Saturday, March 10, 2018

22. மறுபக்கம்!


எல்லா விஷயங்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பல சம்பவங்களிலும் மறுபக்கத்தைப்  பார்க்கும் ஒரு (வேண்டாத!) பழக்கம் என்னிடம் உண்டு.

'The early bird catches the worm' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் '(காலையில்) சீக்கிரம் கிளம்பும் பறவைதான் புழுவைப் பிடிக்கும்' என்பது. காலையில் சீக்கிரம் எழுந்து பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகச் சொல்லப்படும் பழமொழி இது. இந்தப் பழமொழியைக் கேட்டபோது ஒருமுறை எனக்கு 'The worm was caught because it was an early worm.' என்ற மறுமொழி தோன்றியது! புழு காலையில் சீக்கிரமே எழுந்து வெளியே கிளம்பியதால்தானே அது பிடிபட்டது?

தர்க்க ரீதியாக இது சரியில்லை என்பது வேறு விஷயம்.ஏனெனில் தாமதமாக எழுந்து வெளிக் கிளம்பினாலும் புழு  ஏதாவது ஒரு பறவைக்கு இரையாக நேரிடும். புழுக்கள் பறவைகளுக்கு இரையாக வேண்டும் என்ற நியதி நிலவும் உலகில் புழுக்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை! தாமதமாகக் கிளம்பினால்  இன்னும் சற்று நேரம் உயிருடன் இருக்கலாம்! ஆயினும் மிகச் சிறிய ஆயட்காலமே உள்ள ஒரு புழுவுக்கு சில மணி நேரங்கள் அதிகம் வாழ்வது பெரிய விஷயமாக இருக்கலாம்!

இதுபோன்ற சிந்தனைகளைக் குதர்க்கம் என்று சிலர் கருதலாம். அவர்களுடன் நான் தர்க்கம் செய்யப் போவதில்லை!

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சாலையைக் கடக்கும்போது பேருந்து ஒன்றினால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்த என்னால் அந்தப் பேருந்தை ஒட்டியவரைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. விபத்து நேர்ந்தது அவரது கவனக்குறைவாலோ, அலட்சியத்தாலோ, திமிரினாலோ கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டுத்தானே இருக்கிறார்?

ஒருவேளை விபத்து நடந்ததற்கு அவர் காரணம் இல்லை என்றால் அவர் தவறு செய்யாமலே தண்டனை பெற்றவர் ஆகிறார். தண்டனை என்று இங்கே நான் சட்ட ரீதியாக அவருக்கு கிடைக்கக்கூடிய தண்டனையைக்  குறிப்பிடவில்லை. அவர் தண்டனை பெறலாம் அல்லது அவர் மீது தவறு இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்படலாம். ஆனால் இன்னும் சிறிது காலத்துக்கு அவர் அனுபவிக்கப் போகும் உடல் மற்றும் மனரீதியான துன்பங்களை நினைக்கும்போது அவர் மீதும்  நாம் பரிதாபப்பட வேண்டும் அல்லவா?

அவர் தவறு செய்திருந்தாலும், செய்யவில்லை என்றாலும் அவர் குடும்பத்தை எண்ணிப் பாருங்கள்.அப்பா வீட்டுக்கு வருவார் என்று எண்ணிக் காத்திருந்த அவர் குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

இந்த உதாரணத்தை விரிவாக்கிப் பார்க்கும்போது கொலை போன்ற கொடிய குற்றங்களை செய்ததாகக் கைது செய்யப்படும் நபர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படத்தான் செய்கின்றனர்.

ஒருவர் பாலியல் குற்றத்துக்காகக் கைது செய்யப்படும்போது அவர் குடும்பத்தினருக்கு ஏற்படும் அவமானம், துன்பம் ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள்.

ஒரு தவறு நடக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் ஒருபுற ம். இவர்களுடன் நாம் மனதளவில் நெருங்கி இவர்கள் துன்பத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆனால் தவறுக்குக் காரணமானவர்கள் என்று கருதபடுபவர்களுக்கு  நெருக்கமானவர்களுக்கு ஏற்படும் சங்கடங்களையும், துன்பங்களை நம்மில் பலர் நினைத்துப் பார்ப்பதில்லை என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் aggressor, victim என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. தாக்கியவர், தாக்குதலுக்கு பலியானவர் என்ற இரு தரப்பினரைக் குறிக்கும் சொற்கள் இவை. ஆனால் aggressor க்கு (தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியதாகக் கருதப்பட்டவருக்கு) நெருக்கமானவர்கள் கூட victim (பலி) ஆகிறார்கள். ஆங்கிலத்தில் இதை  collateral damage என்று சொல்வார்கள்.

ஒருமுறை ஒரு வேலையாக ஒரு காவல் நிலையத்துக்குச் சென்றபோது, அங்கே ஒரு காவலர் சில விசாரணைக் கைதிகளை 'விசாரித்து'க் கொண்டிருந்தார். அப்போது அந்தக் கைதிகளில் ஒருவர் மீது புகார் கொடுத்த ஒருவர் அந்தக் கைதியின் மகனுக்கு சாப்பாட்டுக்காகப் பத்து ரூபாய் கொடுத்ததாகக் காவலரிடம் கூறினார். (இது 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது பத்து ரூபாய்க்குச் சிறிதளவாவது உணவு கிடைத்திருக்கும்)

ஒரு பக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மறுபக்கத்தைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறார் அவர் என்று எனக்குத் தோன்றியது!

No comments:

Post a Comment