பகவதி கோவிலிலும் இது போல் ருத்ர பகவதி, சாந்த பகவதி என்று இரண்டு பகவாதிகள் இருப்பதுடன் இதை ஒப்பிடலாம்.) இங்கே கீழக்காவு பகவதியை தரிசிக்கப் பல படிகள் கீழே இறங்கிச் சென்றபோது, காடாம்புழா பகவதியை தரிசிக்கவும் கீழே இறங்கிச் சென்றது நினைவுக்கு வந்தது.

சக்தி தரிசனத்துக்குப் பின் சிவ தரிசனம்.இன்று முற்பகலில் வைக்கம் மகாதேவர் கோவில், காடந்தேத்தி, ஏத்தமானூர் மற்றும் கடப்பத்தூர் சிவன் கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தோம்.

வைக்கம், காடந்தேத்தி, ஏத்தமானூர் கோவில்கள் பற்றி எங்கள் வழிகாட்டி தஞ்சாவூர் ரமேஷ் அவர்களின் விளக்க உரையை இந்த வீடியோவில் காணலாம்


கேரளாவில் உள்ள எல்லா சிவன், பகவதி கோவில்களும் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்று ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் மீனாட்சி நதிக்கரையில் அமைந்துள்ள கடப்பத்தூர் சிவன் கோவில் மட்டும் பரசுராமர் காலத்துக்கு முன்பே உருவாக்கப்பட்டது என்று நம்பப் படுகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உண்டு.

கௌதமர் என்ற முனிவர் (கௌதமர் என்ற பெயரில் பலமுனிவர்கள் இருந்திருக்கிறார்கள்.) தன் தவத்துக்கு இடையூறு செய்த ஒரு பசுவின் மீது ஒரு புல்லைத் தூக்கி எறிந்தார். அவரது தவவலிமையால் அந்தப் புல் நெருப்பாக மாறிப் பசுவை மாய்த்து விட்டது.

தன் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்கான வழி பற்றி அவர் இன்னொரு முனிவருடன் ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, பசுவாக வந்த காமதேனுவும் முனிவரின் தவத்துக்குத் தான் இடையூறு செய்ததற்குப் பிராயச் சித்தம் செய்ய விரும்பி அவர்களுடன் சேர்ந்து கொண்டது.

இவர்கள் மூவரும் விச்வாமித்திரரிடம் ஆலோசனை கேட்க, அவரும் இவர்கள் மூவரும் சேர்ந்து தவம் செய்வதற்கேற்ற இடம் தேடி உலகெங்கும் சுற்றி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே இந்த ஆலயத்தை நிர்மாணித்தார் என்பது வரலாறு.

சக்தி, சிவ தரிசனத்தைத் தொடர்ந்து மாலையில் விஷ்ணு தரிசனம். பெருமாள் அற்புத நாராயணனாக சேவை சாதிக்கும் திருக்கடித்தானம், கோலப்பிரானாகக் காட்சி தரும் திருவல்ல வாழ் (திருவல்லா) ஆகிய திவ்யதேசங்களை தரிசனம் செய்த பின் இரவு பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள ஆறன்முளா என்று அழைக்கப்படும் திருவாறன்விளையில்  தங்கினோம். கோவில் நடை சாற்றுவதற்கு முன்பு திருவாறன்விளை பார்த்தசாரதிப் பெருமாளின் சந்தனக்காப்பு தரிசனமும் கிடைத்தது.

25.01.18. - ஐந்தாம் நாள் 
இன்று காலை திருவாறன்விளை  பார்த்தசாரதிப் பெருமாளின் விஸ்வரூப  தரிசனத்துடன் தொடங்கியது. பிறகு திருச்செங்கண்ணூர்  (இமயவரப்பன்), திருப்புலியூர் (மாயப்பிரான்), திருவண்வண்டூர் (பாம்பணையப்பன்)ஆகிய திவ்யதேசங்களை தரிசித்த பின் திருவனந்தபுரம் விரைந்தோம்.

மாலையில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபரை தரிசனம் செய்து விட்டுத் திருவனந்தபுரத்தில் தங்கினோம்.

26.01.18 - ஆறாம் நாள் 
அதிகாலையில் திருவனந்தபுரத்திலிருந்து கிளம்பி தமிழ்நாட்டில் மார்த்தாண்டம் அருகே உள்ள திருவட்டாறு திவ்யதேசத்துக்குச் சென்று ஆதிகேசவப் பெருமாளை தரிசித்தோம். இத்துடன் இந்த யாத்திரை இனிதாக முடிந்தது. 

No comments:

Post a Comment