Friday, April 10, 2015

8. காலம் கெட்டு விட்டதா?


1980களில் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மொழியை நாம் உபயோகிப்பதில் முன்பு இருந்ததற்கும், அப்போது (80-களில்) இருந்ததற்குமான சில மாற்றங்களை ஒரு நகைச்சுவைக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். உதாரணமாக 'முன்பெல்லாம் வயதில் பெரியவர்களைப் 'பெரியவர்' என்று மரியாதையாகக் குறிப்பிடுவோம். இப்போது 'பெரிசு' என்று சொல்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். மற்ற உதாரணங்கள் எனக்கு நினைவில்லை.

எண்பதுகளில் இந்த மாற்றம் என்றால், இப்போது?

பெரியவர்களிடம் மரியாதை குறைந்து விட்டதா?

இந்தக் கேள்விக்கு விடை காணுமுன், இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

1962-இல் வெளியான 'பாச மலர்' படத்தில் இடம் பெற்ற 'எங்களுக்கும் காலம் வரும்' என்ற பாடலின் பல்லவி இது.

எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால்
அனைவரையும் வாழ வைப்போமே!

என்ன ஒரு பரந்த சிந்தனை! 'எனக்கு வாழ்வு வரும்போது நான் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்' என்ற இந்த உயர்ந்த எண்ணத்தைப் பாடலில் வடித்தவர் கண்ணதாசன்.

எண்பதுகளின் இறுதியில் வெளியான 'படிக்காதவன்' என்ற படத்தில் ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது. தன் தம்பி  பாஸ் செய்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் கதாநாயகன் பாடுகிறான்:
'சொல்லி அடிப்பேனடி!'

இவர் தம்பி பாஸ் செய்ததற்கு இவர் மற்றவர்களை அடிப்பாராம்! எப்படி இருக்கிறது!

இது நச்சயமாக மதிப்பீடுகளின் வீழ்ச்சியைத்தான் காட்டுகிறது.

இப்போது முந்தைய கேள்விக்கு வருவோம். பெரியவரை 'பெரிசு' என்று குறிப்பிடுவது மரியாதையான பழக்கங்கள் தேய்ந்து விட்டதைக் காட்டுகிறதா?

நான் அப்படி நினைக்கவில்லை. வார்த்தைகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் எண்ணங்களிலோ மதிப்பீடுகளிலோ மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கொள்ள முடியாது.

பொதுவாக, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், பேச்சு வழக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னை விட இப்போது இன்னும் சற்று வெளிப்படையாகப் பேசுகிறோம். ஒரு விதத்தில் இது நல்ல மாற்றம் என்று கூடக் கூறலாம்.

மொத்தத்தில் பார்க்கும்போது, கால ஓட்டத்தில் மாறுதல்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாது. சில மாற்றங்கள் வரவேற்கத் தக்கவைதான்.

ஆயினும் மதிப்பீடுகளின் வீழ்ச்சி கவலை அளிக்கக் கூடியது. மதிப்பீடுகள் வீழ்ச்சி அடைந்து விட்டன என்று ஒரு திரைப்படப் பாடலை வைத்துச் சொல்லவில்லை.

பொதுவாக மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மிகவும் குறைந்து விட்டது. கூட்டுக் குடும்பம் போய், இப்போது கணவன், மனைவி, குழந்தை என்று மூவர் இருக்கும் குடும்பங்களிலேயே, சுதந்திரம் என்ற பெயரில், ஒவ்வொருவரும் - குழந்தை உட்பட - தங்கள் தனித்தன்மையை காத்துக் கொள்வதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

காலம் கெட்டு விட்டது என்ற பொதுவான புலம்பலை நான் ஏற்கவில்லை. ஆனால் நல்ல விஷயங்கள் பல தேய்ந்து வருவது நிச்சயம் வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. என்னென்ன விஷயங்கள் அவை என்று நான் பட்டியல் போட விரும்பவில்லை. உதாரணத்துக்கு ஒன்றிரண்டைக் குறிப்பிட்டேன்.

எந்தெந்த மாற்றங்கள் நமக்கு நன்மை பயப்பவை என்று நாமே சிந்தித்து அவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வர வேண்டும். இது என் விருப்பம்தான். நடைமுறையில் இது நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

No comments:

Post a Comment